உயிரின் தோற்றம் : அணு மரபணுவான கதை !

பெரு வெளியே
பிரபஞ்சம்! – அங்கு
அனைத்து அணுக்களும்
ஆவி மற்றும் தூசு நிலையே! – அதுவே
ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன்
போன்றவை.

அணுவை
ஆக்கவோ, அழிக்கவோ முடியாது!
அணு வளர்ச்சியுராது, நகலெடுக்காது!
தன்னை தானே சீர்செய்யவும் மாட்டாது!

ஆனால்
அணுக்கள் ஒன்றிணைந்து
மூலக்கூறுகளையும்,
மூலக்கூறுகள் ஒன்றிணைந்து
பருப்பொருளையும்
பருப்பொருள்கள் ஒன்றிணைந்து
பிரபஞ்சத்தையும் உண்டுபண்ணும்
இவையாவும் நடந்திடுமே
இயற்வேதியியல் கோட்பாட்டிற்குட்பட்டு!

அணு
நிலையில்லாதது! – தொடர்
இயக்கத்திலிருப்பது! – தொடர்ந்து
வினைபுரிவது – விளைவு
விசை உண்டாவது!
அது பெருகி – பெரும் புயலாகி
அணுக்கள் கூட்டம் கூட்டமாக
சுற்றி சுழலுவதே
பால்வெளித் திரள் – வானவெளியிலே!

இப்படி
நாளொரு வண்ணமும்
பொழுதொரு மேனியுமாக
சுழலும் அணுத்திரளின்
மையமே சுட்டெரிக்கும்
சூரியன்! – அது உமிழ்வதே
உயர் ஆற்றல் கொண்ட
கதிர்வீச்சு!
சுழலும் அணுத்திரளின்
புறத்தினின்று சிதறிய சில்களே
புதன், சுக்ரன், பூமி
செவ்வாய், குரு, சனி மற்றும் யூரேனஸ்
போன்ற கோள்கள்!

இவ்வாறு
சூரியனும் – அதிலிருந்து
சிதறுண்ட கோள்களும்
எரிகற்களும், வால்மீன்களும்
கொண்ட கூட்டு குடும்பமே
சூரிய குடும்பமாகும்!

சூரியனுக்கும் அதைச் சுற்றும் கோள்களுக்கும்
உள்ள தூரத்தை பொறுத்தமைவதே
கோள்களின் வெப்பநிலை!
அந்த வெப்பத்தை பொறுத்தமைவதே
கோள்களின் பௌதீக நிலை!
வாயு, திரவ, திட மென்றும்!
வெப்பம், குளிரென்றும்!
மழை, வெயிலென்றும்!
இப்படி உருவானதே
கோளுக்கொரு பருவநிலை
எட்டு கோள்களுக்கும்!

அன்னை பூமி என்பது
இவ்வெட்டில் ஒன்றே!
ஆச்சரியம் என்னவென்றால்
இப்பூமியில் மட்டும்தான்
சாதகங்கள் பலப்பல – உயிர்கள்
தோன்றவும், வளரவும், விருத்தியடையவும்!

படிக்க:
கடவுளை நொறுக்கிய துகள்!
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !

உயிரென்றால் என்ன?
பருபொருள் உயிர் கொண்டதெப்படி?
உயிரென்றால் இயக்கமா?
ஆறு கூட இயங்குகிறதே!
உயிரென்றால் வளர்ச்சியா?
மலை கூட வளர்கிறதே!
உயிரென்றால் சத்தமிடுவதா?
இடி கூட முழங்குகிறதே!
உயிரென்றால் தன்னை போன்றே
ஒன்றை தருவதா?
பாறை கூட ஒன்று இரண்டாகிறதே!
உயிரென்றால் என்ன?

உயிரை காண முடியுமா?
கண்டால் தொட்டு உணர முடியுமா?
தொட்டால் நுகர முடியுமா?
நுகர்ந்தால் சுவைக்க முடியுமா?
சுவைத்தால் செரிக்க முடியுமா?
உயிரென்றால் என்ன?

உயிரென்பது யாதெனின் – அது
பருப்பொருளின் பண்புத் தொகையே!
அவையாவன
வளர்ச்சியுருதல், நகலெடுத்தல், சீர்செய்தல்!

சிறு செடி வளர்ந்து மரமாகிறது
காய்த்து கனிந்த மரம் விதை மூலம் தன்னை நகலெடுக்கிறது
வெட்டுண்ட கிளைகள் தன்னைத்தானே சீர்செய்து பூத்து சிரிக்கின்றது
எனவே தாவரம் என்ற பருப்பொருளுக்கு உயிருண்டு!

எனவே
உயிரென்பது செயலிலிருப்பது!
உயிரென்பது இயக்கத்திலிருப்பது!

இப்படி
ஓர் அணு ஈரணுவாகவும்
ஈரணு பலவணுவாகவும்
பலவணு மூலக்கூறுகளாகவும்
உருப்பெற்றதே பருப்பொருள்!

பருப்பொருள் தக்க சமயத்தில்
பண்புத்தொகை பெற்று
தரித்ததே மரபணு! – அதுவே
உயிரணு!

மரபணு
அது வளர்ச்சியுறும் – தன்னைத்தானே
நகலெடுக்கும்!
பழுதுப்பட்டால் சீர்செய்யும்!

இதுவே
அணு மரபணுவான கதை!
இதுவே
பருப்பொருள் உயிர்ப்பண்பு பெற்ற கதை!
இதுவே
ஓரணு உயிரணுவான கதை!

முனைவர் கி. ஜெகதீசன், பி.எச்.டி.,
உதவிப் பேராசிரியர்,

விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
மின்னஞ்சல்: jagadeesankrishnan@gmail.com
மாற்று மின்னஞ்சல்: jegadeesan.k@tanuvas.ac.in

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

2 மறுமொழிகள்

  1. ஐந்து நிமிட வாசிப்புக்குள் அற்புதமான அறிவியல் விளக்கக் கவிதை!
    முனைவர்.ஜெகதீசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க