‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என எழுதப்பட்ட பதாகையை பிடித்த காரணத்துக்காக டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்துத்துவ லிபரல் பார்ப்பனர்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். ”சாதி படிநிலையில் மேலே உள்ள பார்ப்பனர்களின் ஆணாதிக்கத்தனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பொருள்படி எழுதப்பட்ட அந்தப் பதாகையின் கருத்தை டிவிட்டரோ அதன் செயல் அதிகாரியோ பிரதிபலிக்கவில்லை என டிவிட்டர் இந்தியாவின் சட்டம் மற்றும் கொள்கை பிரிவு அதிகாரி விஜயா கட்டே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த டிவிட்டரின் தலைமைச் செயலதிகாரி ஜாக் டோர்சே, டிவிட்டர் தளத்தில் வலதுசாரி ட்ரோல்களால் தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்கிய பெண்கள் குழுவை சந்தித்துப் பேசினார். அப்போது, தலித் செயல்பாட்டாளர் ஒருவர் கொடுத்த ‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்ற பதாகையுடன் டிவிட்டர் செயல் அதிகாரி நின்ற படம் டிவிட்டரில் வெளியானது. அந்த டிவிட்டர் பதிவையொட்டி பிரபலமான லிபரல் பார்ப்பனர்கள் பலர் இது பார்ப்பனர்களுக்கு எதிராக உள்ளதாகவும் இதை எப்படி டிவிட்டர் செயல் அதிகாரி ஆதரிக்கலாம் என்றும் பொரிந்து தள்ளினர்.

இந்து மதம் என்ற அடைப்புக்குள் அனைவரையும் ஒற்றை கலாச்சாரம் மற்றும் அரசியலின் கீழ் அணிதிரட்ட விரும்பும் இந்து தேசியவாதிகள், மேல்சாதியை சேர்ந்தவர்களே டிவிட்டர் செயல் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சித்ரா சுப்ரமணியன் என்ற லிபரல் பார்ப்பன பத்திரிகையாளர், “பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது வன்முறையை தூண்டுவதாக இல்லையா? டிவிட்டர் போன்ற செல்வாக்குமிக்க தளம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என கேட்கிறார்.

முன்னாள் இன்போசிஸ் அதிகாரி டி. வி. மோகன்தாஸ் பை, வலதுசாரி எழுத்தாளர் ராஜுவ் மல்ஹோத்ரா, பார்ப்பன கருத்தாளர் சுமந்த் சி ராமன், முன்னாள் நீதிபதி ’லிபரல் பார்ப்பனர்’ மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் இது பார்ப்பனர்கள் மீதான தாக்குதல் என பாய்ந்திருக்கிறார்கள்.

வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்கள் நான்கைந்து பேரின் டிவிட்டுகள், டிவிட்டர் அதிகாரிகளை மன்னிப்புக் கேட்க வைக்கப் போதுமானதாக இருக்கிறது.  உடனே, டிவிட்டர் இந்தியாவின் அதிகாரியும் மன்னிப்புக் கேட்கிறார்.

“இந்திய சமூகத்தில் வெறும் 3% மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ள பார்ப்பனர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவர்கள் என்பது இந்த விவகாரத்தின் மூலம் வெளிவந்துள்ளது” என முகப்பு செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப் நாளிதழ்.

படிக்க:
♦ லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
♦ நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

பார்ப்பன ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது எப்படி பார்ப்பனர்களுக்கு எதிரானதாக இருக்க முடியும் என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். சித்ரா சுப்ரமணியனின் டிவிட்டுக்கு பத்திரிகையாளர் அனு பூயான், ‘பார்ப்பனர்கள் என்பது பெயர் சொல், பார்ப்பனீயம் என்பது வினைச் சொல். இதை புரியாததுபோல் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் ஆபத்தானது. நீங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கம் இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா?’ என  எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது பார்ப்பனர்களுக்கு எதிரானது என முழங்கிய நான்கைந்து அறிவுஜீவிகளுக்கு எதிராக #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

“தலித்துகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ அது தங்களுக்கு இறுதியில் நேர்ந்துவிடுமோ என்று பார்ப்பன மேலாதிக்கவாதிகள் கவலைப்படுகிறார்கள். அதன் விளைவாகவே இத்தகைய கோபம் உண்டாகிறது”

இந்தியாவின் சாதிய பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை திசைதிருப்ப சாதிய ட்ரோல்கள் செய்யும் இடையூறு இது.

இந்த துணைக் கண்டத்தின் ஆணாதிக்கம் சாதியத்துடன் கட்டப்பட்டது. சாதியத்தை கருத்தியல் கருவியாக இரண்டாயிரம் ஆண்டுகளாக இயக்குவது பார்ப்பன ஆண்களே.

பார்ப்பனராக இருப்பது எப்படி? கல்வியறிவு பெறுங்கள். அம்பேத்கர், தலித் எழுத்தாளர்களை படியுங்கள்.  கொடூரமான மேலாதிக்கத்துடன் பார்ப்பனிய ஆணாதிக்கம் எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனக் கதவுகளை திறந்து பாருங்கள்.

நீங்கள் சாதியை ஒழிக்கும்போது, பார்ப்பனராக இருப்பதை மறுப்பீர்கள். நீங்கள் பார்ப்பனராக இருப்பதை நிறுத்திக் கொண்டால், பார்ப்பனிய ஆணாதிக்கம் என அழைப்பதில் அர்த்தமிருக்காது. இப்போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும்.

‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்கு மன்னிப்பு கேட்பது  ‘வெள்ளை மேலாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்கு மன்னிப்பு கேட்பதைப் போல..

‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்காக மனவருத்தத்துக்கு உள்ளான பார்ப்பனர்களே தயவு செய்து டிவிட்டரை விட்டு வெளியேறுங்கள்.

பார்ப்பனிய ஆணாதிக்கம் எத்தகையது என்பதை பார்ப்பன பெண் உமா சக்ரவர்த்தி எழுதியிருக்கிறார்…படியுங்கள்

பார்ப்பனிய ஆணாதிக்கமே ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை கருத்தியல். சாதியமும் பாலின மேலாதிக்கமும் அதன் மரபணுவில் உள்ளவை. அது பாலின அடிப்படையில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. பெண்களுக்கு வீட்டுப்பணிகளை தருகிறது. அதோடு, ஒருபோதும் தலித் ஒருவர் சர்-சங்-சலாக்காக(ஆர்.எஸ்.எஸ். தலைவராக) முடியாது.

இப்படி டிவிட்டர் முழுவதும் வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்களுக்கு பதிலடி கொடுக்கும் பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ் முகநூல் பக்கத்திலும் #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் எழுதிவருகிறார்கள்.

“பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்” என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்ததற்காக, டிவிட்டர்-ன் தலைமை நிர்வாக இயக்குனரான ஜாக் டோர்செய்-ஐ மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்திய மக்கட்தொகையில் வெறும் 3% மட்டுமே இருக்கும் சிறும்பான்மையினரான பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்த வாசகம் இருப்பதாகவும், ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர் அதனை வைத்திருப்பது உலக சிறும்பான்மையினருக்கே எதிரான ஆதிக்க போக்காக இருக்கிறதென்றும் ஒரு நாள் முழுக்க ட்வீட் செய்து மன்னிப்பு கோர செய்திருக்கிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த மனிதத்தன்மையற்ற குரூர செய்கைகளுக்கு எதிராக , ஆதிக்கத்தின் – பெண்ணடிமைத்தனத்தின் பிறப்பிடமான பார்ப்பனியத்தை எதிர்த்தால், பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்கச் செய்வார்கள் என்றால், அதனை மீண்டும் மீண்டும் எதிர்ப்பது நம் ஒவ்வொருரின் தலையாய கடமையாகும்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்! #SmashBrahminicalPatriarchy என்கிறார் செயல்பாட்டாளர் கிருபா முனுசாமி.

படிக்க:
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
♦ வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

பத்திரிகையாளர் நந்தினி வெள்ளைச்சாமியின் பதிவு இது:

“கடந்த வாரம் டெல்லி வந்திருந்த டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, தலித் செயற்பாட்டாளர் ஒருவர் ‘Smash Brahminical Patriarchy’ என எழுதப்பட்ட பதாகையை ஜாக்கிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு கொதித்துப்போன சங்கிகள், வலது அமைப்பைச் சேர்ந்தவர்கள் டிவிட்டர் மீதும் ஜாக் மீதும் கோபம் கொண்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படி பதிவுகளை வெளியிடுபவர்கள், ”உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களாக” கூறிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘எழுத்தாளர்’ ராஜீவ் மல்ஹோத்ரா, ‘தி நியூஸ் மினிட்’ இணை நிறுவனர் சித்ரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அடக்கம். நம்மூர் ‘சமூக செயற்பாட்டாளர்’ கஸ்தூரி, ‘அரசியல் விமர்சகர்’ சுமந்த் சி.ராமனும் இதில் அடக்கம்.

இது மார்க்கண்டே கட்ஜூவின் கதறல்.. ஊடகவியலாளர் பர்கா தத்தும் அந்த புகைப்படத்தில் இருந்தது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. “அப்படி பண்ணாதீங்க ஜாக்”னு பர்கா தத் ஜாக்கிட்ட சொல்லிருக்கணுமாம்.”

வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு மீதியுள்ள 97 சதவீத மக்களை ஆள்கிறார்கள். இந்த மேலாதிக்கத்தை கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? பார்ப்பன மேலாதிக்கத்தை நொறுக்குவோம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆம். இந்த மேலாதிக்க அமைப்பை நொறுக்கத்தான் வேண்டும்’ என அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் கூறுவதை செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்பதை பலரும் வலியுறுத்துகிறார்கள்.