த்தாலி நாட்டைச் சேர்ந்த ஆடம்பர ஆடை அணிகலன்கள் தயாரிப்பு நிறுவனமான டோல்டே & கபானா, இனவெறி விளம்பரத்துக்காக சீன சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பினை பெற்றுள்ளது.

டோல்சே & கபானா ஏற்பாடு செய்திருந்த ஃபேஷன் ஷோ நவம்பர் 21-ஆம் தேதி சீனாவின் ஷாங்காய் நகரில்  நடைபெற இருந்தது. இதையொட்டி வெளியான விளம்பரத்தில் சீன இளம் பெண் ஒருவர், சீனர்கள் உண்ணப் பயன்படுத்தும் சாப் ஸ்டிக்கை பயன்படுத்தி இத்தாலிய உணவுகளான கனோலி, பாஸ்தா, பீட்சாவை உண்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. விளம்பரத்தின் பின்னணியில் பேசும் ஆண் குரல், அந்தப் பெண்ணிடம், “இது உங்களுக்கு அதிகமில்லையா?” என கேட்கும். இத்தாலியைச் சேர்ந்த இந்த உணவு வகைகள் இன்று உலகம் முழுவதும் உலகமயமாக்கப் பட்டிருக்கின்றன. அத்தகைய மேன்மக்கள் உணவை உள்ளூர் சீனக் குச்சியை வைத்து சாப்பிடுவதை கேலி செய்கிறது இந்த விளம்பரம். இந்த விளம்பரங்கள் சீனர்களை கேவலப்படுத்துவதாக உள்ளதாகவும் இனவெறியுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் எதிர்வினை வந்தது.

அதோடு, டோல்சே & கபானாவின் நிறுவனர்களுள் ஒருவரான ஸ்டிபானோ கபானா இன்ஸ்டாகிராம் வலைத்தள தனி உரையாடலில், இந்த விளம்பரம் குறித்து விமர்சித்த ஒரு பெண்ணை  சீனர்களை நாய்கறி உண்கிற வெறியர்கள் என்றும் ’அறிவில்லாத நாற்றமடிக்கும் சீன மாஃபியா’ என அழைத்தது ஆதாரங்களுடன் வெளியானது. இதனால் வெகுண்டெழுந்த சீனர்கள், சமூக வலைத்தளங்களில் டோல்சே & கபானாவை புறக்கணிக்கும்படி எழுதினர்.

டோல்சே & கபானா நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக இருந்த நடிகர்கள் தங்களுடைய ஒப்பந்ததை ரத்து செய்வதாக அறிவித்தனர். ஆடம்பர பொருட்களை விற்கும் சீன இணையதளங்களிலிருந்து டோல்சே & கபானாவின் பொருட்கள் நீக்கப்பட்டன. ஷாங்காய் நிர்வாகம், இந்நிறுவனம் நடத்த இருந்த ஃபேஷன் ஷோவை ரத்து செய்தது.

கடுமையான நெருக்கடிகளை சந்தித்தபின், டோல்சே & கபானா மேம்போக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மன்னிப்பு கேட்கவில்லை, ஆனால் நாங்கள் சீனர்களை, சீனாவை நேசிக்கிறோம் என இன்ஸ்டாகிராமில் அறிக்கை விட்டார்கள்.

பேஷன் ஷோவில் கலந்துகொள்ள இருந்த சீன – பிரெஞ்சு மாடல் எஸ்தெல் சென், “நீங்கள் சீனாவை நேசிக்கவில்லை. பணத்தைத்தான் நேசிக்கிறீர்கள்” என தனது இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார்.

ஸ்டிபானோ கபானாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் அது அவர் இல்லை எனவும் உலகத்துக்கே தெரிந்த பொய்யை கூறினார்கள். ஆனாலும் எதுவும் பலன் தருவதாக இல்லை. நிலைமை எல்லை மீறிச் சென்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஆடம்பர ஆடை அணிகலன்களுக்கு சீனாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. அந்த வாய்ப்பை டோல்சே & கபானா இழந்துள்ளதாக அவை எழுதுகின்றன.

டோல்சே & கபானா, தங்களுடைய இனவெறி, ஆணாதிக்க கருத்துக்குப் பெயர் போனவர்கள். ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர்கள் மீது சுமத்தப்பட்ட மீ டூ குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டிபானோ கபானா, பாலியல் ஒடுக்குமுறை, வன்முறை ஆகாது என்றார். ஐ.வி.எஃப். என்படும் செயற்கை கருவூட்டல் முறையில் பிறக்கும் குழந்தைகளை ‘செயற்கை குழந்தைகள்’ எனச் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டு பிறகு மன்னிப்புக் கேட்டார். பிரபல ஹாலிவுட் நடிகர்களை உடல் ரீதியாக கேலி செய்து, பின்பு அதற்காகவும் மன்னிப்புக் கேட்டார்.

தொடர்ச்சியாக பிறரை மலினப்படுத்தி மகிழ்வதை முசோலினியின் வாரிசுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இத்தாலி ஆடம்பர இணையர்கள், எது குறித்தும் கவலைப்பட வேண்டிய நிலையில் இல்லை. இவர்கள் பிராண்ட் பெயர் தாங்கி வரும் விற்பனையாகும் ஒரு ஆடையின் விலை 60 ஆயிரம் டாலர்கள்.  ரஷ்ய பில்லியனர்களும், மத்திய கிழக்கு அரச குடும்பத்தினரும்தான் இவர்களுடைய வாடிக்கையாளர்கள்.

படிக்க:
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
வெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் !

அனைவருக்குமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் என்கிற வகையில் சமூக ஊடகத்தில் எழுதுகிறவர்களின் கருத்துக்களை ஒரு கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உள்ளது. டோல்சே & கபானா, சானல் போன்ற ஆடம்பர தயாரிப்பு நிறுவனங்களுக்கு அந்த நிர்பந்தமே இல்லை. அவர்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்:
A Dolce & Gabbana show was canceled after racist online messages leaked