தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உருக்குலைந்து சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது.

லைஞாயிறு அருகில் உள்ள கிராமம் கோவில்பத்து. இங்குதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதில் 2 லட்சம் டன் வரை தானியங்களை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிடங்கான இதன் கட்டுமானச் செலவு 144 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த கிடங்கும் கஜாவிற்கு தப்பவில்லை. சின்னாபின்னமாகிக் கிடக்கும் தானியக் கிடங்கைப் பார்க்கும்போது, இந்த அரசின் ஊழல் முறைகேடுகளே விஸ்வரூபமாகத் தெரிகிறது.

வோடோபோன் செல்பேசி டவர் வயலில் விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது.

மண் தன்மை அறிந்து, இயற்கைச் சூழல் அறிந்து, சிறந்த கட்டுமானத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கட்டப்பட்ட அரசின் கட்டிடத்திற்கே இந்த நிலைமையென்றால், சாதாரண கூலி விவசாயிகளின் வீடுகளைப் பற்றி சொல்லவா வேண்டும்!

அதே கோவில்பத்து கிராமத்தின் ஒரு தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் மண் சுவற்றினாலான ஓலை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்கிரீட் வீடுகளுமே உள்ளன. சில விவசாயிகளே ஒன்றிரண்டு ஏக்கர் நிலபுலங்களை வைத்திருக்கின்றனர். ஏனையோர் அன்றாடக் கூலிகளே. இவர்கள் தலைஞாயிறு, முதலியான்கண்டி, பழையாற்றங்கரை போன்ற ஊர்களுக்குச் (7 / 8 கி.மீ தொலைவில் உள்ளது) சென்று வயல் வேலைகள் செய்து வருகின்றனர். 6 மாதங்கள் மட்டுமே இந்த வேலைகளும் இருக்கும். மற்ற நாட்களில் அருகாமையில் உள்ள மா, முந்திரி, சவுக்கு, தென்னை போன்ற தோப்புகளில் மரம் வெட்டுதல், கீற்று முடைதல், கட்டிட வேலை போன்றவற்றைச் செய்துவருகிறார்கள்.

கஜா புயல் இவர்களது வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. முகாம் அமைத்து சமைத்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, “இந்த வீட்டைப் பாருங்க, அந்த வீட்டைப் பாருங்க” என்று அழைத்துச் சென்றார்கள்.

முத்துக்குமார் :

நாத்து பறிக்க, நடவு நட, களையெடுக்க, வரப்பு வெட்டன்னு போனா சாப்பாடு போட்டு ஆம்பளைங்களுக்கு 500 ரூபாயும் பொம்பளைங்களுக்கு 400 ரூபாயும் சம்பளம் கொடுப்பாங்க. அதுவுங்கூட 6 மாதந்தான் வேலை. மத்த நாள்ல வேல கெடச்சா லக்கு, கெடக்கலன்னா திண்டாட்டந்தான். அந்த மாதிரி சமயங்கள்ல என்னோட குடும்பத்த காப்பாத்துனது இந்த புளிய மரந்தான்.”

வேரோடு சாய்ந்து கிடக்கும் மரத்தை வேதனையோடு காண்பித்து தொடருகிறார்.

“150 வருச மரம். வருசத்துக்கு 20 ஆயிரம் ரூபா வரைக்கும் பழம் எடுப்போம். திடீர்னு கொழம்பு தண்ணிக்கு மொடையா இருந்தா கொஞ்சம் பழத்த உலுக்கி சந்தையில போட்டுட்டு காய்கறி, மளிகைன்னு வாங்கி வருவோம். அந்த ஒத்த மரமும் போயிருச்சு.

இன்னும் மழை தொடருமுன்னு சொல்றாங்க. வீடுங்கள்ல ஓலையுமில்ல, ஏற்கெனவே சேறும் சகதியுமா இருக்கு. இனி எங்கே போறதுன்னே தெரியல. சாப்பாட்டுக்கும் வழியில்ல. 6 நாட்கள்ல ஒரே ஒரு தடவதான் தலைக்கு அரை கிலோன்னு கெவர்ன்மென்ட்டிலேருந்து அரிசி போட்டாங்க, அதோட சரி. அதிகாரிகள், அமைச்சர்கள் யாருமே வரல, ஏன் வி.ஏ.ஓ. கூட எட்டிப் பாக்கல. கவர்னர் மட்டும் வந்தாரு, கடலையும் காட்டையும் சுத்திப் பாத்துட்டுப் போயிட்டாரு. ஊருக்குள்ள வர டைம் இல்லே போல” என்றார்.

முத்துக்குமார் ஒரு வகைமாதிரி. இவருக்கு ஒரு புளிய மரம் என்றால், முனியசாமிக்கு 4 தென்னை, ராமசாமிக்கு 2 மாமரம்.

ஆம், கூலி  வேலை தவிர, இந்த மக்களின் வாழ்வாதாரம் வீட்டைச் சுற்றியுள்ள ஓரிரு தென்னையும், மாவும், புளிய மரங்களுமே. இதுவன்றி, சில ஆடு, மாடுகள், கோழிகள் மட்டுமே.

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற தேவைகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் கடன் வாங்கியுள்ளனர். “அதை எப்படி அடைக்கிறதுன்னே தெரியல, இந்த அரசு கடன தள்ளுபடி செஞ்சா கொஞ்சம் செரமம் குறையும்” என்று கவலையோடு கூறுகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை நெடுகிலும் இரவுநேர வாகன வெளிச்சத்தில் திட்டுத் திட்டாக மக்கள் வெள்ளம். இவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள ஆலங்காடு, பின்னத்தூர், நீர்முளை, சங்கந்தி, ஆட்காட்டிவேலி,  மன்னவன்கோட்டகம், தோலி… இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த கூலி ஏழை விவசாயிகள். மழைக்கு ஒதுங்க வீடு இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, கொசுக்கடியையும் குளிரையும் தாங்க முடியவில்லை. தற்போது, ரோட்டுக்கு வந்துவிட்டார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டுச் செல்லும் தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், மனிதாபிமானிகளின் கண்களில் படமாட்டோமா, ஏதேனும் பொருட்கள் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது, கிளைச்சாலைகளிலும் பழைய ப்ளெக்ஸ் பேனர்களின் பின்புறம் அல்லது கிழிந்த வேட்டிகளில் “கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமம்” என்று எழுதி வைத்துக்கொண்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல கையேந்தி நிற்கிறார்கள்.

அந்தக் கொடுமையான காட்சியைப் பார்க்கும்போது, அமெரிக்காவில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தனது அனுபவங்களை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

படிக்க:
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !

“அமெரிக்காவில் கருப்பின மக்கள் மட்டுமே வாழும் புறநகர் பகுதிகள் பல இருக்கின்றன. அங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு வீடு இல்லை, தெருக்களில்தான் படுத்துக்கொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளும் உறவுகளும் இல்லை, அனாதைகளே அதிகம். அந்த வழியில் செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை மடக்கி தங்களுக்குத் தேவையான பணம், உணவு, துணிமணிகளை கேட்டுப் பெறுகிறார்கள். யாரையும் அடித்துத் துன்புறுத்துவது இல்லை. ஆனாலும், அவர்கள் கேட்கும் தோரணையே, “இருப்பதை கொடுத்துவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டே நகர முடியும்” என்ற பய உணர்வு ஏற்படும்” – என்றார்.

இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் தண்ணீர் கொடுக்க மாட்டார்களா, ரொட்டி, பிஸ்கெட், பால் கொடுக்க மாட்டார்களா, ஒரு மெழுகுவர்த்தி – கொசுவர்த்தியேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள். இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடருமாயின், தஞ்சை டெல்டா மாவட்டங்களும் அமெரிக்காவின் புறநகர் பகுதியாக மாறுவதைத் தடுக்க முடியாது.