“அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” – உச்ச நீதிமன்றத்தின் சபரிமலைத் தீர்ப்பு குறித்து அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து இது.

“இராமன் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது குறித்து நீதிமன்றம் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்?” என்பது அன்று அத்வானி எழுப்பிய கேள்வி. நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை மீறித்தான் அன்று பாபர் மசூதியை இடித்தார்கள். சபரிமலை விசயத்தில் இன்று நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.

மத உரிமை மற்றும் மத நிறுவனங்களின் உரிமை (அரசமைப்பு பிரிவு 25, 26) தொடர்பாக இதுகாறும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகளை சபரிமலைத் தீர்ப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த வகையில் இத்தீர்ப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

ஒரு குடிமகனின் வழிபாட்டுச் சுதந்திரம், சமத்துவ உரிமை ஆகியவை மதங்களின் மரபுகள், சாத்திரங்கள், மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றோடு முரண்படும்போது, குடிமகனின் உரிமையைப் பின்னுக்குத் தள்ளி, மதம் மற்றும் மத நிறுவனத்தின் உரிமையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான தீர்ப்புகளைத்தான் இதுவரை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுக்கும் சேஷம்மாள் தீர்ப்பாகட்டும், 2015-இல் வழங்கப்பட்ட நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வின் தீர்ப்பாகட்டும், சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி தீட்சிதர்களின் கையில் ஒப்படைத்த தீர்ப்பாக இருக்கட்டும் – மேற்சொன்னவை உள்ளிட்ட பல தீர்ப்புகள் சட்டப்பிரிவு 25, 26-க்கு இதுகாறும் அளித்து வந்த விளக்கத்தை சபரிமலைத் தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.

ஐந்து நீதிபதிகளில் நால்வர் சபரிமலைமயில் பெண்களின் வழிபாட்டுரிமையைத் தடுக்கும் சட்டம், விதிகள் மற்றும் மரபுகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று கூறியிருக்கின்றனர் என்ற போதிலும், நான்கு நீதிபதிகளும் ஒரே கண்ணோட்டத்தில் அந்த முடிவுக்கு வரவில்லை. அவர்களுடைய முடிவில் ஒற்றுமை இருந்த போதிலும், முடிவை வந்தடைந்த அணுகுமுறையில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

எனவே, சட்டப்பிரிவு 25, 26 ஆகியவை தொடர்பாக முரணற்ற, முழுமையான ஒரு விளக்கம் இந்தத் தீர்ப்பில் கிடைத்துவிட்டதாகவும் நாம் கருத முடியாது. எனினும், மதச்சார்பின்மை என்ற திசையில் ஒரு அழுத்தமானதொரு அடியெடுத்து வைத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு என்று கூறுவது மிகையாக இருக்காது.
சபரிமலைத் தீர்ப்பாக இருக்கட்டும், இ.த.ச. 377 (தன்பாலினச் சேர்க்கை) மற்றும் இ.த.ச. 497 (மண உறவுக்கு வெளியிலான பாலுறவு) ஆகியவை குறித்த தீர்ப்புகளாக இருக்கட்டும், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படுவது ஒரு நகைமுரண்.

படிக்க:
♦ உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
♦ மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

“அரசியலில் ஜனநாயகம், சமூகத்தில் ஜனநாயகமின்மை” என்கிற முரண்பட்ட சூழலில் நுழைகிறோம் என அன்று அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது கூறினார் அம்பேத்கர். இன்று, அரசியல் அரங்கில் மிச்சமிருந்த ஜனநாயக உரிமைகளைப் புதிய தாராளவாதக் கொள்கைகளும், பார்ப்பன பாசிசமும் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்டி வருகின்றன.

ஆதார் முதல் பீமா கோரேகான் கைதுகள் வரையிலான வழக்குகளில் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நீதிமன்றம், அந்த அணுகுமுறைக்குப் பொருந்தா வண்ணம் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கில்” இப்படியொரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

விசித்திரம் தான்! இருப்பினும், சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.

***

1987-ஆம் ஆண்டில் தன் கணவருடன் சென்று அய்யப்பனைத் தரிசித்ததாகவும், கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டுச் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் ஜெயமாலா என்ற கன்னட நடிகை 2006-இல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்படவே, இப்பிரச்சனை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. “பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலை கோயிலில் அனுமதி இல்லை” என்பது ஒரு மரபாக மட்டுமில்லாமல், அது அதிகாரபூர்வமான விதியாக இருக்கிறது என்பதும், அது அரசமைப்புச் சட்டப்பட்டி செல்லத்தக்கதே என்று அதனைக் கேரள உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இப்பிரச்சினையை ஒட்டித்தான் பரவலாகத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது. பெண்களைத் தடை செய்கின்ற மேற்கூறிய விதி, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை), பிரிவு 25 (மனசாட்சி சுதந்திரம் அல்லது மத சுதந்திரம்) பிரிவு 51அ (e) (இந்திய மக்கள் அனைவருக்கும் இடையில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் கடமை) – ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதால், இதனை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரியது.

தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூசண் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, அக்டோபர், 2017 இல் 5 நீதிபதிகள் கொண்ட (தீபக் மிஸ்ரா, கன்வில்கர், ரோகிந்தன் நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா) அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பெண்களுக்கேயுரிய உடற்கூறியல் ரீதியிலான நிலையைக் காரணம் காட்டிப் பெண்ணினத்தை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 17 (தீண்டாமைக்கு எதிரான தடை)-க்கு எதிரானதாகாதா?

இவ்வாறு பெண்களை ஒதுக்குவதைப் பிரிவு 25 கூறுகின்ற இன்றியமையா மத நடவடிக்கை என்றும், ஒரு வகையறாவினர் (religious denomination) தமது மத விவகாரங்களை நிர்வகித்துக்கொள்ளும் உரிமை என்றும் இதனை ஒரு மத நிறுவனம் கோர முடியுமா?

அய்யப்பன் கோயிலை ஒரு மத வகையறாவினருக்கான கோயிலாக வகைப்படுத்த முடியுமா? அவ்வாறே ஆயினும், பெண்களை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 39 (a), 51- அ(e) ஆகியவற்றில் பொதிந்துள்ள அரசமைப்புக் கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கத்தை மீறுவதாகாதா?

கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்களுக்கான விதி-3 பெண்களைத் தடை செய்யும் உரிமையை, மேற்கூறிய வகையறாவினருக்கு வழங்குகிறதா? எனில், அவ்வாறு பாலின அடிப்படையில் தடுப்பது பிரிவு 14 மற்றும் 15(3) க்கு முரணானதாகாதா?
இவை அரசியல் சாசன அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட முக்கியமான கேள்விகள். இனி இவை குறித்து இத்தீர்ப்பு என்ன சொல்கிறது என பார்ப்போம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபே பொய்

1972-இல் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்துக்கு எதிராக அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்., ஆகம விதி, மரபு என்ற பெயரில் சில பார்ப்பனப் பண்டிதர்கள் கூறியதை எந்தவிதமான ஆதாரமும் இன்றி அப்படியே அங்கீகரித்தது.

இன்று சபரிமலை வழக்கின் சாதகமான அம்சம் என்னவென்றால், “மரபு என்ற பெயரில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு” என்பது கேரளத்தில் சட்டமாகவே ஆக்கப்பட்டிருந்ததால், இதனை தேவஸ்வம் போர்டும் பார்ப்பன தந்திரிகளும் நிரூபிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு நெடுநாள் மரபே இருந்ததில்லை என்பதும் அம்பலமாகிவிட்டது.

இப்போதும்கூட, பன்னெடுங்காலமாக நிலவி வந்த ஒரு மரபை இந்தத் தீர்ப்பு தலைகீழாக்கி விட்டதைப் போல சங்க பரிவாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், குழந்தைகளுக்குச் சோறூட்டும் சடங்கிற்கு பெண்கள் மாதம் தோறும் 5 நாட்கள் வருவர் என்று 1991-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு வாக்குமூலம் அளித்திருக்கிறது. “இளம்பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று அய்யப்ப சேவா சங்கத்தின் செயலர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திருவிதாங்கூர் மன்னரும் மகாராணியும் வழிபட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே, “பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் எதிர்மனுதாரர்கள் யாரும் அவ்வாறு நிரூபிக்கவில்லையென்றும் கூறுகிறது தீர்ப்பு. அப்படி ஒரு மரபே இல்லை எனும்போது, அந்த மரபை, பிரிவு 25-இன் கீழ் இன்றியமையாத மத நடவடிக்கை (essential practice) என்று கோருவதற்கான அடிப்படையும் இல்லாதொழிந்து விடுகிறது.

அய்யப்பன்மார் இந்து மதத்திலேயே ‘தனி ஒரு வகையறாவினர்’ அல்லர்!

ஒரு மதத்துக்குள்ளேயே தாங்கள் தனியொரு வகையறா என்று கூறிக்கொள்வதற்கும், அதன் அடிப்படையில் தங்கள் மதத்தினர் மீது சாதி, மத, பாலின ஆதிக்கம் செலுத்துவதற்கும் சட்டப்பிரிவு 26, ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. “இதனை வகையறாவின் தனி உரிமை” என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தே வந்திருக்கிறது.

தில்லைக் கோயிலை தீட்சிதர்கள் தமது சொத்தாக மாற்றிக் கொண்டதும், அர்ச்சகர் பணியைப் பார்ப்பனர்கள் தமது ஏகபோகமாக வைத்திருப்பதும், வகையறாவின் தனியுரிமை” (denominational right) என்ற அடிப்படையில்தான்.

“தாங்கள் ஒரு தனி வகையறா” என்று அதற்குரிய வரையறைகளின் படியேகூட, அர்ச்சகர்களோ தீட்சிதர்களோ தங்களை எந்த சிவில் நீதிமன்றத்திலும் நிரூபித்துக் கொள்ளாத போதிலும், அப்படியொரு தகுதியை உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், “அய்யப்பன்மார் ஒரு தனி வகையறா” என்ற வாதத்தை இந்து மல்கோத்ரா மட்டுமே ஏற்கிறார். மற்ற நீதிபதிகள் அதனை ஏற்கவியலாது என்று நிராகரித்து விட்டதால், பிரிவு 26 இன் கீழ் அவர்கள் கோரக்கூடிய தனியுரிமையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மரபு, தனி வகையறா என்பது உண்மையெனக் கொண்டாலும், பெண்ணை ஒதுக்குவது பிரிவு 25(1) இன்படி செல்லத்தக்கதா?

மத நம்பிக்கையை அமல்படுத்துவதற்கு அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என 25(1) கூறுகிறது. ஐயப்பனை “வழிபடுவதன் மூலம் தனது நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறாள் பெண். அவளைத் “தடுப்பதன் மூலம் தனது மத நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறார் தந்திரி.

யாருடைய மத உரிமை முதன்மையானது? “எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமை உண்டு” என்பதுதான் இந்த பிரிவின் சாரம் என்பதால், இன்னொருவரின் வழிபாட்டுரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் நாரிமன்.

அது மட்டுமல்ல, “ஒரு குடிமகனின் மத உரிமையைக் (25/1) காட்டிலும், மத நிறுவனத்தின் உரிமையே (26) பெரிது” என்பதுதான் இதுநாள்வரை பெரும்பாலான தீர்ப்புகள் அளித்து வந்த விளக்கம். அதையும் இந்த தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.
பிரிவு 25 ஒரு குடிமகனுக்கு மனச்சாட்சி சுதந்திரத்தை அளிக்கிறது. அது எந்த ஒரு மதத்தையும் நம்புவதற்கும், நம்பாமல் இருப்பதற்குமான உரிமை. “மனச்சாட்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு மத நிறுவனத்துக்கு மனச்சாட்சி இருக்க முடியாது. எனவே, மத நிறுவனங்கள் பிரிவு 25 இன் கீழ் மனச்சாட்சி உரிமை கோரவியலாது” என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குறிப்பிடுவது இங்கே கருதிப் பார்க்கத்தக்கது.

சிறுபான்மைத் தீர்ப்பின் மதவாதப் பார்வை

பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை) ஆகியவற்றோடு மத நிறுவனங்களின் உரிமை முரண்படும் சந்தர்ப்பங்களில் (2015 அர்ச்சகர் தீர்ப்பு உட்பட) மத நிறுவனங்களின் பக்கமே உச்ச நீதிமன்றம் நின்றிருக்கிறது.

இந்த வழக்கிலும் கூட , “பிரிவு 14-இன் கீழ் மனுதாரர்கள் சமத்துவ உரிமை கோர முடியாது” என்று தனது தீர்ப்பில் கூறுகிறார் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா. மனுதாரர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல என்றும், பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மட்டும்தான் பிரிவு 14-இன் கீழ் சமத்துவ உரிமை கோர முடியும் என்றும், அந்த அடிப்படையில் வெளியாட்களான சில வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இவர் கூறுகிறார்.

ஒரு இந்தியக் குடிமகன் சக குடிமகனுக்காக வாதாட முடியாது என்கிறார் மல்கோத்ரா. ஒரு குடிமகனின் முதன்மை அடையாளம் மதம், அதன் பின்னரே அரசமைப்பு சட்டம் என்பதுதான் இந்தக் கூற்றின் சாரம். இந்து ராஷ்டிரம் அரசியல் ரீதியாக அறிவிக்கப்படும் முன்னர், சட்டரீதியாக நீதித்துறை அறிவிக்கும் இந்து ராஷ்டிரம் என்றும் கொள்ளலாம்.

“அர்ச்சகர் பிரச்சினை, சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவது போன்றவற்றில் நாத்திகர்களான ம.க.இ.க. வினர் தலையிட உரிமை இல்லை” என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதைத்தான் இந்து மல்கோத்ராவும் கூறுகிறார். அது மட்டுமல்ல, “பெண்கள் மீதான இந்த அடக்குமுறை என்பது ஒரு மதத்தின் உள்விவகாரம். இதை மதத்துக்கு வெளியில் உள்ளவர்கள் கேள்விக்குள்ளாக்க முடியாது” என்பதும் இந்து மல்கோத்ராவின் கூற்று.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்
♦ அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

அவருடைய கூற்றுப்படி, ஒரு இந்துப் பெண் வழக்கு தொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்போது பிரிவு 14, 15-இன் கீழ் சமத்துவ உரிமையை அந்தப் பெண்ணுக்கு வழங்குவாரா இந்து மல்கோத்ரா? “மத நம்பிக்கைகள் மீது பகுத்தறிவுப் பார்வையை நீதிமன்றம் திணிக்கவியலாது” என்பதுதான் சபரிமலை பிரச்சினையில் அவரது தீர்ப்பு.

அவரைப் பொருத்தவரை, 14, 15, 25 உள்ளிட்ட எல்லா அரசியல் சட்டப்பிரிவுகளும் மத நிறுவனத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. இதனை மீறி மத நம்பிக்கையின் மீது நீதிமன்றம் தீர்ப்பளிப்பது “பன்மைத்துவத்துக்கு எதிரானது” என்கிறார் மல்கோத்ரா. சாதி என்பது படிநிலை ஆதிக்கமல்ல, பன்மைத்துவம் என்று சங்கபரிவாரம் எந்த கண்ணோட்டத்தில் நியாயப்படுத்துகிறதோ, அதையேதான் மல்கோத்ராவும் பிரதிபலிக்கிறார்.

பெரும்பான்மை – சிறுபான்மை தீர்ப்புகளின் தன்மை குறித்து…

மற்ற நான்கு பேருடைய தீர்ப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்து மல்கோத்ராவின் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுமளவு பிற்போக்கானதாகத் தெரியலாம். உண்மையைச் சொல்வதென்றால், பிரிவு 25, 26 தொடர்பாக இதுகாறும் உயர், உச்ச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ள பிற்போக்கான தீர்ப்புகளின் செறிவான சாரமே மல்கோத்ராவின் தீர்ப்பு.

“இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக்கொண்டு, அதனை வியாக்கியானம் செய்வதன் வழியாகவே பார்ப்பன பாசிச அரசியலைச் சட்டபூர்வமானதாக ஆக்கிவிட முடியும்” என்ற சாத்தியத்தைத்தான் மல்கோத்ராவின் தீர்ப்பு புரியவைக்கிறது.

தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் போன்ற நிறுவனங்களின் தலைமையில் தமது ஆட்களை நியமிப்பதன் மூலம், மதச்சார்பற்றவை என்றும் அரசியல் சித்தாந்த சார்பற்றவை என்றும் சொல்லப்படும் அந்த நிறுவனங்களைப் பார்ப்பன பாசிசத்தின் கூலிப்படையாக மாற்றிவிட முடியும் என்பதை சங்க பரிவாரம் நமக்குப் புரிய வைக்கிறதே, அதைப் போன்றதுதான் இத்தீர்ப்பு.

நான்கு பேருடைய பெரும்பான்மைத் தீர்ப்பில், தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோரது தீர்ப்புகள், வேறு வழியே இல்லாத இடங்களில் மட்டுமே “முன்னோர் விதித்த வரம்புகளை” மீறுகின்றன. நீதிபதி நாரிமன், அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்குப் பொருள் கொள்ளும்போது, சட்டம் என்ற சட்டகத்துக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறார். பிரச்சினையின் அரசியல் – சமூக – பண்பாட்டுப் பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி சந்திரசூட்.

மத ஒழுக்கக் கேடும் அரசமைப்புச் சட்ட ஒழுக்கமும் !

பெண்களை ஒதுக்கும் விதி அரசமைப்பின் பிரிவு 25(1)-க்கு முரணானது என்ற முடிவுக்கு 4 நீதிபதிகளும் வருகின்றனர். சந்திரசூட் இதனை வேறு விதமாக விளக்குகிறார். “அந்தப் பிரிவில் குறிப்பிடப்படும் ‘ஒழுக்கம்’ என்பது தனிநபர் ஒழுக்கமோ, மத ஒழுக்கமோ அல்ல; அது அரசமைப்புச் சட்ட ஒழுக்கமாகும். ஆகவே, அந்த விதி அரசமைப்புக்கு முரணானது” என்கிறார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவதானிப்பு ஆகும். சந்திரசூடின் தீர்ப்பின்படி, ‘மரபு’ என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் மத ரீதியான ஒழுக்கக் கேட்டின்மீது, அரசமைப்புச் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது.

தேவதாசி ஒழிப்பு, பால்ய விவாகம், சதி, தீண்டாமை போன்றவற்றை அரசமைப்பு சட்டம் ‘ஒழித்து விட்டதாக’ப் பலர் புரிந்து கொண்டிருக்கலாம். “இவையெல்லாம் அரசமைப்புக்கு முரணான ஒழுக்கக் கேடுகள்” என்று தற்போது சந்திரசூட் கூறியிருப்பதைப் போலச் சொல்லி, அவை ஒழிக்கப்படவில்லை. மாறாக, இவையெல்லாம் “இந்து மதத்தின் இன்றியமையா நடைமுறைகள் அல்ல” என்ற ஒரு பொய்யைச் சொல்லி, அதன் அடிப்படையில் இவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதாவது, திருடனிடமிருந்து நகையைக் காவல்துறை பறிமுதல் செய்வதற்கும், “இது எனக்கு தேவையில்லை” என்று திருடனே வீசியெறிவதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது இது.

தற்போது சந்திரசூடின் தீர்ப்பின்படி, பார்ப்பன மதத்தின் ஒழுக்கக் கேட்டின் மீது, மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. அதாவது மதத்தின் மீது மதச்சார்பின்மையின் மேலாண்மை நிறுவப்பட்டிருக்கிறது.

பகுத்தறிவு இல்லையேல் ஜனநாயக உரிமையும் இல்லை

அது மட்டுமல்ல, “மத நம்பிக்கையை பகுத்தறிவுப் பார்வையில் நீதிமன்றம் ஆராயக்கூடாது” என்ற இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் எதிராக, “மூடநம்பிக்கையை மத உரிமை என்று அங்கீகரிக்க இயலாது” என்று கூறுகிறார் சந்திரசூட். அறிவியல் பார்வைக்கும் ஜனநாயக உரிமைக்கும் இடையிலான பிரிக்கவொண்ணா உறவை இது விளக்குகிறது.

அதேபோல, சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமையை வழங்கும் பிரிவு 15, “மத உரிமையை வழங்கும் பிரிவு 25 ஐ விட மேலானது” என்றும் சந்திரசூட் கூறுகிறார். இதுவும் அர்ச்சகர் வழக்கின் தீர்ப்புக்கும் மதம் தொடர்பான வேறு பல தீர்ப்புகளுக்கும் நேரெதிரான பார்வையாகும்.

பிரிவு 25 கூறும் மத உரிமை என்பது ஒரு தனிநபர் தன்னளவில் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்பானது மட்டுமே. பாலின அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவது என்பது, ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை தொடர்பான விசயமல்ல. அது அடுத்தவர் மீது திணிக்கப்படும் பாரபட்சமாகும். சபரிமலைப் பிரச்சனையில், மத நம்பிக்கை என்ற முகமூடியை விலக்கி, பிரிவு 25-இன் கீழ் அவர்கள் கோரும் நம்பிக்கையின் உண்மையான பொருள் ஆதிக்கமே என்பதை சந்திரசூடின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

மதத்தின் இன்றியமையா நடவடிக்கையா, குடிமக்களின் சமத்துவ உரிமையா?

ஒரு நடவடிக்கை அல்லது நம்பிக்கை, குறிப்பிட்ட ஒரு மதத்தின் இன்றியமையா அம்சம் என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், அது அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பின் மற்ற பிரிவுகளின் மீது (14, 15 )மேலாண்மை செலுத்தலாம் என்றே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் கூறுகின்றன.

“சமூக ரீதியில் பிறரை ஒதுக்குவதாகவோ, ஒரு குடிமகனின் கவுரவமான வாழ்வுக்குரிய ஆதாரங்களை மறுப்பதாகவோ இருக்கும் பட்சத்தில், அது ஒரு மதத்தின் இன்றியமையா நடவடிக்கை என்று அங்கீகரிக்கப் பட்டிருப்பினும், அதனை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் மத, தனிநபர் சட்டங்களை, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு அப்பாற்பட்டவையாக வரையறுக்கின்ற முந்தைய தீர்ப்புகள் (தனிநபர் சட்டம் பற்றிய நரசு அப்பா மாலி தீர்ப்பு) மீளாய்வு செய்யப்படவேண்டும்” என்கிறார் சந்திரசூட்.

மதத்தின் இன்றியமையா நம்பிக்கை என்று கூறப்படுவது எத்தகைய ஆபாசமான முறையில் சமத்துவத்தை நிராகரிக்கிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது “இந்துக்களின் இன்றியமையா நம்பிக்கை” “மசூதியில்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம் மதத்தின் இன்றியமையா நம்பிக்கையல்ல” என்று சொல்லி பாபர் மசூதியின் இடத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு வழங்குகிறது அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு.

“ஆகம விதி என்ற இன்றியமையா நம்பிக்கை” காரணமாகத்தான் பார்ப்பனரல்லாதோருக்கு அர்ச்சகர் பணியில் சமத்துவ உரிமை மறுக்கப்படுகிறது.

மேற்சொன்னவை சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே. பன்மைத்துவம் என்ற பெயரில் இவற்றை நியாயப்படுத்துகிறார் இந்து மல்கோத்ரா. தனிமனிதனின் சுதந்திரத்தையும் கவுரவத்தையும் பாதுகாப்பதுதான் அரசமைப்பு சட்டத்தின் நோக்கம். அதனைப் பறிக்கின்ற எந்த நடவடிக்கையையும் பன்மைத்துவம் என்ற பெயரில் அனுமதிக்கவியலாது என்று கூறி அதனை மறுக்கிறார் சந்திரசூட்.

தீட்டு என்று பெண்ணை ஒதுக்குவதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே!

இது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கால் முன்வைக்கப்பட்ட வாதம். இதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் சந்திரசூட்.

“தூய்மை, தீட்டு என்பவையே படிநிலை சாதி அமைப்பின் இதயமான கருத்தாக்கங்கள். மாதவிடாய் தீட்டு என்ற கருத்திலிருந்துதான் கோயிலில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். தூய்மை – தீட்டு என்ற அடிப்படையில் எந்தவொரு பிரிவு மக்களை ஒதுக்கி வைத்தாலும், அது தீண்டாமைதான். அரசமைப்பின் பிரிவு 17, தடை செய்ய விழைவது சாதி அடிப்படையிலான தீண்டாமையை அல்ல என்று இதற்குப் பொருள் அல்ல. சாதி அடிப்படையிலான தீண்டாமை என்பது எந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த தூய்மை – தீட்டு என்ற கருத்தாக்கத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் பெண்களை ஒதுக்குகின்ற இந்த நடவடிக்கையும். எனவே, சட்டப்பிரிவு 17, பெண்களையும் தீண்டாமையிலிருந்து பாதுகாக்க வேண்டும்” – என்பதே இது விசயத்தில் அவரது தீர்ப்பின் சாரம்.

அர்ச்சகர் வழக்கில் தீர்ப்பளித்த (டிச, 2015) உச்ச நீதிமன்றம் தீண்டாமைக்கு அளித்த விளக்கம் இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.

“ஆகம விதியின்படி பார்ப்பன அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சிலையைத் தீண்டினால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்று பார்ப்பன சிவாச்சாரியார்கள் கூறுவது பிரிவு 17-இன்படித் தீண்டாமைக் குற்றமே” என்று தற்போது சந்திரசூட் கூறுகின்ற இதே வாதம்தான் அர்ச்சக மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது. இதனை மறுத்து தீண்டாமைக்கு புது விளக்கம் அளித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
♦ தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !

ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது என்று கூறியது அந்தத் தீர்ப்பு.

பார்ப்பனியத்தையோ மதத்தையோ கேள்விக்குள்ளாக்கும் வழக்குகளில், பிரச்சனையின் சாரத்தையும், அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தையும் பரிசீலித்துத் தீர்வு கூறாமல், இத்தகைய அறிவுசார் ஏமாற்றுவாதங்களின் (intellectual sophistry) துணையோடு தப்பித்துக் கொள்வதையே பெரும்பாலான தீர்ப்புகளில் நாம் காண முடிகிறது.

இது பெண்ணின் மீதான சமூக ஒடுக்குமுறையா, மத ஒடுக்குமுறையா?

அப்படியின்றிப் பிரச்சனையை நேர்மையாக எதிர்கொள்கிறார் சந்திரசூட். “மத மரபு என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினையை, சமூக வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். சபரிமலை விவகாரம் முதன்மையாக ஒரு மதச்சிக்கல் அன்று. பிரம்மசரியத்தின் சுமையைப் பெண்களின் மீது வைக்கும் இந்தப் பிரச்சினையை முதன்மையாக ஒரு பாலின ஒடுக்குமுறை என்ற கோணத்திலேயே பார்க்க வேண்டும்” என்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் என்பது சமூக ஜனநாயகத்துக்கான போராட்டமேயன்றி, வெறும் மத உரிமைப் போராட்டமன்று. வீதியில் நடக்கக் கூடாது, செருப்பணியக் கூடாது என்பன போன்ற சமூக ஒடுக்குமுறைகளின் நீட்சிதான் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஆகம விதி. பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது என்ற தீண்டாமையும் மேற்சொன்ன சமூக ஒடுக்குமுறையின் மத வடிவம்தான். சாதி, பாலின, மொழி, இன ஒடுக்குமுறைகளையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தி சமூக ஒடுக்குமுறைக்கு மதப்புனிதம் கற்பிக்கும் சித்தாந்தமே பார்ப்பனியம்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு இந்தியக் குடிமகனின் சமூக வாழ்க்கையை மதம் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் அன்று அம்பேத்கர் கூறியதை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
“மரபு, பழக்க வழக்கம் மற்றும் தனிநபர் சட்டங்கள் போன்றவை ஒரு தனிநபருடைய சமூக வாழ்வின்மீது குறிப்பிடத்தக்க வகையில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மரபுகள் மதத்துடனும் தொடர்புடையவையாக இருக்கின்ற காரணத்தினாலேயே, இவற்றுக்கு அரசமைப்பு சட்டத்திலிருந்து விலக்கு வழங்குவதென்பது, அரசமைப்பு சட்டத்தின் மேலாண்மையை மறுப்பதாகிவிடும்” என்கிறார் சந்திரசூட்.

நேற்று சன்னி லியோன், இன்று பிரம்மசரியம் – இரண்டிலும் பலிகடா பெண்!

அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது என்று அமித் ஷா கூறியிருப்பது பார்ப்பன பாசிச அதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது உண்மைதான். இருப்பினும், பெண்ணினத்தின் சம உரிமைய வலியுறுத்தும் இந்தத் தீர்ப்பை, இந்து மதத்துக்கு எதிரான தாக்குதலாகச் சித்தரித்து, அரசியல் ஆதாயம் பெறுவதற்கு ஏற்ற சமூகச் சூழல் நிலவுவதையும் நாம் மறுக்கவியலாது.

சங்கி அறிவாளிகளின் பத்திரிகையான ஸ்வராஜ்யா இப்படி எழுதுகிறது. சதையின் தூண்டுதலுக்கு ஆளாக விரும்பாத பிரம்மச்சாரிகள் அதிலிருந்து விலகி நிற்கவே விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன், நோன்பு நேரத்தில் இசுலாமியர்கள் பிரியாணிக் கடைகளை மூடி வைப்பதில்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அப்பத்திரிகை யின் ஆசிரியர் ஜெகன்னாதன்.

ஆர்.எஸ்.எஸ்.-க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கும் இடையிலான சித்தாந்த ஒற்றுமை இதுதான். பெண்களை சதையாகவும், பிரியாணிப் பொட்டலமாகவும் சித்தரிப்பது குறித்து ஜெகன்னாதன் சிறிதும் கூச்சப்படவில்லை என்பது மட்டுமல்ல, சபரிமலையில் சங்கிகள் திரட்டி வந்த பெண்கள் கூட்டமும் நாங்கள் அனைவரும் பிரியாணிப் பொட்டலமே என்று அறிவித்துக் கொள்வதற்கு கூச்சப்படவில்லை.

ஆசிபாவைக் குதறிய மிருகங்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஜம்முவில் பேரணி நடத்தியவர்களும் இவர்கள்தான். பெண்களை அனுமதித்தால் எங்கள் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று சபரிமலையில் போராட்டம் நடத்துவதும் இவர்கள்தான்.

தீர்ப்புக்கு ஆதரவான பெருந்திரள் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை? இதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து இயற்றப்படும் சட்டங்களோ தீர்ப்புகளோ ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும். தீண்டாமைக்கு எதிரான சட்டமானாலும் சரி, போலீசின் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்ப்புகளானாலும் சரி – அவை ஓரளவுக்கேனும் அமலாவதைத் தீர்மானிப்பவை சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களே.

இதே கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் கொச்சியில் ஏதோ ஒரு கடையின் திறப்பு விழாவுக்கு வந்த நீலப்பட நடிகை சன்னி லியோனைக் காண்பதற்குப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் – போலீஸ் தடியடி. சபரிமலை விவகாரத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டம். பெண்களை அனுமதித்தால் ஆண்களின் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று போராட்டம் – இங்கேயும் தடியடி.

ஸ்மார்ட் போனின் ஒரு ஆப்-இல் அய்யப்பன். இன்னொரு ஆப்-இல் சன்னி லியோன். இரண்டு ஆப்புகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

– மருதையன்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart