சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்பதற்கு ஆதாரங்களை கண்டறிந்து நிறுவியவர் தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த 26-11-2018 அன்று காலமானார்.

ஐராவாதம் மகாதேவன்.

அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இரசாயனவியலில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.

1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,  கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர் ஐராவதம் மகாதேவன். திராவிட நாகரிக ஆய்விற்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (2009-2010)-ம் ஆண்டுக்கான “தொல்காப்பியர் விருது” வழங்கப்பட்டது.

சென்னையில் கடந்த திங்கள்கிழமை (26-11-2018) அன்று தனது 88-வது வயதில் மரணமடைந்தார். அதிகாரவர்க்கப் பிரதிநிதி, பத்திரிகையாளர், தொல்லியல் துறை நிபுணர் என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஐராவதம் மகாதேவனுக்கு துறைசார் வல்லுனர்கள் செலுத்திய அஞ்சலிகளுக்கான இணைப்பை இங்கே தந்திருக்கிறோம்.

♦♦♦

ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்

…… தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

…… சிந்துவெளி எழுத்துகளும் திராவிடமும்

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடுதான் என்று நீண்டகால ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்த அஸ்கோ பர்போலாவின் வாதத்தை வழிமொழிந்த ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகளை அஸ்கோ பர்போலா படித்த முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பர்போலா ‘அணில்’ என்ற உருவத்தை ‘பிள்ளை’ எனப் பொருள் கொண்டதையும், ‘வளையல்’ போன்ற குறியீட்டுக்கு ‘முருகு’ என்று பொருள் கொண்டதையும் மொழியியல் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டினார்.

சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு ஐராவதம் மகாதேவன் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.

– ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

காலத்தின் கல்வெட்டு!

….. ‘‘40 ஆண்டுகளுக்கு முன் ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட ‘சிந்துவெளி எழுத்து, குறியீடுகளின் தொகுப்பும் அட்டவணைகளும்’, சிந்துவெளி ஆய்வில் ஒரு மறக்க முடியாத மைல் கல். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்கு வலுச்சேர்த்த ஆய்வறிஞர் அவர்.

சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்பதால், அதன் தொடர்ச்சியை‌ வேத இலக்கியங்கள் மற்றும் வட இந்திய மரபுகள் மூலமாகவும், பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ்த் தொன்மங்கள் மூலமாகவும் இரு முனைகளில் இருந்தும் மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்பதே ஐராவதம் மகாதேவனின் அணுகுமுறை.”

தமிழ்மகன்விகடன்  (மேலும் படிக்க)

♦♦♦

படிக்க:
♦ சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

♦♦♦

ஆய்வு நேர்மையும் வாழ்வு நேர்மையும் வேறுவேறல்ல!

….. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் விட்சல், அவர் அப்போது பதிப்பித்துக்கொண்டிருக்கும் ‘ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசை’யில் (Harvard Oriental Series) வெளியிட மகாதேவனிடம் இந்நூலைக் கேட்டார்.

ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசையில் ஒரு அறிஞரின் நூல் வெளியிடப்படுவது அறிவுலகில் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. முழுமை அடையாத ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடாமல்கூட ஹார்வர்டு தன்னுடைய புகழ்மிக்க கீழை நூல்கள் வரிசையில் வெளியிட முன்வந்தது, உலக அறிஞர்களிடையே மகாதேவனின் புலமைக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை நமக்குச் சொல்லிவிடக்கூடியது.

‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன்  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு

….. சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

”ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை”என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்”

– பிபிசி தமிழ் (மேலும் படிக்க)

♦♦♦

ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு!

…. பௌத்தர்களும் சமணர்களும் தமிழ்ச் சமூகத்துக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றியுள்ள சேவையை ஐராவதம் மகாதேவனும் அந்த நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏறத்தாழ கிபி பதினாறாம் நூற்றாண்டு வரை அந்த சேவை நீடித்ததையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும்; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருந்தொகை போன்ற காப்பியங்களும்; திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களும்; திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற அகராதி நூற்களும் சமணர்களால் இயற்றப்பட்டன என்பதைத் தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கொடுத்தவர்கள் சமணர்களே என்று தமது ஆய்வு நிரூபணம் செய்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் சங்க இலக்கியம் செழிக்க அவர்கள் ஏற்படுத்தித் தந்த வரிவடிவமே உதவியது. மக்களிடம் கல்வி அறிவு பரவவும் அதுவே காரணமாயிற்று’ எனவும் ஐராவதம் மகாதேவன் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 139).

ரவிக்குமார் – மின்னம்பலம் (மேலும் படிக்க)

♦♦♦

படிக்க:
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

♦♦♦

துறைசார் அறிஞர்களுக்கு வெளியே ஒளிர்ந்த மேதை மகாதேவன்

…. சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். இந்தக் குறியீடுகள் இதைச் சொல்லலாம் அல்லது அதைச் சொல்லலாம் என்ற வகையில் அவர் எதையும் அணுகியதே கிடையாது. மொழியியல் இலக்கணங்களையும், ஆய்வுத்திறனையும் இணைத்தே பகுத்தாய்ந்து முடிவுக்கு வந்தார்.

எல்லா இலச்சினைகளையும் தொகுத்து அவற்றிலிருந்து பெறும் தகவல்களை அட்டவணைப்படுத்தினார். இதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன. அவைதான் கல்வெட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, மானுடவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இனி ஈடுபடுவோருக்கு மிகச் சிறந்த திறவுகோலாகப் பயன்படவிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை 1977-ல் அதை நூலாக வெளியிட்டது. (The Indus Script: Texts, Concordance and Tables.)

ரொமிலா தாப்பர்  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் இன்று காலமானார்

1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ் , கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ் (The Indus Script : Texts, Concordance | and Tables (1977) ) என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். அந்த நூலில்தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சிந்து சமவெளி கலாச்சாரம் என்பது திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவுவதில் அவருடைய ஆய்வுகள் பேருதவி புரிந்து வருகின்றன.

முற்காலத் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றி விரிவாக எழுதி 2003-ல் அவர் வெளியிட்ட ‘ஏர்லி தமிழ் எபிகிராஃபி: ஃப்ரம் தி ஏர்லியஸ்ட் டூ த சிக்ஸ்த் சென்சுரி ஏ.டி.’ (Early Tamil Epigraphy, | from the Earliest Times to the Sixth century A.D (2003) என்கிற பெருநூல் மிகவும் முக்கியமானது. அவருடைய மகத்தான சாதனைகளுள் ஒன்றாக இந்த நூல் கருதப்படுகிறது. சிந்து சமவெளி எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஐராவதம் மகாதேவனின் நிபுணத்துவத்தில் பிரதானமான பகுதிகள்.

– தினமணி (மேலும் படிக்க)

♦♦♦

’வரலாறு’ எனும் இணையதளத்தில் ஐராவதம் மகாதேவன் எழுதிய சில கட்டுரைகளுக்கான சுட்டிகள்:

தொகுப்பு: