இரங்கல் செய்தி

மிழக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், இயற்கை வேளாண்மையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள் என அனைவராலும் மதித்துப் போற்றப்பட்ட திரு. ’நெல்’ ஜெயராமன் (51) அவர்கள் நேற்று (6.12.2018) சென்னையில் காலமானார். முதிராவயதில் நேர்ந்த அவரது மரணம் உண்மையிலேயே தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு.

நெல் ஜெயராமன்

திருத்துறைப்பூண்டி நகருக்கு அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த தோழர் ஜெயராமனின் சாதனைகள் வியக்கத்தக்கவை. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அவரால் ‘நெல்’ ஜெயராமன் என அழைக்கப்பட்டு அவரோடு நெருக்கமாக பயணித்தவர். தமிழகத்தில் அழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்தவர். இது ஒரு இமாலய சாதனை என்றால் மிகையில்லை.

ஆண்டுதோறும், திருத்துறைப் பூண்டி ஆதிரங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி, தான் மீட்டெடுத்த நெல்வகை விதைகளை இலவசமாக வழங்கி உற்பத்தியை ஊக்கப்படுத்தியவர். பல ஆர்வலர்களுடன் இணைந்து இயற்கை வேளாண் பொருட்களை பிரபலப்படுத்த திருவாரூரில் தாய்மண் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பெரிதும் நேசித்ததோடு தன்னாலியன்ற உதவியை மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தவர்.

உலக முதலாளித்துவத்துவத்தின், குறிப்பாக கார்ப்பரேட்டுகளின் லாபவெறி, உலகச் சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை சமநிலையை சீர்குலைத்து, உழைக்கும் மக்களின் உயிரைக் குடித்துவரும் இந்த அபாயகரமான சூழலில் நேர்ந்த அவரது மரணம், ஈடு செய்ய முடியாதது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஜெயராமன், தனது மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தே இருப்பினும், தனது பணியை விடாது தொடந்தவர்.

விடாமுயற்சி. கடும் உழைப்பு, நமது மரபின் மீது மாளாப்பற்று என முன்னுதாரணமாக வாழ்ந்த தோழர் ’நெல்’ ஜெயராமனுக்கு மக்கள் அதிகாரம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

காளியப்பன்,
மக்கள் அதிகாரம்.