டந்து முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. எனினும் வெற்றி பெற்ற இடங்களில் கூட பாஜக-விற்கு கை கொடுத்துள்ளது ‘நோட்டாதான்’ இந்துத்துவம் அல்ல.

இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், ராஸ்டிரிய லோக் தளம் கட்சிக் கூட்டணி மொத்தம் 100 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தனிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், இராஜஸ்தானில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கானது, வெற்றியாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும். ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்கள் காங்கிரசுக்கு விழாமல் நோட்டாவுக்கு விழுந்தது, பல இடங்களில் குறைவான வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற உதவியுள்ளது.

முன்னாள் பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் காளிசரண் சரஃப், தனது தொகுதியில் 1704 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே அத்தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 2371.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற மற்றொரு தொகுதி ஆசிந்த் தொகுதி. இங்கு போட்டியிட்ட பாஜகவின் ஜப்பார் சிங், காங்கிரசின் மனீஸ் மெவாராவை விட 154 வோட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் நோட்டா பெற்ற வாக்கு எண்ணிக்கை 2934.

இதைப் போன்றே பில்பங்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 251 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு நேட்டா 2791 வாக்குகளைப் பெற்றுள்ளது.

படிக்க:
ஓட்டுப் போடலேன்னா சாமி கண்ணக் குத்துமா ?
நோட்டாவால் அடிக்காதே ஜோட்டாவால் அடி – கார்ட்டூன்கள்
தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

இதைப் போன்றே இராஜஸ்தானின் காட்டோல், சோட்டன், பாச்பட்ரா, புந்தி, சோமு, பொகரான், கான்பூர்ம் கேத்ரி, மக்ரனா, தண்டம்கர், ஃபடேபூர் ஆகிய தொகுதிகளிலும் வெற்றி தோல்விக்கிடையிலான வாக்கு வித்தியாசத்தை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.

2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் பாஜகவிற்கு நோட்டா ஆப்பு வைத்தது. படம் – நன்றி : விகடன்

சுமார் 5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பன்ஸ்வாரா மாவட்டம்தான் அதிகமான நோட்டா வாக்குகளைப் பெற்றுள்ளது. பன்ஸ்வாரா மாவட்டத்தின் குஷால்கர் தொகுதிதான் இருப்பதிலேயே அதிகமாக 11,002 நோட்டா வாக்குகளைப் பெற்றுள்ளது. பகிடோரா தொகுதியில் 5581 வாக்குகளையும், கடோலில் 4857 வாக்குகளையும், கர்ஹியில் 4594 வாக்குகளையு, பன்ஸ்வாரா தொகுதியில் 3876 வாக்குகளையும் நோட்டா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் -2018-ல் பல பகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பிற்கும் ஆப்பு அறைந்துள்ளது நோட்டா.

“எவனும் சரியில்லை” என்ற முடிவுக்கு வரும் மக்களின் வெறுப்புணர்ச்சி மடைமாறாமல் தேர்தல் ஜனநாயகத்துக்குள்ளாகவே வடிந்து விடுவதற்காகவே ஆளும் வர்க்கங்களால் ’நோட்டா’ பட்டன் வாக்கு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல கோடிகள் செலவழித்து மக்களிடமிருந்து ஏமாற்றி பெறப்படும் வெற்றி வாய்ப்பை நோட்டா பாதிக்கும் எனும் பட்சத்தில் காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி நோட்டாவை ’தீர்த்துக் கட்டவே’ விருப்பப்படுவார்கள். ஏற்கனவே பல தருணங்களில் பல கட்சிகள் நோட்டா தேவையில்லை என்றும், வாக்குப் போடுவதை கட்டாயமாக்குவதையும், போடவில்லை என்றால் தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பேசியிருக்கின்றனர். மக்களை மிரட்டியாவது வாக்களிக்க வைக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

நோட்டா குறித்து ஒரு ’முடிவெடுக்க’, பாஜக தலைமை ஒருவேளை தமிழக பாஜகவிடம் கருத்துக் கேட்டால், (அடிமைகளிடம் பொதுவாக ஆண்டைகள் கருத்துக் கேட்பதில்லை, ஒரு பேச்சுக்காவது கேட்டால்) உடனடியாகவே நோட்டாவை ‘தீர்த்துக்கட்டக்’ கூறி கெஞ்சிக் கூத்தாடுவார் தமிழிசை. என்ன இருந்தாலும் தமிழகத்தில் அவர்களை வீழ்த்திய பரம விரோதி அல்லவா அந்த நோட்டா பட்டன்.

ஆக பாஜக-விற்கு சில நேரங்களில் இந்த நோட்டா பட்டன் எமனாகவும், சில நேரங்களில் உற்ற தோழனாகவும் இருக்கிறது. எனினும் நீண்ட கால நோக்கில் நோட்டாவிற்கு வேட்டு வைப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் அணி வகுப்பது நிச்சயம்.


நந்தன்
செய்தி ஆதாரம் : Times of India