த்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசை விமர்சித்து முகநூலில் பதிவிட்டதற்காக நவம்பர் 21-ஆம் தேதி கைதானார் மணிப்பூர் பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வங்கேம். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 12 மாத தண்டனையை வழங்கியுள்ளது மணிப்பூர் அரசு.

பத்திரிகையாளர் கிஷோர்சந்திராவுக்கு எதிராக மணிப்பூர் அரசின் குற்றச்சாட்டை விசாரிக்க, பிரிவு 9-ன் கீழ் தேசிய பாதுகாப்புச் சட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. டிசம்பர் 11 -ஆம் தேதி அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்தது.  அதில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிஷோர்சந்திராவை கைது செய்தது சரியே என தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் கிஷோர்சந்திரா வாங்கெமை விடுதலை செய்ய சொல்லி போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.

“தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் கடந்த கால நடவடிக்கைகளை பார்க்கும்போது அவருடைய செயல்பாடுகளில் ஆபத்து இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. இது அரசுக்கும் பொது அமைதிக்கும் கேடுவிளைவிக்கக்கூடியது. அவர் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்கூட தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற ஐயமும் இருக்கிறது. எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 13ன் படி அதிகபட்ச தண்டனையாக 12 மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டுமென கருதுகிறோம்” என ஆலோசனை குழு அறிக்கை தெரிவிக்கிறது.

உள்ளூர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய கிஷோர்சந்திரா, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இம்பால் மேற்கு போலீசால் கைது செய்யப்பட்டார். முன்னதாக மணிப்பூருக்கு தொடர்பில்லாத ஜான்சி ராணியைக் கொண்டாடிய பாஜக தலைமையிலான மாநில அரசையும் அதன் முதலமைச்சர் பிரென் சிங்கையும் கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவொன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். அதைக் காரணமாகச் சொல்லி கைது செய்தது மணிப்பூர் போலீசு.

படிக்க:
மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !
நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

ஆர்.எஸ்.எஸ். குறித்து பாஜக தலைமையிலான அரசு குறித்தும் கடுமையான மொழியில் பேசியதாகவும் இந்த நிகழ்ச்சியை எதிர்ப்பதால் மாநில அரசு தன்னை கைது செய்தாலும் பயப்படப்போவதில்லை என பேசியதாகவும் போலீசு குற்றம்சாட்டுகிறது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 295  மற்றும் 500  மற்றும் தேசவிரோத சட்டப் பிரிவான 124 ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டார். நவம்பர் 25-ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.  அப்போது, வீடியோவில் பேசியுள்ள கடுமையான மொழி குறித்து, “மக்களின் மொழியில் பொதுவான நபர் குறித்து பொதுப்படையாக வைத்த கருத்து” என விளக்கம் அளித்திருந்தார் கிஷோர்சந்திரா.

கிஷோர்சந்திராவை பிணையில் விடுவித்த நீதிபதி, “இவரின் பேச்சு, வேறுபட்ட இன மக்களிடையே, பிரிவுகளிடையே பகையை உருவாக்குவதாக உள்ளது என நான் கருதவில்லை. மாறாக, இந்திய அரசு அல்லது மாநில அரசு மீது உள்ள வெறுப்பு, கண்டனம், அதிருப்தியை காட்டுவதாகவும் இல்லை. இது பிரதமர் குறித்தும் முதலமைச்சர் குறித்து சொல்லப்பட்ட வெளிப்படையான கருத்து. இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராகவோ மணிப்பூர் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக சொல்லமுடியாது” என தெரிவித்திருந்தார்.

ஆனால், பிணையில் வந்த கிஷோர்சந்திரா உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதானார். இம்பாலின் புறநகரில் உள்ள மத்திய சிறையில் அதுமுதல் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்தபின், அவர் பணியாற்றிய உள்ளூர் தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். தொலைக்காட்சியின் ஆசிரியரும் , மணிப்பூர் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான புரோஜேந்திரோ நிங்கோம்பம், கிஷோரின் மற்றொரு சமூக ஊடகப் பதிவுக்காக மாநில முதலமைச்சரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். பத்திரிகையாளர் சங்கம் கிஷோரின் கைதை கண்டுகொள்ளவில்லை.

கிஷோரின் மனைவி தன் கணவர் மீதான தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டிருப்பதாக தெரிவிக்கிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்களை 15 நாட்களுக்குப் பிறகே குடும்பத்தினர் சந்திக்க முடியும் என்பதால் தன் கணவரை சந்திக்க முடியவில்லை என்கிறார்.

கிஷோரின் கைதைக் கண்டித்து டிசம்பர் 17-ஆம் தேதி மணிப்பூர் மாணவர் அமைப்பினர் டெல்லி மணிப்பூர் பவன் எதிரே போராட்டம் நடத்தினர்.  மணிப்பூர் மாநில பத்திரிகையாளர் சங்கம் பாஜக கைப்பாவையாகிவிட்ட நிலையில் இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவை கிஷோரின் கைதைக் கண்டித்தும் அவரை விடுவிக்கக் கோரியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.

கலைமதி

நன்றி: த வயர்.