நயன்தாரா செகல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜலட்சுமி பண்டிட்டின் இரண்டாவது மகள். இந்திரா காந்தியின் எதேச்சதிகார போக்கை எதிர்த்தவர். மோடி ஆட்சிக்கு வந்த பின்,  உ.பி.யில் நடந்த தாத்ரி கும்பல் கொலையை கண்டித்தும் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி போன்ற முற்போக்காளர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்தும் தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்தார் செகல். அவர் எழுதிய ‘ஒரு இந்துவாக இந்துத்துவாவை எதிர்க்கிறேன்’ என்கிற கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

‘நீங்கள் ஏன் இந்துத்துவாவை எதிர்க்கிறீர்கள்?’ எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் இப்படிக் கேட்டார்.  நான் ஏன் அதை எதிர்க்கிறேன்? நான் அவரிடம் ஏன் என்று சொன்னேன். நான் இரண்டு காரணங்களுக்காக அதை எதிர்க்கிறேன். ஒன்று தனிப்பட்ட காரணம்; மற்றொன்று அரசியல் காரணம்.

தனிப்பட்ட காரணத்திலிருந்தே தொடங்குகிறேன். நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது. நான் இந்துவாகப் பிறந்தேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் இதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  என்னுடைய மதம் எனக்கு முக்கியமானது. எனக்கு அது பலத்தையும் ஆதாரத்தையும் ஒவ்வொரு நாளும் தருகிறது. என்னுடைய வாழ்க்கை மற்றும் சிந்தனையின் மையம் அது. மற்ற நம்பிக்கைகளை மதிக்க அது கற்றுத்தருகிறது.  இந்த உலகம் ஒரு குடும்பம் என சனாதன தர்மம் கற்றுத்தருகிறது.

நயன்தாரா செகல்.

பல இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, நம்பிக்கை எதுவாக இருந்தாலும் மதம் முக்கியமானது.  கடவுள் மனிதர்களை தேர்வு செய்வதில்லை என உண்மையான மத நம்பிக்கை கொண்ட மக்களுக்குத் தெரியும். படைத்தவரின் கண்களில் நாம் அனைவரும் சமமானவர்களே.

எனவே, என்னுடைய மதம் சொல்லும் கருத்துக்கு மாறாக, தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.  தங்களுடைய மதத்தை கேள்வி கேட்பவர்களை குண்டுகளால் துளைப்பதும் டெல்லியிலிருந்து ஈத் பண்டிகைக்காக துணிகள் வாங்கிக்கொண்டு தனது கிராமத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுவனை ஒரு கும்பல் கத்தியால் குத்திக்கொன்றதும் சகித்துக்கொள்ள முடியாதது.

இப்படிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியானது, பாதிக்கப்பட்டவர்களை சொல்லமுடியா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.  வருத்தத்தில் இருக்கிற முகமது அக்லக் மற்றும் பெஹ்லு கானை  குற்றவாளிகள் ஆக்கிவிட்டு, அவர்களைக் கொன்றவர்கள் அடுத்த வெறுப்பு கொலையைச் செய்ய சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும் செய்தி, அவர்கள் குடும்பத்தினரை எந்த அளவுக்கு பாதித்திருக்கும்?

ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட வலியுடன் இப்படி வேண்டினார், “கர்த்தரே, அவர்கள் தெரியாமல் செய்ததற்காக அவர்களை மன்னியும்”. ஆனால், இந்துக்களாகிய நாம் அத்தகைய வேண்டுதலை செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் இந்துயிசத்தின் பெயரால் அதைச் செய்தார்கள், அவர்கள் என்ன செய்கிறோம் என அறிந்தே செய்தார்கள். இதற்காக அவர்கள் பெருமைப்படவும் செய்தார்கள்.  மதவெறித்தனம் அல்லது இனவெறி கட்டுக்கடங்காமல் போக அனுமதிக்கப்படும்போது உலகெங்கிலும் இதுபோன்ற சம்பவங்கள் பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வரலாறு உண்டு. ஆளுகிறவர்களின் கொள்கைகள் இதுபோன்ற வெறியர்களை சுதந்திரமாக ஆதரிக்கும்போக்கு கூடுதல் கவனத்துக்குரியது.

கும்பல் வன்முறைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இதற்கொரு அரசியல் காரணமும் உண்டு. ‘இந்துத்துவா’ என்பது ஒரு அரசியல் கண்டுபிடிப்பு. அது தன்னுடைய அரசியல் காரணத்துக்காக இந்துயிசம் மறு வரையறை செய்தது, அதாவது இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கக் கோரியது. அது இந்தியாவை இந்துக்களுக்கான நாடு என்கிறது. மற்றவர்கள் அனைவரும் ஊடுருவியவர்கள், வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது. வரலாற்று ரீதியாக இது தவறானது. ஒவ்வொரு நிலமும் நாகரிகமும் தனது கொள்ளளவை எட்டிய பிறகு, வேறு இடம் தேடிச் சென்றது என்பதே மனித குல வரலாறு. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நாமும் இடம்பெயர்ந்து வந்தவர்களே. இந்த உலகில் ‘சுத்தமான’ என எதுவும் இல்லை. நாம் அனைத்தும் கலந்தவர்கள். அதுதான் நம்மை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் முதல் பூர்வகுடிகளும் இந்த நிலத்தில் ஊடுருவியர்கள் அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள்தாம். கோழியா, முட்டையா எது வந்தது முதலில் என்பது முக்கியமல்ல. நாம் இப்போது இங்கே இருக்கிறோம், அனைத்து மத நம்பிக்கை கொண்ட மக்களும், மொழியினரும், கலாச்சாரத்தினரும், வாழ்க்கை முறைக்கொண்டவர்களும் இந்தியாவில் சம உரிமை உள்ள குடிமக்களே.

படிக்க:
ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்
கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

இந்த உண்மைகளை இந்துத்துவத்தால் ஜீரணிக்க முடியவில்லை. இந்துத்துவத்தின் ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொள்வோர் இதை இரண்டு வழிகளில் எதிர்கொள்கின்றனர். தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது மற்றவர்கள் என சுட்டிக்காட்டப்படுவோரை வெளியேற்ற நேரடியான இராணுவ நடவடிக்கை ஒன்றே வழி என தீர்வு சொல்கிறவர்கள். இது மகாத்மா காந்தியில் தொடங்கியது. கடவுள் ஒருவரேதான் அவரை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம் என அறிவித்ததற்காகவும்  ‘ஈஸ்வர அல்லா தேரே நாம், சப் கோ சன்மதி தே பகவான்’ என்ற மந்திரத்தை சொன்னதற்காகவும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  பன்முகத்தன்மைக்கும் விவாதத்துக்கும் எதிர்க்கருத்துக்கும் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பவைகளுக்கு 1948-ல் நடந்த இந்த சம்பவத்தை முன்னோடியாக இருந்தது.

இரண்டாவது தீர்வு, இதையே வரலாற்று நூல்களிலிருந்து  துடைத்தெடுப்பது, புதிதாக இந்துத்துவ கண்டுபிடிப்புகளை புகுத்துவது ஆகிவற்றை பதிப்பிக்கப்பட்ட பக்கங்களில் செய்வது. அக்பர் ஒரு சிறந்த தலைவர் அல்ல என்றும் ஹால்திகாடி போரில் மஹாரானா பிரதாப் சிங் வென்றார் என்றும் நமக்கு சொல்லப்படுகிறது. இந்துத்துவ அரசுகள் ஆளும் சில மாநிலங்களில் இது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று முசுலீம் படையெடுப்பை துடைத்தெடுக்கப்பார்க்கிறது.  இத்தகைய படையெடுப்புகளும் வெற்றிகளும் இந்து வரலாற்றை, இந்தியாவின் ‘உண்மையான’ வரலாற்றை மறைப்பதாக இந்துத்துவர்கள் கருதுகிறார்கள். எனவே, மற்றதெல்லாம் பொருத்தமற்றது.

நினைவுகளை அழித்தொழிக்கும் இந்த பிரச்சாரம், ஒரே மாதிரியாக சிந்திக்க வைக்க மனங்களை தயார்படுத்த அவசியமானது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காந்தியின் அகிம்சை கொள்கை இந்தியர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றியது என்றார்கள். பலவீனத்தைக் காட்டும் இரக்கத்தை நிராகரிக்கவும் அந்த பிரச்சாரம் கோரியது. ஆயுதம் தாங்கிய ஒரு பேரரசை எதிர்க்க ஆயுதம் இல்லாமல் நின்ற இந்தியர்களின் மன உறுதியை எப்படி இவர்களால் திரிக்க முடிகிறது?

அரசியல் குறித்து பெர்டிராண்ட் ரஸ்ஸல் ஒருமுறை இப்படிச் சொன்னார்… “முகமூடி அணிந்த பிசாசு!” இந்துத்துவ ஆட்சியில் இப்படித்தான் அரசியல் மாறிவிட்டது.  இலக்கியம், கட்டடக்கலை, மொழி, உணவு, இசை, நடனம், உடை மற்றும் பழக்கங்கள் என பரந்துபட்ட நமது பன்முக மதங்களும், பன்முக கலாச்சார பாரம்பரியமும் அவமரியாதைக்கு உள்ளாகின்றன; கைவிடப்படுகின்றன. இந்துயிசமும் அல்லாத ஒற்றை கலாச்சாரமாக அது சுருங்கிக்கொண்டுவருகிறது. இந்தியா எதற்காக நின்றதோ, எதற்காக உழைத்ததோ, பாதுகாத்த, பெருமைகொண்ட, போற்றிய பண்பாடு அதற்கு எதிரான திசையில் இருக்கிறது. பன்மையிலும் ஒருமை என்பதற்கு உதாரணமாக உலக நாடுகளால் போற்றப்பட்ட இந்தியா இப்போது மாறிவருகிறது.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

இதற்கு எதிர்மாறான அரசியல் அப்போது இருந்தது. அது மகாத்மா காந்தி, ஆழ்ந்த இந்துவான அவர், நவீன இந்தியாவுக்கு அடித்தளம் இட்டவர். அவர் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்பிய போது, அனைத்து மதத்தினரும், சாதியினரும், மொழியினரும், பாலினத்தாரும் ஒன்றிணைந்தார்கள். எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் இல்லாத வகையில் வர்க்கத்தினரையும், பெருந்திரளையும் அவர் ஒன்றாக சுதந்திர போராட்டத்தில் இணைத்தார்.  இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும், மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்படவே பலர் விரும்பினார்கள். ஆழமான நம்பிக்கை கொண்ட பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு என்பதாலேயே அது சாத்தியமானது. அப்போது மதம் தனிப்பட்ட விருப்பமாக கருதப்பட்டது.  தமக்கு எதை வணங்க விருப்பமோ அதை வணங்கும் உரிமையை அரசியலயமைப்பு வழங்கியது. பல்வேறு மதங்களை பின்பற்றிய இலட்சக்கணக்கான மக்கள், வெளிப்படையாக கடவுள் நம்பிக்கையற்றவராக தன்னை அறிவித்துக்கொண்ட, அனைத்து மத மக்களுக்கும் மரியாதை அளித்தவரை திரும்பத் திரும்ப பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். இப்படித்தான் எழுபதாண்டுகளுக்கு முன்பு இந்தியா பிறந்தது, வளர்ந்தது. இப்போது இந்துக்கள் என்றும் மற்றவர்கள் என்றும் இந்துத்துவம் இந்தியாவை இரண்டாவது முறையாக துண்டாட நினைக்கிறது.

அடையாளத்தை ஒருகுறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்கப்பார்ப்பது, தன்மைச் சாராதவர்களை வெளியேற்ற முனைவது, உண்மைக்கு இடமில்லை என இப்போதிருப்பதுதான் உண்மை என புதியதை திணிப்பது என உலகமே இப்போது இராணுவ தேசியவாதத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  கடுமையான உழைப்பில் உருவான ஜனநாயம் மற்றும் மதசார்பின்மையின் வாரிசுகளான நாம், இந்த போக்கிலிருந்து நாம் மாறுபட்டவர்கள் என நம்மை நிரூபிப்பது காலத்தின் கட்டாயம்.

நயன்தாரா செகலின் பல கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தபோதும், இந்துத்துவத்தை எதிர்க்கும் இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் அவருடைய கருத்தை ஏற்கலாம். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க நினைக்கும், கும்பல் கொலையாளிகளை கடுமையாக விமர்சிக்கும் செகலின் கருத்தை நாம் வரவேற்கலாம்.

தமிழாக்கம்: அனிதா

நன்றி: த வயர்.