சொராபுதீன் ஷேக், அவருடைய மனைவி கவுசர் பீ, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

“கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை” எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தார் சிறப்பு நீதிபதி எஸ். ஜே. சர்மா.  “சிபிஐ தரப்பு இந்த வழக்கை நிரூபிக்க முயன்றிருக்கிறது. ஆனால் இந்த ஆதாரங்கள், மூன்று குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டபோது, குற்றச்சாட்டை நிரூபிக்க சந்தேகத்தைக் கடந்து அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை. மூன்று விசாரணைகள் நடந்தபோது, ஆதாரம் குறைவாக உள்ளது” என 500 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் கூறியிருக்கிறார் நீதிபதி.

போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சொராபுதீன் கவுசர் பீ

“துளசிராம் பிரஜாபதியின் கடத்தல் கதையும் நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தாக்கல் செய்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சொராபுதீன் மற்றும் கவுசர் பீ- வுடன் மூன்றாவது நபராக பிரஜாபதி பேருந்தில் ஹைதராபாத்திலிருந்து சங்க்லி சென்று கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அவர் பேருந்தில் இல்லை. 2005, நவம்பர் 26-ஆம் தேதி அவர், நேரடியாக பில்வாராவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்” என தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக வருந்துவதாக கண்ணீர் சிந்துகிறது. “சொராபுதீன் மற்றும் பிரஜாபதி குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக பிரஜாபதியின் தாய் நர்மதா பாய்க்கு என்னுடைய வருத்தங்கள். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட எந்த நபருக்கும் எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என கைவிரித்திருக்கிறார் நீதிபதி.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்…

  1. எம். எல். பால் – அப்போது காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தவர், குஜராத் ஏடிஎஸ்,
  2. என். எச். தாபி – காவல் ஆய்வாளர், குஜராத் ஏடிஎஸ்
  3. பாலகிருஷ்ண சவுபே – அப்போது குஜராத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர்; இப்போது ஆய்வாளர்.
  4. அப்துல் ரஹ்மான் – காவல் ஆய்வாளர், ராஜஸ்தான்
  5. ஹிமான்சு சிங் ரஜாவத் – துணை ஆய்வாளர், ராஜஸ்தான்
  6. ஷியாம் சிங் சரண் -காவல் ஆய்வாளர், ராஜஸ்தான்
  7. அஜய் குமார் பார்மர், காவல் ஆய்வாளர், குஜராத்
  8. சாந்தாராம் சர்மா – காவலர், குஜராத்
  9. நரேஷ் சவுகான் – காவல் ஆய்வாளர், குஜராத்
  10. விஜய் குமார் ரதோடு – ஆய்வாளர், குஜராத்
  11. ராஜேந்திர குமார் ஜிராவாலா – ஆஸ்ரம் பண்ணையின் உரிமையாளர். கவுசரி பீ நான்கு நாட்கள் இங்கே அடைத்து வைக்கப்பட்டு, பிற்கு கொல்லப்பட்டார்.
  12. காட்டாமநேனி ஸ்ரீனிவாச ராவ் – துணை ஆய்வாளர், ஆந்திரா
  13. ஆஷிஷ் பாண்டியா – துணை ஆய்வாளர், குஜராத்
  14. யுவேந்தர் சிங் சவுகான் – காவலர், ராஜஸ்தான்
  15. நாராயண் சிங் சவுகான் – துணை கண்காணிப்பாளர், ராஜஸ்தான்
  16. கர்தார் சிங் ஜாட் – காவலர், ராஜஸ்தான்
  17. ஜெதுசிங் சோலன்கி – காவலர், குஜராத்
  18. கன்ஜிபாய் கட்சி – காவலர், குஜராத்
  19. வினோத்குமார் லிம்பாசியா – ஆய்வாளர், குஜராத்
  20. கிரண்சிங் சவுகான் – தலைமை காவலர், குஜராத்
  21. கிரண்சிங் சிசோடியா – காவலர், குஜராத்
  22. ரமன்பாய் பட்டேல் – துணை கண்காணிப்பாளர், குஜராத்

இந்த 22 பேரும் சதித் திட்டம் தீட்டுதல், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  “சொரபுதீனும் அவருடைய மனைவியும் பேருந்திலிருந்து கடத்தப்பட்டது தொடர்பாக மூன்று சாட்சியங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. அது தவிர, தங்களுடைய வழக்கை நிரூபிக்க வேறு ஆதாரமே இவர்களிடம் இல்லை” என்கிறார் நீதிபதி.

படிக்க:
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களின் மிரட்டல் காரணமாக பகுதி அளவே சாட்சியங்கள் அளித்ததாகக் கூறி, இரண்டு முக்கியமான சாட்சியங்கள் மீண்டும் சாட்சியளிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் 38 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆதாரம் வேண்டும் எனக் கூறி 16 பேரை நீதிமன்றம் விடுவித்தது.  பாஜக தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்த குலாப்சந்த் கட்டாரியா, குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் பி. சி. பாண்டே, குஜராத்தின் முன்னாள் மூத்த போலீசு அதிகார் டி. ஜி. வன்சாரா ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் முக்கியமானோர்.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வன்சாரா

முன்பே விடுவிக்கப்பட்ட போதும், இன்று வழங்கிய தீர்ப்பில் டி.ஜி. வன்சாராவுக்கு முலாம் பூசும் வேலையைச் செய்திருக்கிறது நீதிமன்றம். பிரஜாபதி கொலை செய்யப்படும் முன் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் பாண்டியா, வன்சாராவுடன் தொடர்பு கொண்டதை நிரூபிக்கவில்லை. சிபிஐ தரப்பில், விடுவிப்பில் செல்ல இருந்த ஆஷிஷ் பாண்டியாவை பிரஜாபதியை கொல்ல பணித்தார் வன்சாரா என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2012-ஆம் ஆண்டு நீதிபதி ஜே.டி. உத்பட் விசாரிக்க ஆரம்பித்த இந்த வழக்கு, அவருக்குப் பின் பி.எச். லோயா விசாரித்தார். 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் லோயா கொல்லப்பட்டார். அதன் பின் மதன் கோசாவி கைகளில் வழக்கு சென்றது. 2017 ஜூன் மாதம் அமித் ஷா உள்ளிட்ட பெருந்தலைகள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின் பொறுப்பேற்ற நீதிபதி ரேவதி மொஹிடே, ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணை குறித்த செய்தி சேகரிக்க கட்டுப்பாடுகள் விதித்தார்.  தீர்ப்பு வழங்கும் இன்றைய நாளில்கூட பல முக்கிய சாட்சியங்கள் மீண்டும் சாட்சியளிக்க விண்ணப்பித்திருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதுபோல, பிரஜாபதியின் தாய் நர்மதபாய், தான் மிரட்டப்பட்டதாக நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தார். ஆனால் இவற்றில் எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

வளைந்து கொடுக்காததால் மோடி கும்பலால் பழி வாங்கப்பட்ட ரஜ்னீஷ் ராய்

இந்நிலையில், சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னீஷ் ராய் என்ற விசாரணை அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது மத்திய அரசு.  கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெறுவதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியிருந்த ரஜ்னீஷின் மனுவை நிராகரித்துவிட்டது. விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தபிறகு அலுவகம் வருவதை அவர் நிறுத்தியதால், அவரை பணிநீக்கம் செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படுகொலைகளை நடத்தி முடித்த காவிகும்பல், இப்போது மத்தியில் ஆட்சியமைத்து தன்னுடைய ரத்தக்கறையை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் காவிகும்பலின் ரத்தவெறி அடங்கவில்லை, மேலும் மேலும் கொலைகள், மிரட்டல்கள், பழிவாங்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்