மீபத்தில் டெல்லியிலும் உத்தர பிரதேச மாநிலத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐஎஸ் மாதிரியான குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறி பத்து பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு. இவர்கள் ஆர்.எஸ். எஸ். அலுவலகத்தின் மீது பாஜகவினர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இந்தியாவில் தீவிரவாத, குறிப்பாக ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை…

*****

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் இறந்தார்கள்; 80 பேர் காயமடைந்தார்கள். கடைசியாக இந்தியாவில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதல் இது. இந்தியாவின் அண்டை நாடுகள் நட்புணர்வை வளர்த்துக் கொள்ளாத நிலையில், வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்ட நிலையில், சமூக ஊடகங்கள் இத்தகைய பணிகளுக்கு ஆட்களை எடுக்க களம் அமைத்து கொடுக்கும் நிலையில், இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவது நுண்ணறிவு அமைப்புகளின் கடமையாகும்.

அந்த வகையில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் முக்கிய வெற்றியை பெற்றிருக்கின்றன.  ஐ.எஸ்.ஐ.எஸ் மாதிரியான தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டதாக 10 பத்து பேரை கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பு செயல், இருவேறுவிதமான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது.

டெல்லி 1980-களில் தொடர் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டது. 1997-1998 ஆண்டுகளில் 30 சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. டெல்லியின் லஜ்பத் நகர், சரோஜினி நகர், கரோல் பாக், கன்னௌட் பிளேஸ் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிக திறன் வாய்ந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இது பல மனித உயிர்களை பலிகொண்டதோடு, பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. எனவே, தேசிய புலனாய்வு அமைப்பின் தடுப்பு நடவடிக்கையை ஆறுதலாக பார்க்கலாம்.

படிக்க:
♦ வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?
♦ யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் !

அதே வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைதுகள் நடந்தன. பின்னர், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சில வழக்குகளில், வேண்டுமென்றே சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.

இந்தப் பின்னணியில் தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேசியபோது, சிறுபான்மையினரை குற்றவாளியாக காண்பிக்கும் தொனி இருந்தது.

சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட தீபாவளி வெடி!

மத்திய அரசின் நாடகத்தில் தேடுதல் வேட்டையின்போது கைப்பற்றப்பட்டதாக பகிரப்பட்ட பொருட்கள் குறித்து, சமூக ஊடகங்கள் கேலி செய்தன. கைதானவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் இருந்த ஹைட்ராலிக் பைப்புகள் டிராக்டரில் பொருத்த பயன்படுத்தப்படுபவை என சுட்டிக்காட்டினர். தேசிய புலனாய்வு அமைப்பு அவற்றை ஏவுகணையில் பயன்படுத்தபடுபவை என்றது. விழாக்களின் போது வெடிக்கப்படும் வெடிகளையும் கைப்பற்றியதாக புலனாய்வு அமைப்பு வெளியிட்ட புகைப்படம் சொன்னது. இதை சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர்.

சமூக ஊடகங்களில் இவை கேலி செய்யப்பட்டாலும், கிடைக்கும் வெடிபொருட்களை வைத்து ஆபத்தான வெடிபொருட்கள் தயாரிக்க முடியும் என்பது உண்மையே. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து (The ISIS Phenomenon: South Asia & Beyond) நூல் எழுதிய கபீர் தனீஜா இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவுகளில் விரிவாக எழுதினார்.

‘தேசிய புலனாய்வு அமைப்பு ‘கைப்பற்றப்பட்ட’ பொருட்களில் இரண்டு பொருட்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. ஒன்று ராக்கெட் லாஞ்சர், மற்றது தீபாவளி வெடிகுண்டு’ என்று பதிவிட்ட கபீர், அதை விளக்கமாகவும் சொன்னார்.

“ஐ.எஸ் தாங்களாகவே ஆயுதங்கள் செய்துகொள்ளும் வழியை பின்பற்றுகிறவர்கள். ஆயுதங்கள் செய்வது குறித்த செய்முறைகளையும் அவர்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதே” என்கிறார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “ராக்கெட் லாஞ்சர், அடிப்படையில் குண்டுவீசும் ஏவுகணை செலுத்தி. இது நாட்டு குண்டுகளால் உருவாக்கப்பட்டது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மட்டுமல்ல, ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் கார், டிரக் போன்ற வாகனங்களின் பாகங்களைப் பயன்படுத்தி இத்தகைய ஏவுகணை செலுத்திகளை செய்கிறார்கள்” என்றவர் ஆதாரமாக சிரியாவில் புகைப்போக்கி பைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏவுகணை செலுத்திகளின் படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

“சிரியாவின் பிரச்சினைக்குரிய பகுதிகளில் தாங்களே ஆயுதங்களை உருவாக்கிக் கொள்வது பொதுவாக பார்க்கக்கூடிய விசயமாகிவிட்டது. ஐ.எஸ் இதையும் கடந்து பல நவீன ஆயுதங்களை செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறது. ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொறுத்தி துல்லியமாக தாக்கும் ஆயுதங்களைக்கூட அவர்கள் செய்து விட்டார்கள்” தன்னுடைய ட்விட்டில் கபீர் தெரிவித்திருக்கும் தகவல் இது.

படிக்க:
♦ மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
♦ சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…

இறுதியாக தேசிய புலனாய்வு அமைப்பின் கைது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஐ.எஸ் குழுவையும் ஐ.எஸ் தூண்டுதல் பெற்ற பைத்தியங்களையும் வேறுபடுத்தி காட்டாமல் பொது வெளியில் பகிர்வது, ஐ.எஸ் பிரச்சாரத்துக்கு உதவுவதாகவே அமையும்” என்றவர் புலனாய்வு அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு, ‘எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது’ எனவும் டி.வி. சானல்கள் இதை ஒட்டி நடத்திய கீழ்த்தரமான கலந்துரையாடல்கள்  குறித்தும் கடுமையாக சாடியிருக்கிறார்.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்இன் தாக்கம் புறக்கணிக்கக்கூடியதே

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் தாக்கம் குறித்த தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கபீர், 2000-களில் அந்த அமைப்பு பெற்றிருந்த ஆதரவு 2017-ல் குறைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்கத்தை பொறுத்தவரை இந்தியா பலவகையில் முரண்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையிலான முசுலீம்களைக் கொண்ட மூன்றாவது நாடான இந்தியாவில் பதிவான வழக்குகள் 200-லிருந்து 300-க்குள் இருக்கலாம் என்கிறார்.

இந்த ஆய்வறிக்கையில், “ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வழக்குகள் புறக்கணிக்கத்தக்கவையே. இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகசூழல் இசுலாமிய அடிப்படைவாத நடவடிக்கைக்கு உகந்ததாக இல்லை. சமூக – அரசியல் ரீதியாக அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருக்கின்றன” என்கிறார் கபீர்.

இத்தகைய 112 வழக்குகளை ஆய்வு செய்த அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா அல்லது ஈராக் சென்ற பல இந்தியர்கள் குறித்த தகவல்கள் எதுவும் சரியாக இல்லை என்கிறார். அதோடு, முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்டிய கபீர்,

ISIS-flags“இந்தியாவில் பதியப்பட்ட 95% வழக்குகள், ஐஎஸ்ஐஎஸ் குறித்த துண்டு பிரசுரங்கள் , அவர்களுடைய தலை துண்டிப்பு வீடியோக்கள், முக்கியமான அடிப்படைவாதிகளின் பேச்சுகள் போன்றவற்றின் அடிப்படையில் பதியப்பட்டவை. இந்த வழக்குகள் பலவற்றில் முகநூல் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது தனித்திருக்கும் ஓநாயின் தாக்குதல் என்பதான கருத்து விவாதிக்கப்பட்டது.  இதுபோன்ற புனையப்பட்ட வழக்குகள் ஐரோப்பியாவிலும் மேலும் சில வளர்ந்த நாடுகளிலும் அதிகரித்துவருகின்றன” என்கிறார் கபீர்.

தேசிய புலனாய்வு அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த செய்திகளில் கருத்து தெரிவித்துள்ள பலர், குறிப்பாக வட இந்தியர்கள் ‘தேர்தல் தோல்வி பயத்தில் மோடி அரசு பீதி கிளப்புகிறது’ என பகடி செய்திருந்தனர். இவர்கள்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மோடியை வளர்ச்சியின் நாயகனாக ஆதரித்த நடுத்தர வர்க்கத்தினர். அவர்களே  மோடியின் புளுகு மூட்டைகளை அவிழ்ப்பவர்களாக மாறும் அளவுக்கு பாஜகவின் லீலைகள் சந்தி சிரிக்கின்றன. எனினும் தனது இந்துத்துவா அரசியலை வைத்து மக்களை பிளக்க இனி வரும் காலங்களில் பாஜக எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. பாசிஸ்டுகள் மீது விழும் அடிகள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களது அடக்குமுறையும் அதிகரிக்கவே செய்யும். மொத்தமாக இந்துத்துவ அரசியலை மக்களிடையே அம்பலப்படுத்தி பாஜக-வை தனிமைப்படுத்தும்  நோக்கில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்பதே அடிப்படை.

கட்டுரையாளர்: கவுரவ் விவேக்
தமிழாக்கம்: அனிதா

நன்றி : த வயர்