தொழில்துறை நிலையாணை சட்டம்கர்நாடக அரசின் தொழிலாளர் விரோத போக்கு

ர்நாடக அரசு தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டத்திலிருந்து ஐ.டி நிறுவனங்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் விலக்கு கொடுக்கவிருக்கிறது. அதாவது, “தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946-ன் படி விதிமுறைகள் வகுப்பதற்கு ஜனவரி 25, 2014 அன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.டி நிறுவனங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அது வரும் ஜனவரி 2018 அன்று முடிவடைவதால் மீண்டும் கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. அதை கர்நாடக அரசு அங்கீகரித்துள்ளது. அதன் மூலம் ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக அரசு கூறியுள்ளது” என்ற செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது.

ஐ.டி. துறையின் வளர்ச்சிக்காக பேசும் கர்நாடக அரசு, அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது ஏன்?

முதலில், தொழிற்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946 தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை அல்லாத தொழில்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்.

இந்தச் சட்டம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடங்கிய நிறுவனங்களுக்கு பொருந்தும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பணி நிலைமை தொடர்பான கொள்கைகளை (policy) நிறுவனம் வகுக்க வேண்டும். விதிமுறைகளை தொழிலாளர்கள் மீறினால் எவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வரையறுத்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் பிரிவு 2(g) கீழ்க் கண்டவற்றை முறையாக்க வேண்டும் என்கிறது.

1. தொழிலாளர் வகை : நிரந்தரத் தொழிலாளர், தற்காலிக தொழிலாளர் பற்றிய தகவல்
2. தொழிலாளர்களின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், ஷிப்ட் முறை போன்றவை
3. வருகைப்பதிவேடு, காலதாமதமாக வருவது பற்றிய விதிமுறைகள்
4. தொழிலாளர் முறைகேடாக நடந்து கொண்டால் என்னென்ன தண்டனைகள்
வழங்கலாம் என்பது பற்றி (தற்காலிக நீக்கம், நிரந்தர பணி நீக்கம்)
5. பணி நீக்கம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
6. நிறுவனத்திற்குள் குறைகளை தெரிவிக்கும் வழிமுறைகள் ஏற்படுத்தியிருப்பது பற்றி

மேலும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் படி வகுக்கப்பட வேண்டும்.

நிறுவனங்கள் தங்களது பணியிடம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து ஆவணமாக தயாரித்து சான்றிதழ் அளிக்கும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் அதிகாரி அந்த மாநிலத்தில் உள்ள பெரிய தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அதை அனுப்பி ஒப்புதல் வாங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் நிறுவனம் கொடுத்த ஆவணத்தின் மீது தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால், அவ்வாறு கருத்து தெரிவிப்பதற்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது.

நிறுவனம் தயாரித்த கோப்புகளில் தொழிலாளர் உரிமைகளுக்கு விரோதமாக விதிமுறைகள் உள்ளதாக தெரிந்தால் தொழிற்சங்கம் சான்றிதழ் அளிக்கும் அதிகாரியிடம் தமது மறுப்புரையை தெரிவிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் அல்லது கோப்புகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர் நினைத்தால் அதை நிராகரித்து நிறுவனத்துக்கு சாதகமாகக் கூட செயல்படலாம். இவ்வாறாக இறுதி செய்த விதிமுறைகள் அடங்கிய கோப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த முப்பது நாட்களுக்குப் பிறகு அந்தக் கொள்கை ஆவணம் அந்த நிறுவனத்தில் விதிமுறைகளாக அமல் ஆகத் தொடங்கும்.

ஐ.டி நிறுவனங்களுக்கு விலக்கு ஏன்?

நிறுவனத்தின் கொள்கைகள் / விதிமுறைகள் தொடர்பாக தமது கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் சட்டரீதியாக தெரிவிப்பதற்கு தொழிலாளர்களுக்கு இவ்வளவு குறைந்த பட்ச வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை பின்பற்றுவதைக் கூட கார்ப்பரேட்டுகள் விரும்பவில்லை.

தொழிலாளர் சட்டங்களை பின்பற்றினால் தொழிலாளர்களை அடிமை போல வேலை வாங்க முடியாது என்பது முதலாளிகளின் ஒருமித்த கருத்து. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை குறைத்து இலாபத்தை அதிகரிக்கவும் அதற்கு ஏற்றாற்போல பாலிசிகளை வடிவமைத்துக்கொள்வதும்தான் ஐ.டி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை. கொள்கைகளையும், விதிமுறைகளையும் அவ்வப்போது தமது வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பது அவர்களது கோரிக்கை, அதை கர்நாடக அரசு ஆதரித்து நிற்கிறது.

எனவே, தமது நிறுவனத்துக்கான விதிமுறைகளை வகுத்து சான்றிதழ் பெற அனுப்ப மறுத்துதான் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் சார்பாக கர்நாடக அரசிடம் கால நீட்டிப்பு பெறப்பட்டுள்ளது. மீண்டும் அதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ஐ.டி நிறுவனங்களுக்கு நிலையாணை சட்டத்திலிருந்து விலக்கு கொடுக்கும் அரசாணையில் தொழிலாளர்களின் குறைகளை விசாரித்து தீர்வு காண்பதற்கு நிர்வாகத் தரப்பு/தொழிலாளர் தரப்பு இரண்டு தரப்பிலிருந்தும் சம எண்ணிக்கை பிரநிதிகளைக் கொண்ட GRC (Grievance Redressal Committee) அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பணி நீக்கம் உட்பட ஊழியர்கள் மீது எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தகவலை தொழிலாளர் உதவி ஆணையருக்கும், தொழிலாளர் ஆணையருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.டி நிறுவனங்கள் இந்த அடிப்படை நிபந்தனைகளை கூட பின்பற்றாமல் ஊழியர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்து வருகின்றன. அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இந்த அரசாணையின் அடிப்படையில் வழக்கு நடத்தி வருகின்றனர்.

ஆனால், பிற தொழில் நிறுவனங்களைப் போல ஐ.டி நிறுவனங்களின் அனைத்து கொள்கை விதிகளும் தொழிலாளர் துறை, தொழிலாளர் பிரதிநிதிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு முக்கியமானதாகும்.

ஐ.டி நிறுவனங்களின் பாலிசிகள் சட்டத்திற்குட்பட்டு வகுக்கப்படுமா?

ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கென்று தனித்தனியாக விதிமுறைகள் (பாலிசி) வைத்துள்ளன. உதாரணமாக அப்ரைசல் முறை என்பது சட்டத்தை பின்பற்றி நடப்பதில்லை. அதனால் நிறுவனங்கள் அதை ஆயுதமாக பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு குறைவான மதிப்பீடு வழங்கி அதன்மூலம் தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அப்ரைசல் முறை என்பது தொழிலாளர்களின் திறன்களை சோதித்தறிய பயன்படுகிறது என்று பொய்யான காரணத்தை கூறி இன்னும் அதே நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

படிக்க:
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்

இந்திய தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946 சட்டத்தின்படி ஐ.டி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தாங்கள் வகுத்துக் கொண்ட கொள்கை விதிமுறைகளை சட்டபூர்வமாக்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் விதிமுறைகளை (பாலிசி) சட்டப்படி சான்றிதழ் பெற்றதாக்குவதில் பெரிய பிரச்சனை இல்லை. தொழிற்சங்கத்தால் கருத்துக்கள்தான் தெரிவிக்க முடியும். அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். எனவே நடைமுறையில் நிறுவனங்கள் தமக்கு சாதகமான விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிறுவனமும், சான்றிதழ் வழங்கும் தொழிலாளர் துறையும் யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பதை தொழிலாளி வர்க்கத்தின் முன்பு அம்பலப்படுத்துவதாக சான்றிதழ் பெறும் நடைமுறை அமையும்.

ஐ.டி நிறுவனங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், தங்கு தடையின்றி இயங்க உறுதுணையாக இருப்போம். எனவே நிலையாணை சட்டத்திலிருந்து விலக்கு அளித்து ஐ.டி துறை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. இதிலிருந்தே நமக்கு தெரியவில்லையா அரசு யாருக்கு ஆதரவாக உள்ளது என்று? மணிக்கணக்கில் கம்பெனிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காகவா அல்லது பல்வேறு மோசடிகளை செய்து தொழிலாளர்களை வெளியேற்றி வரும் ஐ.டி நிறுவனங்களுக்கு ஆதரவாகவா என்பதை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் உழைக்கும் தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்ட அரசு என்ன சொல்லியிருக்க வேண்டும்? தமது விதிமுறைகளை முறைப்படி சான்றிதழ் பெறும் வரை மாதிரி நிலையாணி அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிருக்க வேண்டும்.

நாஸ்காம் (NASSCOM) யாருக்காக செயல்படுகிறது?

ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டதுதான் நாஸ்காம். ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான சலுகைகளையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டது. அதனோடு ஐ.டி நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களை வகுத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்வதும் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து லாபத்தை உறுதிசெய்யும் நடவடிக்கை வரை திட்டங்கள் போட்டு கொடுப்பதும் இதன் பிரதானமான வேலை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஐ.டி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் முதலாளிகளின் கூட்டமைப்புதான் நாஸ்காம்.

அந்த வகையில் நாஸ்காம் சார்பாக ஐ.டி நிறுவனங்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) சட்டம் 1946-ல் இருந்து இன்னும் ஐந்து ஆண்டுகள் விலக்கு வேண்டும் என்று கோரிக்கை கர்நாடக அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.

“தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் செயலிகள் ஐ.டி நிறுவனத்தில் நடைமுறையில் உள்ளதாகவும் அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நாஸ்காம் சொல்கிறது. எனவே தொழிலாளர் சட்டங்களை ஐ.டி நிறுவனங்கள் பின்பற்றத் தேவையில்லை. அவ்வாறு பின்பற்ற கோருவது ஐ.டி நிறுவனங்களுக்கு மேலும் சுமையாக அமைந்து விடும் என்கிறார் நாஸ்காம் துணைத்தலைவர் விஸ்வநாதன்.

தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுவது ஐ.டி நிறுவனங்களுக்கு சுமையாக இருக்கிறது என்பதன் பொருள் தொழிலாளர்களை அடிமைகள் போல உரிமைகளை இழந்த இயந்திரமாக பயன்படுத்த முயற்சி செய்வதைத் தடுத்து விடும் என்பதுதான். தொழிலாளர் சட்டங்களின்படி தொழிலாளர்கள் ஒற்றுமையாக தொழிற்சங்கமாக ஒன்று கூடி அப்ரைசல் மோசடி, சம்பள மோசடி இன்னும் பல நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனத்தை கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் அந்தச் சுமை.

தொழிற்சங்கமாக தொழிலாளர்கள் ஒன்று கூடிவிட்டார்கள் என்றால் தொழிலாளர்களை தனித்தனியாக மிரட்ட முடியாது. அதனால் தொழிலாளர்களை ஏமாற்றி கொள்ளை லாபத்தை குவிப்பதற்கு தடை ஏற்பட்டு விடும் என்ற பயமும் அடங்கியிருக்கிறது.

வருமானம் குவிக்கும் ஐ.டி நிறுவனங்கள்

கர்நாடகாவில் மட்டும் 3500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிட்டத்தட்ட $32 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி ஆகிறது. நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 30 லட்சம் பேரும் இந்தத் துறைக்காக உழைத்து இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்குகின்றனர். அது மாநிலத்தின் வருமானத்தில் 25% பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகா 38% பங்களிப்பு செய்கிறது.

தமிழ்நாட்டிலும் பல லட்சம் தொழிலாளர்கள் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார்கள். 2017-2018 காலத்தில் தமிழ்நாட்டில் இந்தத் துறையில் 1111.79 மில்லியன் வருமானம் வந்திருக்கிறது. இந்தியாவில மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா – 1215 மில்லியன் வருவாயுடன் இரண்டாமிடத்திலும், தெலுங்கானா- 851.76 மில்லியன் ஈட்டி நான்காமிடத்தில் உள்ளன.

இப்படியாக வருமானத்தை குவிக்கும் ஐ.டி நிறுவனங்கள் அதற்காக உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதில் உறுதியாக உள்ளன.

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று ஐ.டி நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. கட்டாய பணிநீக்கம், ராஜினாமா செய்ய வற்புறுத்துவது, ராஜினாமா செய்யாதவர்களை இனி எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காத மாறி தடுத்து நிறுத்திவிடுவோம் பிளாக் லிஸ்டில் போட்டுவிடுவோம் என்று மிரட்டுவது என்ற பல்வேறு வழிகளில் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றி வந்தனர்.

2015-ல் பு.ஜ.தொ.மு. – ஐ.டி ஊழியர்கள் பிரிவு (NDLF) கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் பொருந்தும் என்ற உத்தரவை தமிழக அரசிடமிருந்து பெற்றது. ஊழியர்களுக்கு எதிராக ஐ.டி கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்த எழுதப்படாத உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தீர்வுதான் என்ன?

தொழிலாளர் தங்களது குறைகளை தெரிவிக்க நிறுவனங்களில் செயல்படும் வசதிகளின் யோக்கியதை என்ன என்று அதில் மோதிப் பார்த்து எந்த தீர்வும் கிடைக்காத ஊழியர்களுக்கு தெரியும். இந்நிலையில் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவது தமக்கு சுமையாக இருக்கும் என்று அவற்றில் இருந்து விலக்கு கேட்கின்றன ஐ.டி நிறுவனங்கள். ஆனால், நிறுவனங்கள் உருவாக்கும் மாற்றும் விதிமுறைகளோ ஊழியர்களுக்கு எதிராகவும், நிறுவனத்தின் லாபத்தை உறுதி செய்வதாகவுமே அமைகின்றன.

கர்நாடகாவில் விதிவிலக்கு அளிக்கப்படும் நடைமுறையை பிற மாநிலங்களிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அபாயமும் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஐ.டி தொழிலாளர்களாகிய நாம் சங்கமாக ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராட வேண்டும்.


சுகேந்திரன்
ஆதாரம்:
♦ Karnataka likely to continue Employment Act exemption for IT sector 
♦ Tamil Nadu’s IT, ITeS exports pick up pace in 2017-18, grow 8.55%
நன்றி: new-democrats.com