முன்குறிப்பு:- சிலருக்கு இந்த பதிவை படித்த பின்னர் வயிறு, நெஞ்சு என்று சகலமும் எரியும். அதனால் இப்பதிவை தவிர்க்கவும்.

ன்று (ஜன-15) காலை எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இரண்டு பிராமணர்கள் வந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயதிருக்கும் . வெள்ளை வேட்டி நெற்றி நிறைய திருநீறு , தலையில் குடுமியுடன் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் நின்று ஏதோ மந்திரங்கள் சொன்னார்கள். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர்கள் காசு கொடுத்தார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டு முன்பும் நின்று மந்திரங்கள் சொன்னார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்து அவர்களிடம் காசு கொடுத்தார்கள். பொதுவாக கூர்க்கா, போஸ்ட்மேன்கள், குப்பை சேகரிப்பவர்கள் எங்கள் பகுதிக்கு பொங்கல் இனாம் வாங்க வருவார்கள். வருடம் முழுக்க அவர்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தரும் ஊக்கத்தொகை அது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் யாருன்னே தெரியாத இரண்டு பேர் இப்படி வந்து காசு வாங்கிக்கொண்டு போவது வியப்பாக இருந்தது. சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இது ஒருவித பிச்சை என்று.

சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிச்சைக்காரர்களை சந்திக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாகவும், விநோதமாகவும் இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றால் நாம் அவர்களிடம் சற்று இரக்கமாகவோ, பரிதாபமாகவோத்தான் காசு போடுவோம். ஒருசிலர் அருவருப்பாக பார்த்து துரத்துவதுமுண்டு. ஆனால், முதல்முறையாக ஒரு சமூகம் பிச்சைக்காரர்களை மரியாதையாகவும், கவுரமாகவும் நடத்துவதை இன்று காலையில்தான் எங்கள் தெருவில் பார்த்தேன். அந்த இரண்டு பேருக்கும் உடலில் எந்த குறையும் இல்லை. திடமாகவே இருந்தார்கள். உடல் குறையுள்ளவர்கள் கூட சுயமரியாதையுடன் ஏதாவது ஒரு வேலை செய்யும் இந்த காலத்தில் வெறும் இரண்டு மந்திரங்கள் மட்டுமே சொல்லி தெருமுழுக்க பிச்சை எடுத்துக்கொண்டு போவது என்ன நியாயம்? எனது அம்மாவிடம் சொன்னபோது வாயில் அடிச்சுக்கஅது பிச்சை இல்லை. தருமம். யாசகம் கேட்டு வரும் பிராமணர்களை துரத்துவது பஞ்சமாபாவம் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது. பிச்சை எடுத்தாலும் கூட அதுக்கு ஒரு பிறப்பு வேண்டும். இதுவே வேறு ஜாதி ஆள் ஒருத்தர் இப்படி கவுரவப்பிச்சை கேட்டு வந்திருந்தால் கண்டிப்பாக எங்கள் தெரு ஆட்கள் அடித்து விரட்டியிருப்பார்கள். வீட்டுக்கு வெளியே வரிசையாக துணிகள் காயவைத்திருந்தோம். காற்றில் பறந்த அந்த துணிகள் மேல் உரசிவிடாமல் கவனமாக சென்றார்கள். பொதுவாக பிராமணர்கள் ஜலம், காசில் மட்டும் தீட்டு பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

பிராமணர்கள் மேல் எனக்கு உள்ள வெறுப்புதான் இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். சென்னையில் உள்ள பிரபலமான அபிராமி மால்-ஐ இம்மாத இறுதியில் மூடப்போகிறார்கள். அதன் உரிமையாளர் செட்டியார். அவர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அபிராமி மால்-ஐ இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்போவதாகவும் அங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு விற்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார். செட்டியார்கள் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள். எப்படி இந்த முடிவு என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் (புரசைவாக்கம்) ஜெயின் சமூக மக்கள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர்கள் பொதுவாக கூடிவாழ்வார்கள். அநேகமாக அவர்கள் வாங்குவார்கள் என்று நினைத்துதான் இதை யோசித்திருக்கலாம்.

பத்தில் எட்டு வீடுகளை ஜெயின்கள் வாங்கினால் கூட மிச்சம் இரண்டு வீட்டில் சைவ உணவு உண்பவர்களை வைத்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் யோசித்திருக்கலாம்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பிரச்சாரம்.

ஜெயின் சமூகம் என்றதும் இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஜெயின்களில் ஏழைகள் குறைவு. அப்படி இருந்தாலும் மற்ற ஜெயின்கள் அவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட செட்டியார்களும் இப்படித்தான். இப்படி இந்தியாவில் ஆயிரம் சமூகங்கள் உள்ளன. எல்லா சமூக ஏழைகளும், பிச்சைக்காரர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. உலகத்தில் இரண்டே வர்க்கம்தான். பணம், பணம் இல்லாதவன் என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனால் அதிலும் பிரிவுகள் உள்ளன. எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சிறப்பு கவுரவம் கிடைப்பதில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது மெல்ல மெல்ல ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நண்பர் ஊரறிந்த சிந்தனையாளர். எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் (முன்பு நடந்த ஒரு பஞ்சாயத்தில் என்னை பிளாக் செய்துள்ளார் மடையர். இல்லாவிட்டால் அங்கேயே பதிலடி தந்திருப்பேன்) எழுதிய பதிவொன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை கொண்டுவந்தார். அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம் அந்த பதிவு. பதிவின் சாராம்சம். இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொண்டுவரவேண்டும். முதல் பத்தாண்டுகளுக்கு பிராமணர்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும். பிறகு மெல்ல சமத்துவம் (!?) வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் இவர்களுக்கு கண்போகாது. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால் தன்னோட இலைக்கும் வந்துவிடும் இல்லையா?

இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் கூட இந்த தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அது சலுகை இல்லை. பல நூறாண்டு கால அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமை. அப்படி என்றால் ஏழைகள் அப்படியே ஏழைகளாக இருக்கவேண்டுமா? அப்படி இல்லை. ஆனால் கண்டிப்பாக எல்லா ஜாதி ஏழைகளும் ஒன்றில்லை. எல்லா ஏழைகளையும் நாம் பிச்சைக்காரர்கள் போல நடத்துவதில்லை என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகநூலில்: Vinayaga Murugan