ச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஜனவரி 2-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. காவிகளின் மிரட்டல் காரணமாக பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு, வீடு திரும்பிய அவரை மாமியாரே கட்டையால் தாக்கிய அவலம் நடந்துள்ளது. மாமியார் தாக்கியதில் தலையில் காயமுற்ற கனகதுர்கா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா (இடது), பிந்து (வலது)

கடந்த செவ்வாய்கிழமை வீடு திரும்பிய கனகதுர்காவை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து அவருடைய மாமியார் சண்டை போட்டுள்ளார். அதையும் மீறி உள்ளே சென்ற கனகதுர்காவை அடிக்க பாய்ந்திருக்கிறார். தடுக்க முயற்சித்தபோது, உருட்டுகட்டையால் தாக்கியிருக்கிறார். பாதுகாப்புக்காக வெளியே இருந்த போலீசார் அடிபட்ட கனகதுர்காவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெரிந்தல்மன்னா காவல் நிலையத்தில் கனகதுர்கா அளித்த புகாரின் பேரில் பிரிவு 314 மற்றும் பிரிவு 324 ஆகியவற்றின் கீழ் அவருடைய மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது உடனிருந்த கனகதுர்காவின் அம்மாவிற்கு காயங்கள் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் இருக்கிறார்.

“அவருடைய மாமியார் கட்டுப்பெட்டித்தனமானவர். கனகதுர்கா சபரிமலை செல்வதை அவர் விரும்பவில்லை” என கனகதுர்காவின் தோழி ஒருவர் சொல்கிறார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வைத்து கேரளத்தில் காலூன்றப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக காவிகள்,  அங்கே தொடர்ந்து திட்டமிட்டு வன்முறையை தூண்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது, சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பேரழிவு ஏற்படும், குடும்பத்துக்கு ஆகாது, பெண்களுக்கு ஆகாது என பல கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.

படிக்க:
♦ சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக !
♦ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !

கனக துர்கா தன்னை தாக்கியதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதியான அவரது மாமியார் சுமதி

கடந்த ஜனவரி 2-ம் தேதி இதுநாள் வரையில் சபரிமலையில் கடைப்பிடிக்கப்பட்ட ஆணாதிக்க பேதத்தை பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் உடைத்தெறிந்தனர்.  காவிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்தனர்.  இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வீடு திரும்பிய நிலையில், சொந்த மாமியாராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் கனகதுர்கா.

காலங்காலமாக பெண்களையே பெண்களுக்கு எதிராக நிறுத்தும் மதங்களின் உச்சமாக பார்ப்பனிய இந்து மதம் இருக்கிறது. தற்போது நடந்துகொண்டிருக்கும் காவிகளின் ஆட்சியில் பழமைவாதம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, கேரளத்தில் காவி இருள் சூழ்ந்துள்ளதை இந்த சம்பவம் நமக்கு எச்சரிக்கையாக சொல்கிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்: Woman Who Entered Sabarimala Injured in Attack by Mother-In-Law