ணக்கம், நாம் இப்போது பழங்களைப் பற்றி பேசப் போகிறோம். ஒரு கேள்வியோடு இதை தொடங்குவோம். இப்போது என்னிடம் ஒரு வாழைக்காய் உள்ளது, அதில் இனிப்பு சுவை இருக்காது, அதில் உள்ள சர்க்கரையின் அளவு 25 கிராம் என நான் உங்களிடம் கூறிவிடுகிறேன். பின் நான்கு நாட்கள் கழித்து அது வாழைப்பழம் ஆகிவிடும், இப்போது இந்த பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதே 25 கிராமை ஒத்து இருக்குமா அல்லது கூடியிருக்குமா? சற்று சிந்தியுங்கள்.

இந்த கேள்விக்கு பெரும்பாலான மக்கள், சர்க்கரையின் அளவு கூடியிருக்கும், என்றுதான் கூறுகிறார்கள், முன்பு 25 கிராம் இருந்தது என்றால் இப்போது 50 கிராம் அல்லது 100 கிராம் இருக்கும் என்கிறார்கள். அந்த கூடுதல் அளவு எங்கிருந்து வருகிறது காற்றிலிருந்து வருமா என்றால் வராது.

அப்படியென்றால், முன்பு வாழைக்காயில் இருந்த சர்க்கரையின் அதே அளவுதான் இந்த வாழைப்பழத்திலும் இருக்கும். பழத்தின் சுவை மட்டுமே மாறியிருக்கும். வாழைக்காயிலிருந்த கார்போஹைட்ரேட்டானது இனிப்பு சுவை உடைய இரசாயன மாற்றமடைந்துள்ளது அவ்வளவே. இதன் மூலம் நாம் தெளிய வேண்டியது என்னவென்றால், நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்புக்கும் அதன் சர்க்கரை அளவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதே. இனிப்பு என்பது சுவை, சர்க்கரை என்பது அந்த பொருளின் தன்மை அதாவது கார்போஹைட்ரேட்.

இதே போல் நாம் பல சான்றுகளை கூற முடியும். மாங்காய் என்றால் புளிக்கும், அதே மாங்காய் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்து இனிப்பு சுவை உடையதாக மாறும். ஆனால் இரண்டிலும் சர்க்கரையின் அளவு மாறாமல் ஒரே அளவில் தான் இருக்கும்.

உங்களுக்கு வேடிக்கையான இன்னொரு விஷயத்தை கூறுகிறேன். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் ஒரு பிஸ்கட்டை விரும்பி உண்பார்கள், அந்த பிஸ்கட்டின் பெயர், எம். மில் தொடங்கி இ. என்ற எழுத்தில் முடியும். அந்த பிஸ்கட் நிறுவனம் கூட இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடியதுதான் என விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் பெரும்பான்மையோர் இதை உண்கிறார்கள். காரணம் மற்ற பிஸ்கெட்டில்  உள்ளது போல் இதில் இனிப்புச்சுவை இல்லை என்கிறார்கள். ஆனால் அந்த பிஸ்கெட்டிலும் மற்ற பிஸ்கெட்டில் உள்ள அதே அளவு சர்க்கரைதான் உள்ளது.

இப்போது பாகற்காய்க்கு வருவோம், பாகற்காய் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக உள்ளது என்றால், அதன் கசப்பு சுவை முக்கிய காரணம். சர்க்கரையின் இனிப்பு சுவையை பாகற்காயின் கசப்பு குறைக்கும் அல்லது சமன்படுத்தும் என்பது நம்புகிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கை.

ஒருவர் மிளகாய் சாப்பிடுகிறார், அது அவருக்கு வாய் எரிச்சலை உண்டு செய்கிறது, உடனே அவர் சர்க்கரையை அள்ளி சாப்பிடுகிறார், இது மிளகாயால் ஏற்பட்ட வாய் எரிச்சலை தணிக்கிறது. ஆனால், இதற்கும் உடலின் உட்புறம் சென்ற கலோரிக்கும் எந்த தொடர்புமில்லை. எந்த சுவையானாலும், கழுத்திற்குக் கீழ் அது ஒன்றுமில்லைதான். நீங்கள் எதை உண்டாலும் கழுத்திற்கு கீழ் அது மாவுப்பொருளா, புரதமா, கொழுப்பா என்பதைத்தான் உடல் பார்க்குமேயன்றி அது முதலில் இனித்ததா புளித்ததா என்பதெல்லாம் உடலினுள் ஏற்படும் மாற்றத்திற்கு சம்பந்தமில்லாதது.

அதேபோல் தான் சிலர் வேப்பிலையை உண்பது வேப்பிலை ஊற வைத்த தண்ணீரை குடிப்பது என்பதெல்லாம், சர்க்கரை நோய்க்கு நல்லதென்று கருதுகிறார்கள். ஏன் நம்புகிறார்கள் என்றால் வேப்பிலையின் கசப்புத் தன்மைதான் காரணம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது சுவை வேறு, உடலில் உள்ள சர்க்கரை வேறு. பாகற்காயில் சர்க்கரையை குறைக்கக்கூடிய மூலக்கூறு உள்ளதா என்பது எனக்கு தெரியாது. அப்படி உண்மையிலேயே இருக்குமானால், அதை காலை இரவு என தினமும் உண்டால் தான் அதனால் பயனிருக்கும். அப்படியில்லாமல், நான் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை என சாப்பிட்டுவிட்டு, நானும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்கிறேன் அதனால் எனது சர்க்கரை நோய் குறையும் என நம்புவது பலனளிக்காது.

எனவே பழங்களை பற்றிய உண்மைகளில் நாம் முதலில் அறிந்து கொண்டது என்னவென்றால், உண்பனவற்றின் சுவைக்கும், அதிலுள்ள சர்க்கரை அளவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதுதான்.

இரண்டாவதாக இந்த காணொளியை பாருங்கள், இதை பதிவேற்றியவர் பிஸ்வரூஃப் சௌத்திரி என்பவர். இவர் என்ன செய்கிறார் என்றால், ஒருவரது உடம்பிலிருந்து ரத்தத்தை எடுத்து அதிலுள்ள சர்க்கரையின் அளவை எல்லோரிடமும் காண்பிப்பார். பிறகு அதில் ஃபிரக்லோஸ் என்ற இரசாயனப் பொருளை சேர்க்கிறார். ஃபிரக்டோஸ் என்பது பழங்களில் உள்ள ஒருவிதமான சர்க்கரை. இதை சேர்த்தப் பிறகு சர்க்கரையின் அளவு குறைவதை அவர் மீண்டும் காண்பிப்பார். இதன் மூலம் அவர் கூறவருவது பழங்களை சேர்த்தால் சர்க்கரை குறையும் என்பதைத்தான். சமீபகாலமாக வந்த நிறைய வீடியோக்களில் நிறைய பேரை முட்டாளாக்கிய பெருமை இந்த காணொளிக்கு உண்டு.

காரணம், உணவிலிருக்கும் சர்க்கரையை நாம் பார்த்தோமேயானால், அது குளூகோஸ், ஃபிரக்டோஸ், சுக்ரோஸ் என பலதரப்பட்ட மூலக்கூறுகளாக உள்ளது. ஆனால் நம் ரத்தத்திலோ வெறும் குளூகோஸ் மட்டும்தான் உள்ளது. நாம் என்ன உணவு உட்கொண்டாலும் அது கரைந்து நம் ரத்தத்தில் கலக்கும் போது நமது கல்லீரல் வழியாகத்தான் செல்கிறது. உணவை குளூக்கோஸாக மாற்றி ரத்தத்தில் ஏற்றும் வேலையை இந்த கல்லீரல் தான் செய்கிறது.

இப்போது நாம் பழங்களை அதிகமாக உண்கிறோமென்றால், அந்த பழங்களில் உள்ள ஃபிரக்டோஸ் கல்லீரல் மூலம் குளூகோஸாக மாறி ரத்தத்தில் கலக்கும். நம் ரத்தத்தில் ஃபிரக்டோஸ் என்ற மூலப்பொருளே கிடையாது. அவ்வாறு இருக்க, இந்த காணொளியில் ரத்தத்தில் ஃபிரக்டோஸை சேர்த்தால் சர்க்கரை குறையும் என்று காட்டுவது வேடிக்கையான விஷயம்.  ஆனால் இதை நம்பி ஏமாந்த மக்கள் நிறைய பேர் உள்ளனர். இன்றும் கூட ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த காணொளியும் இன்னும் பரவிக் கொண்டுதானிருக்கிறது. இதை நம்பி நிறைய பேர் பழங்களாக உட்கொண்டு சர்க்கரை கூடியதைத்தான் நான் கண்டிருக்கிறேன். நாம் தெளிவுபெற வேண்டியது இதுதான், பழங்களில் இருக்கும் சர்க்கரையும், ரத்தத்தின் சர்க்கரையளவைக் கூட்டும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ சர்க்கரையின் அறிவியல்

மூன்றாவதாக, பழங்கள் சர்க்கரையின் அளவைக் கூட்டுகிறது என்றால், சர்க்கரை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாமா என்றால்? ஆம் உண்ணலாம். பழங்களில் சர்க்கரை உள்ளது என்றாலும் அதிகளவில் கிடையாது.

உதாரணத்திற்கு ஒரு இட்லியை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் 60-70 கலோரிகள் உள்ளது, ஒரு கப் காப்பி அல்லது தேநீரிலும் 60-70 கலோரிகள் உள்ளது. ஒரு கோப்பை பாலிலும் சராசரியாக 70 கலோரிகள் உள்ளது. ஆனால், நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதேபோல் 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் மட்டுமே உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 100 கலோரிகள் உள்ளது. இவ்வாறு ஒப்பிடுகையில் பெரும்பாலான பழங்கள் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவை விட கலோரி கம்மியாகத்தானிருக்கும்.

நம் உடலானது கலோரிகளை மட்டும் தான் கணக்கிலெடுக்குமேயன்றி எதன் மூலம் அந்த கலோரி வருகிறது என்று கணக்கில் கொள்ளாது. உதாரணத்திற்கு, மாம்பழம் சர்க்கரை நோய்க்கு எதிரி என்று கூறுவார்கள். இது தவறான தகவல் 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது இது, 100 கிராம் அரிசியை, 100 கிராம் சப்பாத்தி போன்ற உணவுகள் மூலம் பெறும் கலோரிகளை விட குறைவுதான். ஆனால், 100 கிராம், வாழைப்பழத்தில் 100 கிராம் கலோரிகள் உள்ளது. அதற்காக சாப்பிடாமல் இருக்கலாமா என்றால், இல்லை சாப்பிடலாம் ஆனால் அளவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே எந்த ஒரு பழத்தையும் சுவையை வைத்து நாம் தரம் பிரிக்க தேவையில்லை. அனைத்து வகையான பழங்களையும் நாம் உட்கொள்ளலாம். ஏன் பழங்களை மட்டுமே நாம் ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம். காலை உணவாக ஒரு வாழைப்பழம், கொய்யாப்பழம் என நாம் உண்ணலாம் அல்லது இரண்டு மூன்று பழங்களை சேர்த்து நாம் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பக்கம் பழங்களை உண்டால் சர்க்கரையின் அளவு கூடிவிடும் என சிலர் கருதுகிறார்கள். மறுபக்கம் சிலர் பழங்களை மட்டுமே உண்ணலாம் என கருதுகிறார்கள். நாம் கூறவருவது பழங்களை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான். இன்னொரு விவரம் கிளைசீமிக் இண்டெக்ஸ் (GI) என்ற ஒன்று உள்ளது. இந்த எண்ணை வைத்து மிகவும் அச்சுறுத்துவார்கள். இந்த எண் எதை குறிக்கிறது என்றால், எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது எவ்வளவு வேகமாக நமது ரத்தத்தில் சர்க்கரையை கூட்டுகிறதோ அதை குறிப்பதுதான் இந்த ஜி.ஐ (GI).

இப்போது குளூகோஸை எடுத்து உண்டோமேயானால், அது சர்க்கரையின் அளவை உடனே உயர்த்தி விடும். சாப்பாடு சாப்பிடுகிறோம் என்றால் அது செரிமானமாக சற்று தாமதமாகும் என்பதால், சர்க்கரையின் அளவை மெதுவாக கூட்டும், உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டால் அது இன்னும் மெதுவாக கூட்டும், இதை வைத்து பழங்களை உட்கொண்டால் அது ஜி.ஐ எண்ணை கூட்டிவிடும் என்பார்கள். இது முற்றிலும் தவறானது. அதிகமான பழங்களில் இந்த எண் அரிசியை விட குறைவு என்பதே நிதர்சனம்.

அரிசிக்கு இந்த ஜி.ஐ எண் 60, 65, 50, 55  என மாறுபடும். ஆனால் பெரும்பாலான பழங்களில் குறிப்பாக மாம்பழம், வாழைப்பழம் உட்பட ஜி.ஐ எண் 50 முதல் 55 தான். இதன்மூலம் நாம் தெளியவேண்டியது பழங்களை உட்கொண்டால் சர்க்கரை விரைவாக கூடும் என்பது உண்மைக்கு புறம்பான ஒன்று.

இதுபோல், பழங்களிடம் நாம் தவறான அறிவியலை முன்வைத்ததால்தான் நாம் பெரும்பாலும் அதை ஒதுக்கி வைத்துள்ளோம். பழங்கள் மீது சுமத்தப்படும் மற்றொரு பொய் பழங்களை உட்கொண்டால் சளிப்பிடிக்கும் என்பது. இதுவும் தவறான புரிதலே, சளிக்கும் காரணம் அலர்ஜி அல்லது கிருமிகள் தான். பழத்தை உட்கொண்டால் அந்த கிருமி நம்மைத் தொற்றிக் கொள்ளும் என்பதும் பொய்.

நான் பழச்சாற்றைக் குடிப்பேன் ஆனால் பழங்கள் உண்ண மாட்டேன் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறு, பழங்கள் உண்பதற்கே குடிப்பதற்கல்ல.. பழங்களில் நிறைய நல்ல விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட். நாம் பழத்தை பழச்சாறாக உட்கொள்ளும் போது இது ஆவியாகி வெளியேறி விடுகிறது.

பழச்சாறு சில சமயங்களில் இனிக்காது. ஆதலால் நாம் சர்க்கரையை உடன் சேர்த்துக் கொள்வோம். இதனால் உடலின் சர்க்கரை அளவு கூடும். ஆகவே பழத்தை பழச்சாறாக உட்கொள்ள வேண்டுமென்பது யாருக்கும் பரிந்துரைக்கப்பட்டது அல்ல. பல்லில்லாத குழந்தைகள் முதியவர்களன்றி மற்ற எல்லோரும் பழத்தை கடித்து உண்பதே சிறந்தது.

இவைதான் பழங்களை பற்றிய உண்மை. இதுவரை நாம் பழங்களை பற்றி அறிந்து கொண்டது என்னவென்றால்,

  • உணவுப்பொருளின் சுவைக்கும், சர்க்கரைக்கும் சம்பந்தம் கிடையாது.
  • பழங்கள் உட்கொண்டால் சர்க்கரை அளவு குறையும், சர்க்கரை உடம்பில் ஏறாது என்பது உண்மையல்ல. ஆகையால் பழங்களை ஒருவேளை உணவாக சர்க்கரை நோயாளிகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
  • பழங்களை சாறாக குடிக்காமல், மென்றுதான் உண்ண வேண்டும்.

இந்த காணொளியின் மூலம், பழங்கள் பற்றிய தவறான சில நம்பிக்கைகள் மாறியிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.