புகழ் பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தன்னகத்தே கொண்ட பஞ்சாயத்துதான் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்காவில் உள்ள கூத்தப்பாடி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் தாய் கிராமமான கூத்தப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதே ஊரில் வன்னிய சாதியை சேர்ந்த சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆசிரியப் பெருமக்கள் உள்ள கிராமம் இது. காவிரி இந்த பஞ்சாயத்தில்தான் முதலில் நுழைகிறது. ஆனால் இந்த தண்ணீர் இங்குள்ள விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவில் பல அடி பள்ளத்தில்தான் காவிரி ஓடுகிறது.

வானம் பார்த்த பூமியாக இப்பகுதி இருப்பதால் வன்னிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோறு போடுவது என்னவோ அண்டை மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூருதான். பழைய இரும்பு கடை, கோழி வியாபாரம், பாய் வியாபாரம், கட்டிட வேலை, பெயிண்ட் வேலை என்று வாழ்வின் பெரும்பகுதி நாட்களை பெங்களூருவில் கழிக்கும் நிலை.

ஆனால் என்ன? எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டு விடுகிறது. உண்மையில் ஒரு சில கட்சிகளின் சாதி வெறி பேச்சுக்கள் மூலம் பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் ஊட்டிய தைரியத்தில் மக்கள் இந்த நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இவ்வாறு சாதிய வெறியூட்டல்கள், புகைச்சல்கள், முரண்பாடுகள், சண்டைகள் அதிகம் உள்ள தருமபுரி கிராமங்களில் கூத்தப்பாடியும் ஒன்று.

இந்த சாதி வெறிக்கு, மிக அருகில் இருந்து பாதிப்பை சந்தித்து வரும் மக்கள்தான் கூத்தப்பாடி தாழ்த்தப்பட்ட மக்கள். எனவே விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற ஜனநாயக அமைப்பு தொடங்கிய காலத்திலிருந்தே இந்த கிராம தாழ்த்தப்பட்ட மக்கள் இதில் ஆர்வமுடன் இணைந்தனர்.

சாதி வெறியை கருத்து ரீதியாகவும், களத்திலும் போராடி அதற்கு பதிலடி கொடுத்ததன் காரணமாக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வந்தது, வி.வி.மு. ஆதிக்க சாதி பிரிவில் ஓரளவு ஜனநாயகமாக சிந்திக்க கூடியவர்கள் பலர் சாதிகடந்து ஆதரவு தரும் நபர்களாக மாறினர். ஆனால் யாரும் உறுப்பினராக மாறவில்லை. அந்த அளவு சாதி உணர்வின் தாக்கம் இருப்பதே இதற்கு காரணம்.

ஊரின் நுழைவாயிலில் ஊரை காக்கும் முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பட்டய புறம்போக்கில் உள்ளது. இதை சுற்றி கான்கிரீட் தளம் உள்ளது. இந்த இடமானது, பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கான பேருந்து நிறுத்தும் இடமாகவும், திருமணம் நடைபெற்றதும் மணமக்களை ஊருக்கு சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைக்கும் இடமாகவும், நிழல் தரும் மரங்கள் இருப்பதால் பொழுது போக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறுதான் கோயில் கட்டப்பட்ட 40 ஆண்டு காலத்திலிருந்து இருந்து வருகிறது.

இந்த கோயிலுக்கு மிக அருகில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களை கடந்து சற்று தொலைவில் இருப்பவர்கள் ஆதிக்க சாதியினர். இந்த முனியப்பன் சாமியின் பெயரில்தான் இப்போது ஆதிக்க சாதியினர் பிரச்சினையை கிளப்புகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் இந்த கோயிலை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று அவதூறு செய்து சாதிவெறியை கக்குகின்றனர், சாதி தீயை மூட்டுகின்றனர்.

உண்மையில் அதுவல்ல பிரச்சினை. இதன் பின்னணியில் இருப்பது ஆதிக்க சாதிவெறியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுமே ஆகும். இதற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும்.

கோயிலை சுற்றி தீண்டாமை வேலியை அமைக்க நீண்ட காலமாக அவர்கள் முயற்சித்து வருவதும், இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருந்துவரும் நிலையில் மீண்டும் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

2017-ம் ஆண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வலை மூலம் வேலி அமைக்க முயற்சித்த போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் சண்டை வந்தது. அதன்பேரில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதன் பேரில் தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை 14.06.2017 அன்று நடந்தது. இதில் மேற்படி கோயில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் எந்த ஒரு கம்பி வேலியும் அமைக்க கூடாது என்று முடிவாகி தீர்மானம் (ந.க.01/2017)நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேலி போடுவதற்காக நடப்பட்ட கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாமல் இருந்தன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வந்தது. வெளிமாநிலத்திற்கு பிழைக்க சென்று பொங்கலை கொண்டாட ஊருக்கு பெரும் எண்ணிக்கையில் வந்த ஆதிக்க சாதிக்காரர்களுக்கு சாதி வெறிதான் பொங்கியது. பொங்கலில் நடந்த சிறு பிரச்சினையை காரணம் காட்டி, ஏற்கெனவே போடப்பட்ட தீர்மானத்தை மீறி, 19.01.2019 அன்று காலை 9 மணிக்கு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்தனர்.

இது குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களிடம் நியாயம் கேட்டபோது, ஆதிக்க சாதிவெறியர்கள் , தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரை குறிப்பிட்டு அசிங்கமாக திட்டியும் கொலை செய்து விடுவதாகவும் சேரியை நத்தம் காலனி போல் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர்.

இது தவறு என்று பேசிய அக்கிராமத்தில் உள்ள தலித் முன்னணி இளைஞர்களிடம், நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க, நாங்கள் வேலி போட்டது, போட்டதுதான் என்றனர். இது குறித்து டிஎஸ்பி -யிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் முறையிட்டனர். அவர் 4 போலீசை அனுப்பினார். ஆனால் அவர்கள் கம்பி வேலி போடுவதை தடுக்காமல் வேடிக்கைதான் பார்த்தனர். இது குறித்து மீண்டும் டிஎஸ்பி-யிடம் முறையிட்டாலும் அலட்சியமாக இருந்து மணிக்கணக்கில் காலம் தாழ்த்தினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர், அதிகாரம் என்னிடம் இல்லை. தாசில்தாரை போய் சந்தியுங்கள் என்று கூறிவிட்டார்.

தாசில்தாரிடம் முறையிட்டாலும், அவரும் வேறு வேலை இருப்பதாக கூறி காலம் தாழ்த்தினார். இந்த காலம் தாழ்த்துதலை பயன்படுத்தி கொண்டு ஆதிக்க சாதியினர் கம்பி வேலி அமைத்து முடித்து விட்டனர். கோயிலை சுற்றி மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கட்டிக் கொடுத்த புதிய காலனி பகுதிகளுக்கு செல்லும் பாதையையும் அடைத்து வேலி அமைத்து விட்டனர்.

அரசு அதிகாரிகளின் பலத்தை விட ஆதிக்கசாதிக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதே நாடு முழுவதும் நடந்துவரும் நிகழ்வுகள் காட்டுகிறது. பிறகு பேச்சு வார்த்தை என்ற பேரில் தலித் மக்களை அழைத்தும் ஆதிக்க சாதியினரை அழைத்தும் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் பேசினர். இதில் அத்துமீறிய ஆதிக்க சாதியினர் கட்டுபடவில்லை.

மறுநாள் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 150 பேர் வரை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து முறையிட்டனர். பிறகு RDO பேச்சுவார்த்தை என்று தொடர்ந்து இருநாள் நடந்து வருகிறது. அரசு நிலத்தில் கோயில் கட்டியதே தவறு, இதில் தாசில்தார் உத்தரவையும் மீறி வேலி போட நீங்கள் யார் என்று ஆர்டிஓ கேட்கும் கேள்விக்கு ஆத்திரத்தையே பதிலாக கொடுக்கிறார்கள், ஆதிக்க சாதியினர்.

முதல் சுற்றில் திமிராக பேசிய அவர்கள், இரண்டாவது சுற்றில் வேறு வழியின்றி தவறை ஒத்துக் கொண்டாலும் வேலியை அகற்ற முடியாது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஆர்டிவோ வேலியை அகற்ற உத்தரவு போட்டு விட்டார். அரசு உத்தரவிற்கு கட்டுபட மறுக்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் வெறித்தனமாக தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி வருகின்றனர். நத்தத்தை நினைவு படுத்திக் கொண்டு பேசுங்கள் என்று நரித்தனமாக மிரட்டுகின்றனர்.

உத்தரவு போட்ட மறுநாளே ஊரை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடைகளில் பொருட்கள் கொடுக்க கூடாது என்று கட்டுபாடு போட்டு விட்டனர். தற்போது அங்குள்ள கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. பென்னாகரம் வந்துதான் பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தாழ்த்தப்பட்ட மக்களும் ஊரில் இறந்த ஒருவருக்கு அடிமை தொழிலான மேளம் அடிப்பதை செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

ஊரில் அதிகாரிகளும், போலிசும், உளவு போலிசும் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். தற்போது ஆதிக்க சாதிக்காரர்கள், காலனி தெருவிற்கு போகக்கூடிய வழியை மட்டும் விட்டு விடுகிறோம். அதை அடைத்து போட்ட வேலியை மட்டும் அகற்றி விடுகிறோம். மற்றபடி முனியப்பன் கோயிலை சுற்றி போட்ட வேலி அப்படியே இருக்கட்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் நைச்சியமாக பேசி வருகின்றனர். இது தீண்டாமை வேலி. இதை அனுமதித்தால் அடுத்தடுத்து ஆதிக்க சாதிவெறி தாக்குதல்களை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் வேலியை அகற்றுவதற்கான போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.

ஆதிக்க சாதி வெறியர்கள் மிரட்டுவதை போல், மீண்டும் நாயக்கன் கொட்டாய் சம்பவம் அரங்கேறுமா என்பது அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சாதி வெறியர்களை எப்படி தனிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது.

-பு.ஜ செய்தியாளர்
பென்னாகரம்.