“அசாமிய மக்களுக்குரிய மரியாதை அளிக்காவிட்டாலும் குடிமக்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் இந்தியாவிலிருந்து அசாம் மாநிலம் பிரிந்து போகும்” என முழங்கியிருக்கிறார் விவசாயிகள் சங்க தலைவர் அகில் கோகாய்.

அசாம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கிருசாக் முக்தி சங்கிராம் சமிதி தலைவர் அகில் கோகாய், “எங்களுக்குரிய மரியாதை அளித்தால், நாட்டுடன் நாங்கள் இணைந்திருப்போம். ஆனால், அசாமிய தொல்குடிகளின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுமானால், குடிமக்கள் மசோதா தாக்கல் செய்யப்படுமானால் … ‘நாங்கள் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல’ என அசாமியர்கள் தைரியமாக சொல்வார்கள்” என பேசினார்.

பரிந்துரைக்கப்பட்ட குடிமக்கள் சட்ட திருத்த மசோதா வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் அல்லாதவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சிகள் – அமைப்புகள், நிலப்பரப்பு ரீதியாக  அமைந்துள்ள எல்லையோர மாநிலங்களில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மார்ச் 1971 – ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து மதத்தினரையும் வெளியேற்றலாம் என்கிறது 1985 அசாம் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை குடிமக்கள் சட்ட திருத்த மசோதா ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்கிறார்கள் செயல்பாட்டாளர்கள்.

மோடி அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக 70 அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்துக்கு கோகாய் தலைமை தாங்கினார்.  அப்போது பேசிய அவர், “நிலைமை மோசமானால் நாம் நமது நிலைமையை தெளிவாக சொல்ல வேண்டும். அசாம் இந்தியாவுடன் சேர்ந்திருக்க முடியாது என சொல்ல வேண்டும். அரசு நம்மை மதித்தால் இந்தியாவுடன் இணைந்திருப்போம். இல்லையென்றால் நாங்கள் வெளியேறுவோம்” என பகிரங்கமாக தங்களுடைய உணர்வுகளை பேசியிருக்கிறார்.

அசாம் காவல்துறை கோகாய் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ஹிரென் கோகைன், மூத்த பத்திரிகையாளர் மன்ஜித் மகந்தா ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தை பாஜக தலைமையிலான அரசு ஆள்கிறது. மோடி அரசின் மசோதாவை எதிர்ப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள், கைதுகளை அரங்கேற்றி வருகிறது இந்த அரசு. மாநில அரசின் விழாக்களில், குடிமக்கள் மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கம். முதலமைச்சர் சர்பானந்த சொனாவால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கருப்புக் கொடி காட்டியதற்காக பாஜக குண்டர்கள் மாணவர் அமைப்பினரை கற்களால் தாக்கினர்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில், அசாமியர்களை ‘குளுமை’படுத்த அசாமைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் இசையமைப்பாளருமான பூபன் அசாரிகாவுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு.  அசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பதை வரவேற்றாலும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என அசாம் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

குடிமக்கள் திருத்த மசோதாவை எதிர்க்கும் பொருட்டு, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவை புறக்கணித்தன. முசுலீம் வெறுப்பின் விளைவாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதா வடகிழக்கு மாநில மக்களால் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

பொருளாதாரக் கொள்கையின் தோல்விகளை மறைக்கவும், போராடும் மக்களை திசை திருப்பவும் சங்க பரிவாரங்கள் தொடர்ந்து முயல்கின்றன. இன்னொரு புறம் பார்ப்பனிய மேலாண்மையை திணிப்பதையும் அவர்கள் செய்கின்றனர். முசுலீம்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடிமக்கள் மசோதா இப்போது பாஜக-ஆளும் மாநிலத்திலேயே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இன – சமூக வேறுபாடுகளை தூண்டி விட்டே இந்திய அரசு இத்தனை நாள் ஆதாயம் பார்த்தது. அந்த அணுகுமுறை தோல்வியில்தான் முடியும் என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று.  பாஜக – ஆர்.எஸ்.எஸ்.  கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்து போவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்!


அனிதா
நன்றி: நியூஸ்18