த்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்தாண்டு ஜனவரி 14 தொடங்கிய “அர்த் கும்பமேளா” மார்ச் 3 வரை நடைபெறவிருக்கிறது. அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றிய ஆதித்யநாத் அரசு 6 ஆண்டுகளுக்கொருமுறை வரும் அர்த் கும்பமேளாவை “கும்ப்” என்றும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வரும் கும்பமேளாவை “மஹாகும்ப்” என்றும் மாற்றியுள்ளது. இந்த கும்பமேளாவின் முதல் நாளில் 2 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள் என்று தெரிவித்திருக்கிறது அம்மாநில அரசு.  கங்கை, யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புராணப் புரட்டின்படி சரஸ்வதி நதியும் கலக்கிறதாம். இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அது பெரும் புண்ணியம் என்பது வட இந்திய ‘இந்துக்களிடையே’ அழுத்தமாக நிலவும் ஒரு மூடநம்பிக்கை!

ஊரான் காசை எடுத்து உலையில் போட்டுவிட்டு விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் மோடி, யோகி

மோடி அரசின் திட்டங்களால் பாஜக-வின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் வாய்ப்புள்ள இடங்களில் பார்ப்பனிய இந்துமதத்தின் பிற்போக்குத்தனத்தை கட்டவிழ்த்து விட நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பமேளா நிகழ்வுக்காக ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கான திட்டங்களை போட்டு செயல்படுத்தியிருக்கிறது சாமியார் யோகியின் தலைமையிலான உ.பி. அரசு. இந்த அரசுதான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததற்குக் காரணம். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்க பணமில்லாத உ.பி. பாஜக அரசு இந்த அர்த் கும்பமேளா விழாவிற்காக ரூ.4300 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஒதுக்கீடும் உண்டு. மறைமுகமாக இரு அரசுகளும் இன்னும் அதிக பணத்தை ஒதுக்கியிருப்பது நிச்சயம்.

இம்மாதிரியான கும்பமேளாக்கள் இந்தியாவின் அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதனை பூர்ண கும்பமேளா என்கிறார்கள். அதில் அலகாபாத் மற்றும் ஹரித்துவார் ஆகிய இடங்களில் மட்டும் ஆறு ஆண்டுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. தற்போது உபி அலகாபத்தில் நடைபெற்று வருவது இந்த வகையைச் சார்ந்ததுதான்.

குவிந்து கிடக்கும் மீடியாக்கள்

கும்பமேளா தோன்றிய புராணக்கதை மற்ற எந்த பார்ப்பனிய புரட்டுக் கதைகளுக்கும் குறைவானது அல்ல. தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்கள் உள்ளிட்ட தேவலோக வாழ்க்கை ஆட்டம் காண்கிறது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியது. இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். மோடி அரசு பதவியேற்ற பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி திட்டங்களால் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வேலைகளை பறிகொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஒடுக்குமுறையால் மோடி அரசு பூலோக வாழ்விலிருந்து ‘விடுதலை’ செய்யும் போது தனியே ஆற்றில் முங்கி முக்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை.

கும்பமேளா நிகழ்வை நேரில் கண்டு, அங்கு தங்கி மக்களோடு உரையாடுவதன் மூலம் வட இந்திய, இந்து உளவியலை அறிந்து கொள்ளலாம் என்று வினவு செய்தியாளர்கள் அங்கே சென்றார்கள். நேரில் பேசிய பலரும் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்தாலும் கும்பமேளாவின் புனிதத்தை நம்புகிறார்கள். பலர் ஆற்றில் முங்கி குளிக்கவில்லை என்றாலும் திரிவேணி சங்கமத்திற்கு வந்து செல்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள்.

இந்த கும்பமேளாவிற்காக அலகாபாத் என்கிற பெயரை “பிரயாக்ராஜ்” என மாற்றி தங்களது நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டது உ.பியை ஆளும் இந்துத்துவ கும்பல். பெயர் மாற்றப்பட்டு நடக்கும் உபியின் முதல் கும்பமேளா இது. இதையே இந்து ராஷ்டிரத்தின் மாபெரும் வெற்றியாக பிரகடனம் செய்து கொள்கின்றது இக்கும்பல்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டுவிட்டன. அலகாபாத்தின் சுவர்கள் முதல் பாலத்தின் தூண்கள் வரை கும்ப மேளா கதையை விளக்கும் வண்ண ஓவியங்கள், அலகாபாத்தில் மூன்று மாதங்கள் திருமணம் நடத்த தடை, சாமியார்கள் மற்றும் மேட்டுக்குடிகளின் ஆன்மிக பயணத்துக்கு தோதாக சுங்கக் கட்டணம் ரத்து என பல அறிவிப்புகள் வெளியாகின. அரசுத்துறைகளின் செயல்பாடு அனைத்தும் பாஜக முதல்வர் யோகியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

சுமார் பத்து கிலோ மீட்டருக்கு  தூரத்தில் இருந்தே மேளாவிற்கான வரவேற்பு தூண்கள் மற்றும் மோடி-யோகியின் முகம் பொறித்த பேனர்கள், சாலைகள் எங்கும் ஆக்கிரமித்திருந்தன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலிசு-ராணுவத்தின் பாதுகாப்பு வேறு!

படிக்க:
♦ உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்
கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்கா?

குடில்கள் மற்றும் தற்காலிக பாலங்கள், மின்விளக்குகள் அமைப்பது, சாலைகள் அமைப்பது, கழிவறை அமைப்பது என அனைத்து பணிகளும் ஒப்பந்தம் விடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உ.பி போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாநிலத்தில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாய் இருந்தன. இந்த ஏற்பாடுகளின் மூலம் பாஜக ஆதரவு முதலாளிகள், வணிகர்கள், சங்கி பிரமுகர்கள் பலர் ஆதாயம் அடைந்திருப்பதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கும் கமிஷன் என்பது சட்டப்பூர்வமான நன்கொடையாக கூட வந்திருக்கலாம். 4000 கோடி ரூபாய் என்றால் சும்மாவா என்ன?

கும்பமேளாவின் நுழைவுவாயிலில் ருத்ராட்ச கொட்டை தாங்கிய தூண்கள் வரவேற்க, சாலையின் இரு புறங்களிலும் மோடி மற்றும் யோகியின் சாதனை விளக்க விளம்பர பேனர்கள் கண்களை பறித்தன. அதை விட முக்கியம் மோடி அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை காட்சிபடுத்தும் விதமாக உ.பியின் ஒவ்வொரு மாவட்ட சுய தொழில் கண்காட்சியை யார் கண்களில் இருந்தும் தப்பிவிடாத வண்ணம் வைத்திருந்தனர். வாங்கும் சக்தியற்று மக்கள் இருக்கையில் மேக் இன் இந்தியா என்பது மாபெரும் தோல்வித் திட்டம் என்றால் பதாகைகள் என்னவோ அதன் வெற்றியை பயங்கரமாக பீற்றிக்கொண்டன.

அதனைத் தாண்டி சென்றால் பிரமாண்டமாக அமைப்பட்ட உபி சுற்றுலாத் துறையின் சார்பாக மேட்டுக்குடியினர் தங்கும் ஐந்து நட்சத்திர குடில்கள், தனியார் உணவகத்தின் கூடாரங்கள், போலிசு – ராணுவத்திற்கான பிரமாண்ட பரேடு கிரவுண்டு மற்றும் அவர்கள் தங்குவதற்கான குடில்கள் என  ஒரு மாபெரும் நகரையே உருவாக்கியிருந்தனர். ஹாலிவுட் புராணப் படங்களுக்கு போடப்படும் மாபெரும் செட்டுக்கள் போல இங்கே உண்மையாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு புராணப் புரட்டிற்காக இத்தனை ஏற்பாடுகள், நிதி ஒதுக்கீடு, மனித வளம் என்று பார்த்தால் இந்தியா ஏன் வளரவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்டுவிட முடியாது.

சுருக்கமாக சொல்வதன்றால் ஒரு புதிய நகரத்திற்குள் நுழைவது போன்றதொரு உணர்வு. 3200 ஹெக்டேர் பரப்பளவு. 15 கிலோ மீட்டர் சுற்றளவில் கும்பமேளா நகரம்…! இதில் காமெடி என்னவென்றால் அலகாபாத்தின் நகருக்குள் நுழையும்போது கூட இப்படியொரு உணர்வு வரவில்லை. பார்க்கும் இடமெல்லாம் படுமோசமாக இருந்தன. மாடுகள் சாலையில் திரிவதும், பாழடைந்த கட்டிடங்களும்-புழுதியுமான மனிதர்களும் என்று நகரமே புழுதியிலும் அழுக்கிலும் குடியிருந்தது.

இதனைக் கடந்து சென்றால் எந்த திசையில் திரிவேணி சங்கமத்தை நோக்கி செல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வைக்கும்படியான நிறைய சாலைகள். அதாவது இந்த சாலைகளே மொத்தமாக 250 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் எப்படி செல்வது என்ற ஒரு குழப்பம். ஒரு வழியாக விசாரித்துச் சென்றால் திரிவேணி சங்கமம் வரவில்லை. காஞ்சி சங்கராச்சாரியின் மடம்தான் வந்தது.

அலகாபாத்தில் உள்ள காஞ்சி சங்கர மடம்

சும்மா சொல்லக்கூடாது. சங்கரராமனை கொன்ற பாவத்தை கங்கை கரையில் கழுவிவிடலாம் என்று எண்ணும்படியாக பிரமாண்டமாக ஒரு கோவிலைக் கட்டியிருந்தது சங்கராச்சாரி மடம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கங்கா-யமுனா மற்றும் இல்லாத நதியான சரஸ்வதி சங்கமிக்கும் இடம் உள்ளதென்றார்கள்.  குறுக்கும் நெடுக்குமாக செல்லும் சாலைகள் அனைத்திலும் இரும்பு தகடுகள் போட்டிருந்தனர். வெறுமனே மணலில் கார்கள் சென்றால் சிக்கிக் கொள்ளுமல்லவா? அதில்தான் மக்களும் நடந்து செல்கிறார்கள்.

அலகாபாத்தின் பல கிராமங்களுக்கு சென்று வர போதிய சாலைகளோ, பேருந்து வசதிகளோ இன்றும் இல்லை. இன்னமும் சைக்கிள் ரிக்‌ஷாவும், ஷேர் ஆட்டோவும்தான் மக்களுக்கு உதவுகிறது. ஆனால் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக பல பத்து தற்காலிக சாலைகள், 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

சங்கம ஏரியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. இது கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் மூன்றில் ஒரு பகுதி. ஒரு மாவட்டத்துக்கு தேவையான பாதி மின்கம்பங்களை அந்த குறுகிய இடத்தில் மட்டும் வைத்திருந்தார்கள். உண்மையில் உபியில் பல கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் இல்லை என்பது ஒரு மன்னிக்க முடியாத உண்மை.

புனித நீராடும் மக்களுக்காக 1,22,000 கழிப்பறைகள் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாது. எதிலும் நீர் இல்லை. மோடி அரசின் ஸ்வச்ச பாரத் விளம்பரம் போல நாற்றமெடுக்கும் கழிவறைகள் சங்கம பகுதியின் மணத்தை தீர்மானித்தன. அவசரத்துக்கு போகிறவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் நிச்சயம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

அடுத்து கங்கையை கடந்து சாமியார்களிடம் ஆசி வாங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள் மட்டும் 22 இருந்தன. பல மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்களின் உழைப்பில் இந்த பாலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த தொழிலாளிகள் யாருக்கும்  கங்கையில் புனித நீராடும் நேரம் கூட இருந்திருக்காது. உண்மையில் இப்பால கட்டுமானம் அவ்வளவு பெரிய வேலை.

படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

எந்த பாலத்தில் நடந்து சென்றாலும் அந்த வீதியில் இருக்கும் சாதா மற்றும் ஸ்பெசல் சாமியார்களான நாகா சாமியார்களிடம் சென்று தரிசனம் பெறலாம்.  இந்த நாகா சாமியார்களுக்கு மட்டும் பலநூறு ஏக்கரில் நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. கூடாரம், மின்சாரம் என்று ஏக போகமாய் இந்த முற்றும் துறந்த அம்மண சாமியார்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

நாகா (நிர்வாண) சாமியார்களின் கூடாரம் அனைத்தும் கங்கை ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைத்திருக்கிறார்கள். ஒரு சாமியாரே முதல்வராக இருக்கும் போது நாகா சாமியார்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு தனி குடில், சாதா சாமிகளுக்கு தனி குடில் என்று காசுக்கு ஏற்ற மாதிரி அமைதிருந்தார்கள். சாமியார்களும் வர்க்க ரீதியாக பிரிந்திருந்தார்கள். இதில் வேடிக்கை என்ன்வெனில் கார்ப்பரேட் சாமியார்களுக்கும், மடாதிபதிகளுக்கும் ஏர்டெல், குயிக் ஹீல் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருக்கின்றன.

அதேபோல் கவுரி எண்டர்பிரைசஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற பல தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்கள் குளித்துவிட்டு உடைமாற்றுவதற்கென்று தங்கள் நிறுவன விளம்பரத்தை தாங்கிய கூடாரத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கம் திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள். மறுபக்கம் சிவப்பாக்கும் களிம்பு விளம்பரம். இல்லறம் துறவறம் இரண்டையும் கார்ப்பரேட் அறம் கவுட்டுக்கிடையில் பிடித்து வைத்திருந்தது.

பாரம்பரிய விழாவிற்கான UNESCO-வின் அங்கீகாரத்தை கும்பமேளா பெற்றுள்ளதால் 192 நாடுகளின் ஆன்மீகவாதிகளை கவர சுமார் 450 கோடி வரை விளம்பரத்திற்காக செலவிடப்பட்டதாக பீற்றிக் கொள்கிறது பாஜக அரசு. இந்த வெளிநாட்டு ஆன்மீகவாதிகளுக்காக தனிச் சிறப்பான நட்சத்திரக் குடில்கள் திரிவேணி சங்கமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு ஆன்மீகமானாலும் இந்த விதேசிகள் இந்தியா எனும் பாம்பாட்டி நாடுகளின் விசித்திரங்களை கண்டு ரசித்து சிரித்திருப்பார்கள்.

அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார மேட்டுக்குடியினர் தங்குவதற்கு கங்கா மற்றும் யமுனா நதிக்கரையில் பல ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தார்கள். இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட குடில்கள் போடப்பட்டுள்ளன. இந்தக் குடில்கள் அனைத்தும் ஒரு நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையோடு போட்டி போடும் தன்மை கொண்டவை. இந்த ஆடம்பர குடில்களுக்கு சற்று தள்ளி பொது மக்கள் அல்லது ஏழைகள் சதையைக் கிழித்து எலும்பைத் துளைக்கும் கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். ஆக வறுமைதான் உண்மையான துறவறம். துறவறம்தான் உண்மையான இல்லறம். இதுதான் இந்துத்துவ அறம்.

இந்திய  தொழில் கூட்டமைப்போ  “இந்த திருவிழாவின் மூலம் சுமார் 1.2 லட்சம் கோடி வருவாய் வரும்” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறது. சில நாடுகள் விபச்சாரத்தை உள்ளடக்கி சுற்றுலாத்தலமாக்கி வருமானம் பார்ப்பது போல இது ஆன்மீக சுற்றுலா. அதில் அரசுகள் மக்கள் பணத்தை வீசியெறிந்து பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவ முயல்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் தமது  பரிவாரப்படையை களத்தில் இறக்கி பக்தர்களுக்கு சேவை செய்வதென்ற பெயரில் இந்து வெறியூட்டி தங்களுடைய கேடான நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேலை செய்து வருகிறது. அதற்கு கும்பமேளா ஒரு முகாந்திரம்!

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து