சென்னை குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மீகக் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மடாதிபதிகள் தொடங்கி சாதி சங்கங்கள் வரை அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. “இந்து என்றால் சாதி- சாதி என்றால் இந்து” இதுதான் இந்துத்துவத்தின் மூலமந்திரம். அதனால்தான் “ஆன்மீக” கண்காட்சியில் சாதி சங்கங்ளுக்கு பிரதான இடம் ஒதுக்கியிருந்தனர். இவர்கள் சொல்லும் ‘இந்து ஒற்றுமை’ என்பது உண்மையில் சாதிகளின் ஒற்றுமையே!

என்னதான் சாதி வெறியனாக இருந்தாலும் பொதுவில் தன் சாதியை சொல்லத் தயங்கும் ஒரு மாநிலத்தில் சாதி சங்கங்ளுக்கு ஸ்டால் ஒதுக்கித் தரப்படுகிறது என்றால்… இதனை வேறு யாரால் இவ்வளவு அழுத்தமாக செய்ய முடியும்? நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்தான்.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் புரவலர்கள் யார் தெரியுமா? டாஃபே, ஜி.எம்.ஆர், லார்சன் & டியூப்ரோ, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலாண்ட், எஸ்ஸார், ஜெம் கிரானைட், டிவிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் துக்ளக் ஆசிரியர் குருமுரூத்தியின் ஆணைக்கிணங்க நிதியால் கண்காட்சியை ஆசிர்வதித்திருந்தன.

ஆன்மீக கண்காட்சியில் சாதி சங்கங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழக மண்ணில் காலூன்ற துடிக்கும் சங்க பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது. வட இந்தியாவைபோன்று இங்கு பக்தி மூடநம்பிக்கையில் ஊறித்திளைப்பவர்கள் குறைவு. இங்கே பக்தி-இறை நம்பிக்கை இருந்தாலும் கூடவே பகுத்தறிவும் கொஞ்சமாவது இருப்பதால் ஏமாற்றுவது குறித்து சங்கிகள் தினுசு தினுசாக யோசித்து வருகின்றனர்.

அதனால்தான் “தத்துவார்த்த” ஆன்மீக ஆசாமிகளுக்கும், யோகா மற்றும் தியான பீடங்கள் மற்றும் “உயர்” சாதி சங்களுக்கும் கணிசமான ஸ்டால்களை ஒதுக்கியுள்ளனர். அரங்கத்தில் ஓரளவு அறியப்பட்ட வரலாற்று பிரபலங்களை இந்துவாக மாற்றி அவர்களுக்கு வரலாற்றுக்குறிப்புடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

எந்த ஸ்டாலை அணுகினாலும் அன்பான அணுகுமுறையும், கனிவான பேச்சும்… நம்மை மென்மையாக இந்துத்துவத்தை நோக்கி இழுக்கும் படியாகவே உள்ளது. யோகா, தியானம், சமஸ்கிருதம், மன நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று டெம்பிளேட் அட்வைசுகள் ஏராளம். “எல்லாம் இலவசம் நீங்க வந்தா மட்டும் போதும்” என்ற ஒரு பேக்கேஜும் கூடவே இருப்பதால் அந்த இலவசத்தில் “இந்து வெறியூட்டும்” ஐட்டங்களை நைசாக சேர்த்திருந்தார்கள்.

அந்த அரங்கத்தில் பகத்சிங் பற்றியும், வேலு நாச்சியார் பற்றியும் ஒளிப்படங்கள் போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதில் இருந்த பெண்ணிடம் பேசியபோது சொன்னார். “இங்க வரக்கூடிய பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் சுற்றி பார்த்தால் ஒரே ஆன்மீகமா இருக்கேன்னு வெறுப்பாகிடுறாங்க. அதனாலதான் ஒரு மாற்றுக்காக இதை போடுறோம்” என்றார்.

கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஸ்டாலில் வரலாற்று விளக்க ஓவியத்தில்  பகத்சிங் படம் இருந்தது. அந்த ஸ்டால் குருநானக் கல்லூரியின் சார்பாக போட்டிருந்தனர். அவர்களிடம், ஆன்மீக கண்காட்சியில பகத்சிங் படம் போட்டிருக்கிங்களே ஆன்மீகத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம்

“குருநானக் தான் சீக்கிய மதத்தை தோற்றுவிச்சாரு… முகலாயர்களின் ஆட்சியில சீக்கியர்களை மதம் மாற சொன்னாங்க. அவங்க முடியாதுன்னு சொன்னதால ரொம்ப துன்புறுத்தினாங்க. நெறைய சீக்கியர்களை கொலை பண்ணினாங்க. அதை விளக்கத்தான் இந்த படங்கள் இருக்கு” என்று தடுமாறி சொன்னார். ஒரு கல்லூரியின் ஸ்டாலே இப்படி அப்பட்டமாக வரலாற்றை திரித்து பேசும் போது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டமெல்லாம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்?

அது இருக்கட்டும் மேடம். இதுல பகத்சிங் எங்க வந்தாரு?

“அவரும் ஒரு சீக்கியர்தான்… இந்திய விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டாரு… இங்க நிறைய படம் இருக்கு. அதை பாத்துகிட்டே வந்திங்கன்னா இதெல்லாம் புரியும். இருங்க சார், இங்க ஒரு சார் இருந்தாரே… ம்… அவர்தான் இதெல்லாம் விளக்குவாரு… அவரையும் காணோம்.” என ஒரு சிரமத்துடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். பொய்யுரைப்பதற்கு இத்தனை குறைவான பில்டப் வார்த்தைகளே போதுமென்றால், இந்து ஆன்மீகக் கண்காட்சி மூலம் எத்தனை எத்தனை வகை வாட்ஸ் அப் வதந்திகளெல்லாம் செய்தி – வரலாறு – தத்துவமாக மக்கள் காதில் கொட்டப்பட்டிருக்கும்?

இன்னொரு இடத்தில் சென்னை பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கம் சார்பாக, வரும் போகும் அனைவரையும் இழுத்து இரண்டு நிமிட தியானப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர். அருகே நோட்டிசு கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டபோது சொன்னார். “மனம் அமைதியா இருக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும்.. அதுகுத்தான் சார் தியானம். நீங்க வாங்க.  உங்களுக்கும் சொல்லிக் கொடுப்பாங்க” என்றார்

பிரமிட் ஆன்மீக மன்ற இயக்க அரங்கு

வேற என்ன எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க…

“உங்க ஆரோக்கியத்துக்காக தியானத்தோட சேத்து சைவ உணவு பழக்கத்தையும் சொல்லிக் கொடுப்போம். உலகத்துலேயே சிறந்தது சைவ உணவுப் பழக்கம்தான். அது அகிம்சைய சொல்லித்தருது. எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது சார்… இப்போ நாம காய்கறிய நறுக்குவோம் அது எதுனா சத்தம் போடுதா? இல்ல.. அது சாத்வீகமான உணவு. இதே நான்-வெஜ்லாம் ஒரு உயிர கதற வைக்குது பாத்தீங்களா.. அதனால அதெல்லாம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியத்துக்கு சைவ உணவு பழக்கம், நல்ல மனநலத்துக்கு தியானம்.. இதெல்லாம் கத்துகுடுக்குறோம். தியானத்தால நாம சுத்தமான காத்த சுவாசிக்க முடியும் சார்..” மாட்டுக்கறி மகத்துவங்களை எப்படி நைசாக சைவம் – அசைவம் என்று பேஷாக பேசுகிறார்கள் பாருங்கள்!

இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் பேசாமல் –  கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.

தியானத்தின் மூலம் சுத்தமான காத்து கெடைக்கும், மனசு அமைதியா இருக்கும்னு சொல்றீங்க… சென்னையில எங்க போனாலும் பொல்யூசன்தான் அதிகமா இருக்கு.. இதுவே  பெரும் பிரச்சனையா இருக்கே..?

“அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கவே கூடாது சார். இப்ப நான் இருக்கேன். இங்க  வந்துதுல இருந்து ஆரோக்கியமாதான் இருக்கேன். நமக்கு நிம்மதிதான் சார் முக்கியம்” என்று திரும்பத்திரும்ப சொன்னார். எப்படி மாற்றிக் கேட்டாலும் அவர் இதையே வேறு வேறு வார்த்தைகளில் கீறல் விழாத ரிக்கார்டாகவே ஓதினார். இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் வெளிப்படையாக பேசாமல் – கேள்வி கேட்காமல் –  கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.

அடுத்த வரிசையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இருந்த ஸ்டாலில் ஒரு முதியவர் வருபவர்கள் அனைவரிடமும் நோட்டிசு கொடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்.

மாட்டு மூத்திர ஆராய்ச்சி அரங்கம்

“நாங்க 800 மாடுகள பராமரிக்கிறோம். நாம மாட்டுகிட்ட இருந்து எல்லாத்தையும் பெறுகிறோம். ஆனா கடைசியில அதை அம்போன்னு விட்டுடுறோம். அப்படி இல்லாம அதையெல்லாம் வச்சு பராமரிக்கணும்… அததான் நாங்க செய்யுறோம் சார்.. இது மாதிரி மாடுகளை பராமரிக்க ஆகுற செலவு வருசத்துக்கு ரெண்டு லட்சம். தினமும் ஒரு மாட்டுக்கு 50 ரூபா. மாசத்துக்கு 1500 ரூபா. வருஷத்துக்கு 18,000 ரூபா ஆகர்..றது சார்” என தொடர்ந்தார்.

சரி நாங்க என்ன பண்ணனும்… அந்த மாடுகளை வாங்கிட்டு போயி வளக்கனுமா?

இல்ல… இல்ல… அதுக்கான செலவுக்கு உங்களால முடிஞ்சத கொடுத்தேள்னா நாங்களே நன்னா பாத்துப்போம்.

உ.பி.-ல யோகி சார் கோசாலை கட்டி தர்ரதா சொன்னாரு. அதே மாதிரி நீங்களும் அரசுகிட்ட டிமாண்ட் வக்கலாமே..

நமக்கு வாய்-வயிறு இருக்க மாதிரி அதுக்கும் இருக்குதானே…ன்னு சொல்லிக்கொண்டே அந்த வழியாக சென்றவரை வம்படியாக இழுத்து அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டு சாதூர்யமாக நம்மை புறக்கணித்தார் அந்த விலங்கு பாதுகாவலர். முந்தையதில் சைவ உணவின் மகத்துவமாக விஷம் பாய்ச்சியவர்கள் இங்கே கோமாதாவை சென்டிமெண்ட்டாக மார்கெட்டிங் செய்து வந்தார்கள்.

ஈஷா மையம்

ஈஷா மையம் – கர்ம யோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி, இரண்டு மூன்று ஸ்டால்களை சேர்த்து எடுத்து பெரிய குடில் போட்டிருந்தார்கள். அந்த அரங்கில் முன்னே இருந்த பெரிய டிஜிட்டல் திரையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஜக்கி… அதில் பணியாளர்களே பத்து பேர் இருப்பார்கள். வரிசையாக பள்ளி சிறுவர்கள் இந்த மையத்திற்கு வந்து கொண்டிருக்க அவர்களிடம் நோட்டிசு கொடுத்துக் கொண்டிருந்தனர் ஒரு பிரிவினர். இந்தக் கண்காட்சிக்கு தினசரி பல்வேறு பள்ளிகளின் குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். பள்ளிகளின் மதச்சார்பின்மை எப்படி இளித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்!

ஜக்கி கம்பெனியார் “வரும் மஹா சிவராத்திரி அன்னைக்கு எல்லா ஊர்ல இருந்தும் அழைச்சிண்டு போகறதுக்கு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம். நீங்க அவசியம் வரணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என்னடா இது…. பைசா செலவில்லாம கூட்டிட்டு போறதா சொல்றாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க அவர்களிடம் சென்றதும்.

நீங்க எந்த ஏரியா? என்றார்கள். ஏரியா பேரை சொன்னதும்.. “ஒன்னும் பிரச்சனை இல்ல. அங்கேயே பஸ் வரும். நீங்க உங்க பேர்,  போன் நம்பர்லாம் கொடுங்க.. நாங்க கூப்பிடுவோம்” என்றார்கள்.

பராவாயில்லை.. அன்னைக்கு போறதா இருந்தா நாங்களே உங்கள காண்டாக்ட் பன்றோம்…. என்றதும்..

“சரி சார்… நீங்க வாங்க. இந்த செலவினங்களுக்கு உங்களால் முடிஞ்ச தொகை எதாவது பண்ணுங்க” என்றார்கள். சிவராத்திரி தரிசனம் இலவசமென்றாலும் தரிசனத்திற்கான நிதியை விலை போல உடனே சொன்னது சுவாரசியமாக இருந்தது. ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் என்ற வணிகச் சந்தை உத்தி ஆன்மீகச் சந்தையிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. காசே கொடுக்கவில்லை என்றாலும் ஃபோன் நம்பர் வருவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அதே போல ஆர்.எஸ்.எஸ்-ஸின் சமஸ்கிருத பாரதிக்கும் பெரிய ஸ்டால்  போடிருந்தார்கள். கையில் இருந்த நோட்டிசைக் கொடுத்து சமஸ்கிருதம் சொல்லித்தறோம். 20 நாள்ல பேசக் கத்துக்கலாம். அனைத்தும் ஃப்ரிதான் என்றார்.

சார், இத கத்துக்க கஸ்டமா இருக்கும்னு சொல்றாங்களே?

சமஸ்கிருத பாரதி

“அப்படி எல்லாம் கிடையாது. நானே இங்க வந்துதான் கத்துகிட்டேன். எனக்கு சமஸ்கிருதம் சுத்தமா தெரியாது. இப்ப ஓரளவுக்கு பேசுறேன். படிக்கிறேன்” என்றார்.

ஆக்சுவலா எனக்கு இந்தி கத்துக்கிறதுலதான் விருப்பம், அதெல்லாம் சொல்லிக் கொடுப்பிங்களா?

“அது சொல்லித்தர மாட்டோம். ஆனா இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். எல்லா மொழியிலும் சமஸ்கிருதம் இருக்கிறதால, அதைவிட இதத்தான் ஈசியா கத்துக்க முடியும். கொஞ்சம் பிக்கப் ஆகிட்டிங்கன்னா உங்களுக்கு அடுத்தடுத்த லெவல்ல எக்ஸாம் வச்சி சர்டிஃபிகேட் கொடுத்துவோம்” என்றார்.

சரிங்க சார். இத கத்துக்கனும்னா எதாவது குறிப்பிட்ட சாதியாதான் இருக்கனுமா?

இல்ல… சாதி எல்லாம் பிரச்சனையே இல்ல. எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம் என்று நம்மை தொட்டு தட்டிக் கொடுத்தார். செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கொட்டிக் கொடுக்கும் பல நூறு கோடி ரூபாயில் சங்கிகளின் இந்த சம்ஸ்கிருத பாரதியும் வளமாக வாழ்கிறது. பத்தே நாட்களில் சமஸ்கிருதம் எனும் இன்ஸ்டண்ட் திறமையை பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசலாம் போல அப்பாவிகளை ஓரளவிற்காவது ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.

கொஞ்சம் தள்ளி வனவாசி சேவா கேந்திரான்னு  ஒரு ஸ்டால் இருந்தது. இந்த கேந்திரம்தான் ஆர்.எஸ்.எஸ் சார்பாக பழங்குடி மக்களிடம் இயங்குகிற முக்கியமான பரிவார் உறுப்பு.

அந்த அரங்கில் இருந்த அண்ணன் ரொம்ப அமைதியா பேசினாரு. “நாங்க மலைவாழ் மக்கள் மத்தியில வேலை செய்யிறோம். கிரிஸ்டின்காரங்க அந்த மக்கள் கிட்ட போயி மதமாற்றம் செய்யுறாங்க. அப்படி பண்ண முடியாம செய்யிறதுதான் வேலை. அதனால மலைவாழ் மக்களுக்களுக்கான உதவிகளை செஞ்சிட்டு வறோம்” என்றார்.

எனக்கும் இது மாதிரி பன்னனும்னு ஆசைதான். அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்றிங்களா?

“இதைப் பத்தி பேசனும்னா ஒருத்தரோட காண்டாக்ட் நம்பர் தறேன். அவருதான் ஆற்.எஸ்.எஸ்-சோட பிரச்சாரக். அவர் இதைப் பத்தி முழுசா சொல்வாரு. அவர்கிட்ட பேசுங்க” என்று சொல்லி நம்பரைக் கொடுத்தார்.

சுருங்கச் சொன்னால் பக்தி, ஆன்மீகம், யோகா, சுய முன்னேற்றம், உணவு – உடல்நலம், கல்வி – வரலாறு என்ற பெயரில் வளைத்து வளைத்து பார்ப்பனியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அங்கே மக்களை வெறியூட்டிக் கொண்டிருந்தன. அங்கே கடை போட்டவர்களுக்கு அரங்குகள் இலவசம் அல்லது மிகக் குறைந்த வாடகை. பணியாளர்களுக்கு பேட்டா, உணவு அனைத்தும் இலவசம். சாதி முதல் ஃபிராடான சித்த வைத்தியர்கள், ஜோசியர்கள் வரை பெட்டிக் கடை முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தையும் இணைத்திருந்தார்கள்.

ஏதோ ஒரு கண்காட்சி என்று வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம். ஆனால் அந்த வேடிக்கையுணர்வில் கொஞ்சமோ நிறையவோ இந்துத்துவ விசம் கலக்க ஆரம்பித்திருக்கிறது.