வேலைவாய்ப்புகள் குறித்து திருவாளர் மோடியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது, “பக்கோடா விற்றுப் பிழைப்பதற்கென்ன…” என்று கேட்டார். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த தமிழிசையிடம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவது குறித்து கேட்ட போது, தங்களுடைய அரசு லட்சக்கணக்கானவர்களுக்கு முத்ரா கடனுதவித் திட்டத்தின் அடிப்படையில் கடன் வழங்கி எல்லோரையும் முதலாளிகளாகவே ஆக்கி விட்டோம் என்றார். தமிழிசையின் கூற்றுப்படி இன்றைக்கு நாட்டில் எல்லோருமே முதலாளிகள் – ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள் ஆகிவிடுவதைப் போல மோடி எல்லோரையும் முதலாளிகள் ஆக்கி விட்டாராம்.

மோடியின் இந்தியா பல விதங்களில் வேறுபட்டது. வேலைவாய்ப்பின்மை நிலவுவதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? புள்ளியியல் துறை வெளியிடும் தரவுகளைக் கொண்டு. புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட விவரங்கள் மோடிக்கு உவப்பானதாக இல்லாத காரணத்தால் அத்துறையின் உயரதிகாரிகள் இருவர் பதவி விலகினர்.

மோடி வாக்களித்த கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் எங்கே என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.

எனினும், த வயர் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை அரசு வெளியிட்டுள்ள பிற புள்ளி விவரங்களைக் கொண்டு உண்மையை கண்டறிய முயல்கிறது. தொழிலாளர் துறையின் 2015-16 ஆண்டுக்கான அறிக்கை மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring of the Indian Economy (CMIE)) போன்ற அமைப்புகள் நடத்திய கள ஆய்வு முடிவுகள் மற்றும், தொழிலாளர் வைப்பு நிதியம் வெளிட்டுள்ள விவரங்கள் மற்றும் முத்ரா கடன் தொடர்பாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு வேலை வாய்ப்பு நிலவரத்தை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. மேலும், சமீபத்தில் மத்திய புள்ளியியல் துறை எடுத்த தேசிய மாதிரி சர்வேயின் அறிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த தகவல்களையும் கட்டுரையாளர் பயன்படுத்திக் கொள்கிறார்.

படிக்க:
வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !

தேசிய மாதிரி சர்வேயின் படி, 1977-78 ஆண்டில் இருந்து 2011-12 -ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலை வாய்ப்பின்மை 2.6 சதவீதத்தை கடந்ததில்லை. ஆனால், 2017-18 காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரிகளில் சேரும் (Gross Enrollment Ratio) கடந்த 2010 -ம் ஆண்டில் இருந்து 2016 -ம் ஆண்டு வரையிலான ஆறாண்டு காலத்தில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறது தேசிய மாதிரி சர்வே.

மேலும் பட்டப்படிப்பு முடித்த பின் வேலை தேடி அலுத்துப் போனவர்கள் சில ஆண்டுகள் கழித்து வேலை தேடும் முயற்சியையே நிறுத்தி விட்டார்கள் என்கிறது தேசிய மாதிரி சர்வேயின் முடிவுகள். இதன் காரணமாக வேலைகளுக்கு போட்டியிடுவோரின் சதவீதம் 2004-05 ஆண்டில் 43 சதவீதமாக இருந்து, 2017-18 ஆண்டில் 36.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அதே காலகட்டத்தில், வேலை கிடைக்காமல் விரக்தியில் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையோ கிடுகிடுவென அதிகரித்துள்ளது. படித்த பட்டதாரிகளை விட படிக்காதவர்கள், கூலித் தொழிலாளிகள், விவசாயக் கூலிகள் உள்ளிட்ட பிரிவினர் மேலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது மேற்படி சர்வேயின்படி தெரிய வந்துள்ளது.

ஒருபக்கம் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை தமது அரசு உருவாக்கியிருப்பதாகவும், அதை விளக்கிச் சொல்வதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை என்று பாஜக பரிவாரங்கள் கூசாமல் பச்சையாக புளுகி வருகின்றனர்.

இன்னொரு பக்கமோ, பதினைந்து வயதைக் கடந்தவர்களில் படிக்காதவர்கள், வேலையில் இல்லாதவர்கள் மற்றும் வேலைக்கான பயிற்சியிலும் இல்லாதவர்கள் (NEET – not in education, employment or training) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியும் கடந்த பல வருடங்களாக 12 கோடி என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது. 2011-12 காலப் பகுதிக்குப் பின் ஆண்டு தோறும் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் சராசரியாக 24 லட்சம். எனினும் இதே காலப்பகுதியில் புதிதாக வேலைச் சந்தைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.

வேலை வாய்ப்பில்லாதோரின் எண்ணிக்கை 2011-12 -க்கு முன் ஒரு கோடியில் இருந்து அதன் பின் ஒருகோடியே அறுபத்தைந்து லட்சமாக அதிகரித்துள்ளது – இந்த எண்ணிக்கையானது வருடந்தோரும் வேலையில்லாதோர் பட்டாளத்தில் புதிதாக சேர்பவர்களுடையது என்பதைக் கணக்கில் கொண்டால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 8 கோடி பேர் வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.

இதில் நாம் கவனிக்கத்தக்க மற்றொரு செய்தியும் உள்ளது. அதாவது, 2004-05ல் இருந்து 2011-12 காலப் பகுதி வரை விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வருடம் தோரும் வீழ்ச்சியடைந்துள்ளது – அதாவது கிராமப்புற சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்து சேவைத் துறைகளில் தொழிலாளிகளாகச் சேர்ந்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் 15-29 வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் விவசாயத் துறை வேலைகளில் ஈடுபடுவது 8.68 கோடியில் இருந்து 6.09 கோடியாக சரிந்துள்ளது. ஆனால் 2011-12க்குப் பின், 8.48 கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது விவசாயத்தில் பிழைக்க முடியாது என்கிற நிலையில் நகர்புறங்களுக்கு வந்த கூலி விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள், இங்கும் வேலை நெருக்கடி தோன்றியதால் மீண்டும் வேறு வழியின்றி கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

அதே சமயத்தில் 2011-12 காலப் பகுதியில் 5.89 கோடியாக இருந்த உற்பத்தித் துறை வேலைகள் 2015-16 ஆண்டுகளில் 4.83 கோடியாக சரிந்துள்ளது. அதாவது 1.06 கோடியாக உற்பத்தித் துறை வேலைகள் அப்படியே ஆவியாகியுள்ளது. உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை வங்கிக் கடன்கள் பெறுவதில் சுணக்கம், உற்பத்தி சரிவு உள்ளிட்ட பிற புள்ளி விவரங்களும் உறுதிப் படுத்துகின்றன. இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது – உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ள அதே காலகட்டத்தில் தான் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட, கல்வியை முடித்த, வேலையில் இல்லாத பயிற்சியில் இல்லாதவர்களின் (NEET) எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (2017-18 ஆண்டு வாக்கில் இவர்களின் எண்ணிக்கை 11.56 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகின்றது).

இந்த விவரங்கள் அனைத்தும் “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை தெளிவாக காட்டுகின்றன. வேலையற்றோர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மறுபுறம் சிறு அளவிலான கலவரங்களும், சாதி, மத, இன பேதங்களும் அதிகரித்து வருகின்றன.

தனது கையாலாகாத் தனத்தால் உருவாகியுள்ள வேலையற்றோரின் பெரும் பட்டாளத்தை தனது கேடான பாசிச நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைகிறது இந்துத்துவ கும்பல். வேலையின்மைக்கு இந்த பாசிஸ்டுகளே காரணம் என்பதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும், இந்துத்துவ கும்பலை மக்களிடம் அம்பலடுத்துவதும் உடனடிக் கடமைகளாக நம் முன் நிற்கின்றன.


சாக்கியன்