மிழகத்தில் “ஸ்ட்ரீட் ஃபுட்” கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் எந்த சாலைகளில் பார்த்தாலும் தள்ளுவண்டி கடைகள்… குறிப்பாக மாலை நேர பானி பூரி கடைகள் புற்றீசல்போல பெருகியுள்ளன. இதுதான் வட இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம். டீக்கடை தொடங்கி தெருக்கடை வரை வட இந்திய உணவான பானி பூரியும், சமோசாவும், வட இந்திய இளைஞர்களும்தான் இருக்கின்றனர். இந்த கடைகளில் எப்பொழுதும் கூட்டம்தான்.

பள்ளி மாணவர்கள் முதல் வேலை முடித்து விட்டு வரும் நடுத்தர வயதினர் வரை அனைவருக்கும் முதல் சிற்றுண்டி பாணிபூரிதான். தென்னிந்திய சிற்றுண்டிகள் எல்லாம் இருக்கும்போது, எப்படி இந்த உணவை அவர்கள் விரும்பினார்கள்…? என தெரிந்துகொள்ள சென்னை அயோத்தி மண்டபத்தில் ஒரு பானி பூரி கடையில் மொய்த்திருந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராமச்சந்திரன். சி.., ஆந்திரா. சென்னையில் நிரந்தரமாக குடியிருக்கிறார்.

இப்ப இருக்கிற வேலைக்கும், பாஸ்ட் லைப்புக்கும் கரெக்ட்டா மேட்ச் ஆகுற ஃபுட் இதுதான். இன்ஸ்டண்ட் உணவு. அதிகபட்சம் 3 மணிநேரம் பசி தாங்கற மினி மீல்ஸ் இது.  ஜஸ்ட் லைக் தட். வந்தம்மா…. நின்னம்மா….. சாப்பிட்டம்மா….. போனம்மா..ன்னு இருக்கனும். சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா டைம் தேவையில்லை.

இட்டிலி, தோசை வேணும்னு ஓட்டலுக்கு போய் ஆர்டர் கொடுத்தா எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாது. அப்படியே வந்தாலும் சட்டினி சரியில்லை, சாம்பார் சரியில்ல, இட்டிலி சூடு இல்லனு எரிச்சலா வரும். இன்னும் இதுமாதிரி பல பிரச்சனை.

இன்னும் சொல்லப்போனா நம்ம சவுத் இன்டியன் புட்ல அரிசிதான் மெயின். அதை அதிகமா எடுக்கிறதாலதான் நமக்கு இல்லாத நோய் எல்லாம் வருது. ஒபிசிட்டி, டயாப்பட்டிஸ், ஹைப்பர் டென்சன், தைராய்டு இதெல்லாம் தட்டு நிறைய உள்ள போவுது. கட்டிட வேலை மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யிறவங்களுக்கு அரிசி சாப்பாடு ஓகே…! நம்மள மாதிரி காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து வேலை செய்யிறவங்களுக்கு அரிசி பாய்சன்.

இதப்பத்தி, உங்களுக்கு எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியல! இந்த நாலேட்ஜ் இல்லாதவங்கதான் சவுத் இன்டியன் ஃபுட் பத்தி ரொம்ப அலட்டுவாங்க… நான் என் குழந்தையோடதான் இங்க வந்து சாப்பிடுவேன்.

சேகர், கிருபாகரன், எழில்மதி. ஆட்டோ ஓட்டுநர் குடும்பம்.

அய்யோ! இன்னிக்குத்தான் நாங்க இங்க அதிசயமா வந்தோம்! இது எங்களுக்கு இல்ல. வீட்டுக்குப்போனா எங்கப் பொண்ணு அடம்புடிப்பா, அவளுக்காகத்தான் இது. நம்மளுக்கு இது ஒத்து வராது. பசங்கக்கூட என்னிக்கினா ஒருநாள் டேஸ்ட் பாக்கிறதோட சரி. நம்ம பலகாரம் மாதிரி வராது. ஆனா அதெல்லாம் ஆற அமர செய்யிறது இப்ப நம்மளாள முடியலியே. பணமும் இல்ல, நேரமும் இல்ல. ஏதோ பசங்களுக்காக நம்ம வாழ்க்கை ஓடுது.

ரமேஷ், வங்கி ஊழியர்.

இங்க சாப்பிட வந்தாவே மனசே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் வருவேன். ஒன்னு சாப்பிட்டதும்…அடுத்ததுனு மனசு கேட்கும். ஆனா வயிறு மக்கர் பண்ணுமே..! அதனாலே வாரத்துக்கு ஒரு தடவைதான் இந்தப்பக்கம் வருவேன். ஒரு சமோசா… இல்லனா ஒரு வடை சாப்பிட்டு திரும்பி பாக்காத போய்டுவேன். ஆனா ஜங்க் ஃபுட் மாதிரி ரொம்ப மோசமான உணவுன்னு இதை சொல்லமுடியாது.

நாராயணன், ஸ்பிக் ஊழியர், ஓய்வு.

கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான். தெரியுது. என்ன பிரயோஜனம். நம்மளுக்கு கைக்கு எட்டற மாதிரி கிடைக்கிறது இதுதானே. நம்ம உடம்பு கிடைக்கிறத ஏத்துக்கும். எல்லாத்துக்கும் பழகிக்கும். எதனா புடிக்கலன்னா நம்ம உடம்பே நம்மக்கிட்ட சொல்லும். எனக்கு பாருங்கோ… இங்க ஒரு சமோசா சாப்பிட்டுட்டு போனா ஒன்னும் பண்ணாது. எக்ஸ்ட்ரா ஒண்ணு சாப்பிட்டா வயிறு உடனே அப்செட் ஆவும். பிரச்சனை அங்கதான் இருக்குது. அத தெரிஞ்சி  உடம்பு சொல்றத கேட்டு நாம நடந்தா ஒண்ணுமில்ல. லிமிட்ட தாண்டக்கூடாது.

சமோசாவ நீ சாப்பிடனும். சமோசா உன்ன தின்னா போச்சு… இப்ப காலம் மாறிப்போச்சு. அந்தக்காலத்தில ஊருநாட்டுக்கு போனா வழியில எதுவும் கிடைக்காது. தேவையானத வீட்டிலிருந்து கட்டிண்டு போனாத்தான் உண்டு. வழியில குழந்தைங்களுக்கு சோறு வேணும்னாலும் பெரியவங்களுக்கு காபி வேணும்னாலும் வீட்டிலிருந்து எடுத்துண்டு போவோம்.

ரயில் கூஜான்னு காபி எடுத்துண்டு போறதுக்கு ஒண்ணு தனியா இருக்கும். அது ஒரு காலம். இப்ப எதுன்னாலும் கடக்காரங்க வாயில ஊட்டிவிடாததுதான் பாக்கி. அதுவும் சீக்கிரம் வந்துடும். உபர், ஸ்விகி, மாதிரி வீடுதேடி வந்து தராங்க. இத யூசர் பிரண்ட்லீ, சர்வீஸ் ஓரியண்டட், வேல்யூ ஆடட்னு விதவிதமா சொல்றாங்க.

படிக்க:
லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !
♦ விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

விக்னேஷ்.

இப்ப உங்களுக்கு என்னா பிரச்சனை? நான் எத சாப்பிட்ட உங்களுக்கு என்னா? சமோசா நார்த் இன்டியன் ஃபுட்னா அதுக்கு நான் இன்னா பன்றது? பெருசுங்கதானே எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினாங்க! அவங்கதானே இந்த  அயிட்டத்த தமிழ்நாட்டுக்குள்ள உட்டது! அப்ப வேடிக்கை பாத்துக்கினு இருந்துட்டு இப்ப நாங்க சாப்பிட்டா கேள்வி கேட்கறீங்க?  அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும். எல்லாத்துக்கும் கதவு திறந்து வைச்சா இதுதான் நடக்கும்.

இப்ப காஷ்மீர பாருங்க… 350 கிலோ ஆர்.டி.எக்ஸ். கேட்பார் இல்லாம  உள்ள விட்டுட்டதால இப்ப 50 ராணுவ  வீரர் செத்துட்டான். அப்படின்னா அது யார் தப்பு? இவ்ளோ பெரிய ராணுவம், பெரிய உளவுத்துறை எல்லாம் என்ன வேடிக்கை காண்பிக்கிறதுக்கா வச்சிக்கிறாங்க! இதை, கேட்டா, எங்களையே கொலைகாரன் மாதிரி பாக்கிறானுங்கோ! இங்க எதுவும் சரியில்ல!

ஆனந்தன்

தோ… இந்தமாதிரி வட இந்தியாகாரனுங்கள உள்ள விட்டதால நம்ம உணவுக்கு மவுசு இல்லாம போயிடுச்சி. இருந்தாலும் இவங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமா இருக்கு. நான் அதை குறை சொல்லல. இதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுற நாம அப்பவே நம்ம உணவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்னு  சொல்றேன். இன்னைக்கு அது பணக்காரங்க உணவா மாறிடுச்சி.

நம்ம தாத்தா-பாட்டிங்க சாப்ட உணவெல்லாம்  இப்ப பெரிய பெரிய ஹோட்டல்ல இருக்கு. அங்க யாரு போயிட்டு சாப்பிடுவா? பணக்காரன் மட்டும்தான். அப்ப நாம கண்டுக்காம விட்டுட்டதால இப்ப அது காஸ்ட்லி அயிட்டமா ஆயிடுச்சி. ஏழைங்க சாப்பிட முடியாது. ஏழைங்க சாப்பிடுற விலையில இந்த வட இந்திய உணவுதான் இருக்கு… அதுமட்டுமில்லாம இந்த டேஸ்ட் குழந்தைங்களுக்கும் புடிச்சி போயிடுச்சி…!

சுப்பிரமணி, அரசு ஊழியர்.ஓய்வு.

நீங்க எதப்பத்தி எழுதப்போறீங்க? இருக்கிறது சவுத் இன்டியா! சாப்பிடறது நார்த் இன்டியா ஃபுட் அப்படினு இதுக்கு தலைப்பு போடுவீங்களா? எப்படி எழுதுவீங்கனு சொல்லுங்க அதுக்கு ஏத்தமாதிரி நான் உங்களுக்கு சொல்றேன்! நீங்க வந்து கேள்வி கேட்கிற எடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அய்யருங்க ஏரியா இது! அதுவும் மாம்..ம்பலம் அய்யருங்க..! அங்க, மயிலாப்பூர் அய்யருங்க வேற மாதிரி! நாங்க பசிக்கு மட்டும் சாப்பிடறது இல்ல! கூட எங்க ஸ்டேட்ஸையும்(status) சேர்த்து தட்டுல வைக்கிறவாகிட்டதான் நாங்க சாப்பிட முடியும். அது முக்கியம். அய்யருங்க அவங்களுக்குள்ள பேசிக்கும் போது நீங்க கவனிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜம்பலம் பத்தி, இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சவங்ககிட்ட கேளுங்க சொல்லுவாங்க! …நான் வர்றேன்.

2 மறுமொழிகள்

  1. மயிலாப்பூர், மாம்பழம், ஜம்பலம்ன்னு சம்பந்தம் உளறிக்கிட்டு ,சரியான பூணூல் பைத்தியம்.

  2. சுவைஞர்கள்… இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறதே வினவு தலைப்பைப் பார்த்தாத்தான் தெரியுது.

Leave a Reply to காலன் கருப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க