புல்வாமா தாக்குதலின் விளைவாக இந்த முறை கர்நாடகத்தில் 22 பாராளுமன்ற தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அம்மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் எடியூரப்பா.

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த போது ஜிம் கார்பெட் உயிரியல் பூங்காவில் டிஸ்கவரி சேனலின் ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நரேந்திர மோடி, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்டுள்ள சமயத்தில் கேலோ இந்தியா (Khelo India) என்கிற செல்போன் செயலியின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில அமைச்சர்களோ பாரதிய ஜனதா கட்சி சார்பான தேர்தல் பிரச்சாரங்களில் மூழ்கியுள்ளனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊறுகாய் மாமியிடமிருந்து எந்த அனக்கமும் இல்லாத நிலையில் போரை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர் இந்திய ஊடகங்கள். இந்தியா நடத்திய அதிரடி விமானத் தாக்குதலில் 400 பேர் மரணம் என ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்ததை அடுத்து பக்தாள் நடத்தும் வாட்சப் குழுமங்களில் அந்த எண்ணிக்கை நான்காயிரமாக உயர்ந்தது. போர் துவங்கும் சூழல் ஏற்பட்டால் மூன்றே நாளில் ஒரு இராணுவத்தை எழுப்பும் ஆற்றல் தமக்கு உள்ளதென வீராவேசமாக கூச்சலிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பஜனை பாடிக் கொண்டிருக்க, அபிநந்தன் என்கிற விமானப்படை அதிகாரி பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இரண்டு இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

திட்டமிட்டு உருவாக்கப்படும் போர் வெறியும், போர்ச் சூழலும் எதற்காக என்பதை எடியூரப்பா தெளிவாக விளக்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த அபத்த நாடகத்தின் மேல் காறியுமிழ்ந்துள்ளனர். டிவிட்டர் தளத்தில் #SayNoToWar என்கிற ஹேஷ்டேகின் கீழ் போர் வெறியைத் தணிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் சங்கிகள் தரப்பில் இருந்து Say Yes to War என்கிற ஹேஷ்டேக் துவங்கப்பட்டு அதன் கீழ் “வெட்டுவோம் குத்துவோம்” ரக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிவிட்டரில் வெளியான போர் எதிர்ப்பு கருத்துக்களின் ஒரு சிறிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

♦ ♦ ♦

யாருக்கு வேண்டும் சண்டை? யார் போருக்குச் செல்ல வேண்டும்? போர் என்பது ஒரு தாயின் மடியை காலியாக்க கூடியது என்கிறார் @ComradeSourav இந்த ட்வீட்டுடன் அவர் இணைத்துள்ள படத்தில் போர் வெறி பிடித்த ஆங்கில ஊடகவியலாளர்களின் படங்களை வெளியிட்டு அதில் “இவர்கள் அனைவரையும் எடுத்துக் கொண்டு அபிநந்தனைத் திருப்பித் தாருங்கள்” என பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைக்கிறார்.

உஸ்மான் ஹைதர் என்கிற பாகிஸ்தானியர் எழுதியுள்ளதைப் பாருங்கள்: “ஒரு பாகிஸ்தானியாக இந்த நல்ல குணம் கொண்ட இராணுவ அதிகாரியின்  குடும்பத்தினர் படும் சிரமங்களுக்காக வருந்துகிறேன். எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரே மாதிரியான கலாச்சாரம் கொண்டவர்கள். அவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்றும், அதுவரை அவர் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். பாகிஸ்தானியர்களாகிய நாங்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என எங்களது பிரதமரும் இராணுவமும் சொல்கின்றனர்.

“நீயும் போருக்குச் சென்றுள்ளாயா என்று கேட்கிறவர்களுக்கான எனது பதில் – இல்லை. ஆனால், எனது குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தில் இருக்கிறார்கள். எந்த குடும்பமும் இழப்பை சந்திக்க கூடாது என்று விரும்புகிறேன். நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு எனது மற்றும் எங்கள் இராணுவ வீரர்களின் பாதுகாப்பும் அமைதியும் முக்கியம். நாமெல்லாம் நமது பிராந்தியத்தின் அமைதிக்காக பிரார்த்திப்போம்”

மற்றுமொரு பாகிஸ்தானியர் இரண்டு பெரும் அணுவாயுத சக்திகளின் மறுபக்கம் என்னவென்பதைச் சொல்கிறார்.

சௌமோஜித் எனும் இந்தியர் “மக்கள் போரின் விளைவுகளையும், சில தீவிரவாதிகள் மற்றும் ஊடகத்தின் போர் வெறியையும் புரிந்து கொண்டு தவிர்ப்பதற்கு இதுவே நல்ல தருணம்” என்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஸிம் நிஸார் தனது நாட்டின் இராணுவம் நீங்கள் சிரிப்பதையும் நடனமாடுவதையுமே விரும்புகின்றது என்கிறார். பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றாலே நீண்ட தாடியுடன் தலையில் குல்லாவுடன் காட்சியளிக்கும் வெறி பிடித்த முல்லாக்கள் என்று இந்திய ஊடகம் சித்தரிப்பதற்கு மாறாக உள்ளது நடமாடும் அந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஏற்படுத்தும் சித்திரம்.

“போரின் விளைவுகள் உங்களையும் நீங்கள் விரும்புகிறவர்களையும் தொடும் வரையில் உங்களுக்கு புரியாது. தூரத்தில் அமர்ந்து கொண்டு போர் வெறியூட்டுவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம்; ஆனால் நல்லதில்லை” என்கிறார் சுச்சி என்கிற இந்தியர்.

“சண்டையிடுகிறவர்கள் போரை விரும்புவதில்லை. போரை விரும்புகிறவர்களோ சண்டையிடுவதில்லை. போர் வேண்டுமெனக் கேட்டு கூச்சலிடுகிறவர்கள் போர்க்களத்திலிருந்து மிக தொலைவில் அமர்ந்துள்ளனர். நீங்கள் இந்த போரை விரும்பினால் தயவு செய்து உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள்” என்கிறார் இன்னொரு பாகிஸ்தானியர்.

படிக்க:
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

ஜுனாய்த் அகமது என்கிற பாகிஸ்தானியர் அபினந்தன் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரியுடன் தேனீர் அருந்தியவாறு பேசிக் கொண்டிருக்கும் காணொலியை பதிவிட்டுள்ளார்.

”பெரிசுகள் போரைக் குறித்துப் பேசுவார்கள்; இளைஞர்களோ போரில் செத்துப் போவார்கள்..” என்கிறார் ரஞ்சித்குமார்.

”போர் என்பது தகப்பனை இழந்த குழந்தைகள், கணவனை இழந்தை மனைவிகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர். தேர்தலில் வெற்றி பெறுவதை நிறுத்தி விட்டு மனங்களை வெற்றி பெறத் துவங்குங்கள்” என்கிறார் ஜஸ்டின் ஆரோக்கியராஜ்.

♦ ♦ ♦

பிப்ரவரி 27, 28 இரண்டு நாடுகளின் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #SayNoToWar இடம் பிடித்துள்ளது. அரசியல்வாதிகளும், இவர்களின் அல்லக்கைகளான ஊடக சில்லறைகளும் போரை விரும்பட்டும். மக்களின் விருப்பம் அமைதியும் நல்லெண்ணமும் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நாமும் உறக்கச் சொல்வோம் #SayNoToWar.

தொகுப்பு: சாக்கியன்