நான் என்னுடைய முதுகலை படிப்பை ஸ்காட்லாந்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்வேறு நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பாகிஸ்தானிய நபர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு சமயம் என்னுடைய பிறந்தநாள் அன்று பக்கத்து ஊருக்குத் தனியே சென்று கொண்டிருந்தேன். அப்போது என் அம்மாவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது ‘birthday’ என்று அடிக்கடி சொல்வதை மட்டும் புரிந்துகொண்ட அந்த பாகிஸ்தானிய ஓட்டுனர், நான் அலைபேசியை அணைத்த உடன் ‘Happy Birthday’ என்றார்.

ஒருவிதமான வியப்பும் மகிழ்ச்சியும் தோன்ற இருவரும் நான் இறங்கும் இடம் வரை பேசிவந்தோம். அப்போது நான் இந்தியாவில் இருந்து வந்தது குறித்து அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. மாறாக, பிறந்தநாள் பரிசு என்று கூறி என்னை இலவசமாக இறக்கிவிட்டுப் போய்விட்டார். அந்த நபருக்கும் தெரியும் என்னை இனிமேல் சந்திக்கப் போவதே இல்லை என்று.

அதே பிறந்தநாளில் வட இந்தியர்களின் நண்பராக இருந்த ஒரு பாகிஸ்தானியருக்கு என் அறிமுகமே கிடையாது. ஆனால் வட இந்திய நண்பர்களோடு வந்து இயல்பாய் கேக் வெட்டி அதை ஊட்டிவிட்டுப் போனார். அந்நாளில் அழைப்பும் அறிமுகமும் கூட இல்லாமல் வந்து என்னுடன் நேரம் செலவழித்த அந்த நண்பருக்கு எந்தவித பகையுணர்ச்சியும் இன்னொரு நாட்டின் மீது இருந்ததாகத் தெரியவில்லை. ஸ்காட்லாந்தில் இருந்த வரை எப்போதும் புன்னகையோடு கடந்து சென்றவரிடம் இந்தியா திரும்பிய பிறகு நான் பேசியதேயில்லை.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

என்னுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார் ஒரு பாகிஸ்தான் பெண் தோழி. நாங்கள் பல பயணங்களை ஒன்றாக மேற்கொண்டோம். அவரிடம் அன்பிற்கு குறைவாய் நான் ஒன்றை கண்டதேயில்லை. அவர் இந்தியாவிற்கு பயணம் செய்ய எப்போதும் ஆவலுடன் இருப்பார். என்னால் உங்கள் வீட்டிற்கு எப்போதுமே வரமுடியாது என்ற அவர் குரல் சற்று ஏங்கித்தான் இருந்தது. அவரை நாடு திரும்பிய பிறகு நான் ஒருமுறை கூட சந்திக்கவேயில்லை.

தினமும் ஒரு பூங்காவைக் கடந்து நான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அவ்வப்போது அந்த இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். ஓருமுறை அந்த இருக்கையின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்தவருக்கு ஏறத்தாழ என் வயதிருக்கும். இருவரும் இயல்பாய்ப் புன்னைகைத்து பேசத் தொடங்கினோம். நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகக் கூறினேன். அவரின் தாத்தா தேச பிரிவினையின் போது தன் சொத்துகளை எல்லாம் இந்தியாவில் இழந்து பாகிஸ்தான் சென்றவர். அவரின் தந்தை பின்னர் கிளாஸ்கோவிற்கு குடிபெயர்ந்திருந்தார். இப்போது இவர் சட்டப்படி பிரித்தானிய குடிமகன். தனக்கான வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார். அவர் குரலில் அவர் பாகிஸ்தான் மீதும் இந்தியா மீதும் ஒரே அன்பு கொண்டவர் என்று மட்டும் தெரிந்தது. எது தாய்நாடு என்ற கேள்விக்கு அவரின் பதில் நம்முடைய வரைபட அளவைக் கடந்து பரந்து கிடந்தது. சிறிய உரையாடலுக்குப் பின்னர் இருவரும் கையசைத்து விடைபெற்றோம். அதற்கு முன்னரும் பின்னரும் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவே இல்லை.

மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதிகாரப் பசிக்கும் பண வெறிக்கும் நாம் தான் இரையாக வீசப்படுகிறோம்.

தீவிரவாதம் போர் என்று கேட்கும் போதெல்லாம் அமைதியை மட்டும் விரும்புவோம். எப்போதும் அன்பை மட்டும் செலுத்துவோம். போர் வேண்டுமானால் மனிதர்களுக்கிடையில் நடக்கலாம். ஆனால் அந்த இடத்தில் வாழும் புல் பூடு புழு செடி பறவை விலங்கு என யாவற்றிற்கும் அதே இடத்தில் நிலைத்து வாழ உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . மனிதனால் மட்டும் மனிதனுக்காக மட்டும் தான் பூமி என்ற அகந்தையின் உச்சம் போர். போர் அற்ற பூவுலகு காண அமைதியையே விரும்புவோம். அன்பே ஆயுதம்.

#SayNoToWar

நன்றி :  கௌதமி சுப்ரமணியம்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…