வரலாற்றில் பாடம் படிப்போம் !

மீபத்தில் கிளினிக்கில் 8 வயதே இருக்கும் ஒரு சிறுமிக்கு பேலியோ பரிந்துரை கொடுத்தேன். காரணம், அந்தச் சிறுமியின் எடை – 82 கிலோ. (மருத்துவம் சார்ந்த அனைத்து ரத்த ஆய்வுகளும் செய்யப்பட்டு எந்த நோயின் காரணமாகவும் அவள் உடல் ஏறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது)

மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி – 82 கிலோ எடையுடன் இருக்கிறாள் என்பது இப்போதெல்லாம் எனக்கு அத்தனை அதிர்ச்சி தருவதில்லை. காரணம் சிறு வயது உடல் பருமன் உள்ள பிள்ளைகளை காண்பது அனுதினமும் அதிகரித்து வருகிறது.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் எடை விசயத்தில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் வயதுக்கு இருக்கும் எடையை விட குறைவாகவோ சரியாகவோ இருப்பதைக் காண முடியும். ஆனால் தனியாரில் பயிலும் மாணவ மாணவிகளில் பலர் தாங்கள் இருக்க வேண்டிய எடையை விட அதிகமாகவும் மிக அதிகமாகவும் இருக்கின்றனர்

5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது. ஏன் இக்கால குழந்தைகள் குண்டாகிறார்கள் ? பசி என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.

ஆனால் நமது தமிழகத்தில் பசி… பசி… பசி… என்ற ஓலமும் எங்கும் பசியால் மரணித்த உடல்களைக் கொண்டு ஒப்பாரியும் கேட்டது என்றால் நம்ப முடிகிறதா.??

வரலாற்றின் இருண்ட பக்கங்களை சென்று பார்த்து விட்டு வந்தால்… நாம் யார்? நமது ஜீன் கட்டமைப்பு என்ன? நமது மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற சொத்து எது?
என்று தெரியும்..

படிக்க:
♦ அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்
♦  கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஆம்.. அது 1876 ஆம் ஆண்டு. தென்னிந்தியாவை வரலாற்றில் மிகப்பெரும் பஞ்சம் தாக்கியது. (பஞ்சம் என்றால் என்னவென்று நம் குழந்தைகளுக்குத் தெரியாது. ஏன் நமக்கே தெரியாது. கற்றுக்கொடுப்போம்)

Great Famine of Madrasஅரிசி, கோதுமை விளையவில்லை. சிறு தானியங்களும் கைவிட்டன. ஆங்கில
அரசாங்கத்தின் கருமித்தனமான நடவடிக்கைகளால் பஞ்சம் முறையாக சரிசெய்யப்படவில்லை.

எங்கு காணிணும் மக்கள் எலும்பும் தோலுமாக காட்சி அளித்தனர். மிகக் கொடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர்.

1877 ஆம் ஆண்டு மிகப்பெரும் மலேரியா கொள்ளை நோய் வந்தது. ஏற்கனவே பஞ்சத்தால் குற்றுயிர் குலையுயிராய் இருந்தவர்களை மலேரியா காவு வாங்கியது. அந்த பஞ்சமானது மூன்று ஆண்டுகள் நீடித்தது.

கிட்டத்தட்ட 55 லட்சம் மக்களை கொன்றொழித்துப் போனதென்கிறது வரலாறு. அன்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தவர்களின் வாரிசுகள் தான் நாம். நமது ஜீன்களுக்கு பஞ்சமும் பட்டினியும் மிகவும் பரிச்சயமானவை.

மூன்று வேளையும் அரிசி உணவை உண்பது என்பது மன்னர்களுக்கே கூட கிடைக்காத காலம் இருந்தது. தொப்பை போட்டு கொலுக் மொலுக் என்று இருக்கும் யாரையும் பார்த்தால் அவரை அனைவரும் வணங்கியிருப்பர். காரணம் அவர் பெரிய மிராசுதாராகவோ அல்லது மன்னராகவோ தான் இருந்திருக்க முடியும்.

நமது மூதாதையர்களின் ஜீன்களில் ஒரு பூதம் ஒழிந்திருந்தது. அந்த பூதம் ஜாடிக்குள் இருந்து வெளியே வராமல் தான் இருந்தது. நாம் கடந்த முப்பது வருடங்களாக அந்த ஜாடியை திறந்து பூதத்தை வெளியே விட்டு விட்டோம்.

அந்த பூதம் தான் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்

ஜாடியைத் திறப்பது என்பது நாம் உண்ணும் அதிக மாவுச்சத்து / ஃபாஸ்ட் ஃபுட் / குளிர்பானம் / சீனி சக்கரை எல்லாம். இப்போது பூதம் செய்யும் கபளீகரம் தான் நீரிழிவு, உடல் பருமன், PCOD, இதய நோய், கிட்னி நோய் எல்லாம்…. 

மீண்டும் பூதத்தை ஜாடிக்குள் அடைக்க முயற்சிகள் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை நாம் உடனே உணர வேண்டும்…

காரணம் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சமுதாயம் வரலாறாகிவிடும்….

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.