மிக நீண்ட நாட்களாக பெண்கள் சார்ந்த இந்த தினத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த எனது கண்ணோட்டத்தின் நீட்சியே இக்கட்டுரை.

இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி  என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன.  ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. இதைத்தான் கார்ப்பரேட்டுகள்,  “ஊடகங்களின்  மூலம் சந்தைப்படுத்துதல்” என  நமக்கு சொல்லி தருகின்றன. இதுதான் உண்மையில் மகளிர் தினமா ?

இல்லை.. உண்மை அதுவல்ல. மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.  இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். ஆணும் பெண்ணும் சேர்த்தேதான் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்கூட.

இதை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு  தீம் (Theme) முன்னெடுக்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான தீம் #BalanceforBetter   என்பதாகும். ஆணும் பெண்ணும் சமம் என்கிறது.  Gender Equality (பாலின சமத்துவம்) என்பது கல்வி, கடமை, வேலை வாய்ப்பு, உரிமை என எல்லாம் இருவருக்கும் ஒன்று என்பதே.

ஆனால், எதார்த்தத்தில் சமூகம் அப்படியானது அல்ல; அது பெண் என்பவளை உடல் சார்ந்தவளாகவும், அவளது உழைப்பை பயன்படுத்தி கொள்ளவும் மட்டுமே பார்த்து வருகிறது. தற்போது இது மாறிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறு.

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 7 மணி நேரமும், பெண்கள்  9 முதல் 11  நேரம் வரை உழைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை கணக்கில் கொள்வதில்லை என்கிறது. ஆனால், ஆணோ பெண்ணோ யார் எதைச் செய்தாலும் அது வேலையே. ஆனால், நம் சமூக அமைப்பு இதிலிருந்து வேறுபடுகிறது. உலக பாலியல் பேத பட்டியலில் (Global Gender Gap Index) ஆய்வறிக்கை  149 நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில்  இந்தியா 108-வது இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று மற்றுமொரு ஆய்வில் உலகில் சமத்துவத்தை பாதுகாக்கின்ற நாடுகளில் முதலிடத்தில் பெல்ஜியம் அதைத் தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ், லட்டவியா, லக்ஸ்சம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அதில் பிரான்ஸ் அபரித வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

பெண்களின் பாதுகாப்பு

பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. போர் சூழ்ந்து உள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் கூட நம்மைவிட பின்னால் இருக்கின்றன. இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, பெண்களின் மீதான பாலியல் வல்லுணர்வு, அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று.

பெண் கல்வி

பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதத்தில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால், 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுவருகிறது. அதை ஆளும் மத்திய  அரசு 0.45-யாக மேலும் குறைத்துள்ளது. இப்படி கல்வியும் அடிபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே.

படிக்க:
உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
வாழத்துடிக்கும் பெண்ணினம் ! வாழ்க்கை மறுக்கும் சமூகம் !

பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பெண் உயர் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து கொடுக்ககூடிய உணவுகளை தவிர்க்கக்கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. மேலும், கடந்த மாதம் 5 மற்றும்  8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து எதிர்ப்புகள் கிளம்பியபின் அதை ரத்து செய்தது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டும் பள்ளிக் கட்டமைப்பை, ஆசிரியர் மேம்படுத்தல், புதிய கற்றல் முறை போன்று கற்றலை மேம்படுத்த வேண்டுமே தவிர குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு.

இவ்வாறு செய்வதன் முலம் பெண் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது.  இப்படி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல்  செயல்படுகிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் மாறாக கேரளா இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.

பெண்களின் வேலை மற்றும் ஊதியம்

உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization (ILO) 2018-19 ஆண்டின்  ஆய்வு அறிக்கை Business Standard இதழில் கடந்த நவம்பர் மாதம் வெளி வந்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது  34% ஆண்களை விட பெண்கள்  குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் பகுதி நேர வேலை செய்யும்  16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இப்படி கல்வித்துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையிலும் இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு 20%-ஆக இருந்த இருந்த பாலின ஊதிய இடைவெளி (Gender Wage Gap ), இந்த 2018-19-ம் ஆண்டும் தொடர்கிறது.

இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இச்சூழலில் மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் நம் உரிமைகளை கோரி …

சிந்துஜா சமூக ஆர்வலர்.