மிழகத்தில் மட்டும் சில ஆயிரம் வாட்சப் குழுக்களை தாம் நடத்தி வருவதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் தேர்தல் பரப்புரைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

ஏற்கெனவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் “நமோ வாரியர்ஸ்” எனும் பெயரில் இது போன்ற குழுக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டோருக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது அக்கட்சி. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் வாட்சப் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கிறது ஸ்க்ரோல் இணையதளம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியச் சந்தையில் திறன்பேசிகளின் (Smartphones) பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஒலி அலைகளைக் கடத்துவதன் மூலம் பேசுவதற்கான ஊடகமாக இருந்த ”இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை” அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகளிலேயே மூன்றாம் தலைமுறை அலைக்கற்றையும் அதைத் தொடர்ந்து நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவைகளும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒரு பக்கம் இணையத் தொழில்நுட்பம் வெப் 2.0 அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது. வளர்ந்து வந்த செல்பேசி தொழில்நுட்பமும் இதனோடு கைகோர்க்க, வாட்சப் போன்ற குறுஞ்செய்திச் செயலிகள் மக்களிடையே மிக வேகமாக புழக்கத்துக்கு வந்துள்ளது.

2010 -ம் ஆண்டு இந்தியாவுக்கு அறிமுகமான வாட்சப் சேவையை இன்றைய தேதியில் நாடெங்கும் சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் வாட்சப்பின் ஒன்பதாண்டுகால வளர்ச்சியின் போக்கில் அது வதந்திகளைப் பரப்புவதற்கு மிகச் சிறந்த சாதனம் எனப் பெயரெடுத்துள்ளது. வாட்சப் மூலம் பரவிய வதந்திகள் பல இடங்களில் கலவரமாக வெடித்துள்ளன. பிற நாடுகளில் தேர்தலின் முடிவுகளையே கூட தீர்மானிக்கும் நிலையை அது அடைந்துள்ளது. எதிர் வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களத்தை “வாட்சப்பின் களம்” என்றே பலரும் வர்ணிக்கின்றனர்.

படிக்க:
♦ நெஸ்ட்டின் மூலம் வீட்டிற்குள் ஒட்டுக் கேட்ட கூகிள் !
♦ கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் !

மின்னணு தொழில்நுட்பத்தை தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் பாரதிய ஜனதா, வாட்சப்பிலும் வலுவாக கால் வைத்துள்ளது. நாடெங்கும் சுமார் 9 லட்சம் தொண்டர்களைக் கொண்ட “செல்போன் பிரமுக்” என்கிற பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பகுதி சார்ந்த வாட்சப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் மோடியின் சாதனைகளையும், பாரதிய ஜனதாவின் பிரச்சாரங்களையும் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். இதன் மூலம் அவர்களால் எதைச் சாதிக்க முடியும் என்பதை கடந்தாண்டு நடந்த பிரேசில் தேர்தல் மற்றும் அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களும் உணர்த்துகின்றன.

இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் அரசியல் கட்சிகள் வாட்சப் போன்ற செயலிகளைக் கொண்டு பொதுக்கருத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, வதந்திகளை குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துவது என்பது நடக்கத்தான் செய்கிறது. ஆனால், பாரதிய ஜனதாவின் விசயத்தில் அக்கட்சி வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கொண்டு ஒருவிதமான தேசிய வெறி அடிப்படைவாதத்தை கட்டமைத்துள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைப் பயன்படுத்தி தேச வெறியூட்டும் பொய்ச் செய்திகளும், வதந்திகளும் வாட்சப்பில் வைரலாக பரப்பப்பட்டதை நாம் பார்த்தோம். பாகிஸ்தானுடன் போர் வெறியைத் தூண்டுவது, அது இயலாத பட்சத்தில் அந்த வெறியை அப்படியே இசுலாமியர்களுக்கு எதிராக திருப்பி விடுவது என இந்தப் போக்குகள் மிக ஆபத்தான திசைகளில் பயணிக்கத் துவங்கியுள்ளன.

சுமார் 30 கும்பல் கொலைகளுக்கு வாட்சப் மூலம் பரப்பப்பட்ட வதந்திகளே வித்திட்டுள்ளன. குறிப்பாக குழந்தை கடத்தல் கும்பல் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் சில அப்பாவிகளின் உயிர்களைப் பறித்துள்ளன.

தனது செயற்தளம் கேடான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வாட்சப் நிறுவனம் குறுஞ்செய்திகளைக் கடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு பயனர் சொந்த முறையில் எழுதும் செய்திக்கும், இன்னொருவரிடம் இருந்து வந்த செய்தியை மற்றவர்களுக்கு கடத்துவதையும் வேறுபடுத்திக் காட்டும் முறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், வாட்சப் என்பது ஒரு சாதனம்தான் – அதுவே தன்னளவில் ஒரு கலவரத்தையோ கலவரச் சூழலையோ உருவாக்கி விடாது என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் நிலவும் பிளவுகளை மேலும் அதிகரிக்கச் செய்ய அதே சமூகத்தின் பொதுபுத்தியை வாட்சப் வதந்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இசுலாமியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரின் மீது கடந்த பல பத்தாண்டுகளாக இந்துத்துவ கும்பல் ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டமைத்துள்ளது.

அதே போல் தலித்துகளுக்கு எதிரான பொதுபுத்தியும் இந்த வகையில் அடங்கும். வாட்சப் வதந்திகள் இந்த பொதுபுத்தியைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தள தொழில்நுட்பங்கள் புதிய சாத்தியங்களைத் திறந்து விடுகின்றன.

ஆக, இந்தப் போக்குகளை நாம் தொழில்நுட்ப தளத்தில் மட்டும் வைத்துப் பார்க்காமல் சமூக அளவில் நேர்மறையான பிரச்சாரங்களின் மூலம்தான் எதிர் கொள்ள வேண்டும். இந்துத்துவ கும்பல் இந்த சமூகத்தின் நாளங்களில் ஏற்றியிருக்கும் நஞ்சை நாம் அதற்கான எதிர்பிரச்சாரங்களின் மூலம்தான் முறிக்க முடியும்.


-சாக்கியன்
செய்தி ஆதாரம் : ஸ்குரால் இணையதளம்