யற்கையாய் அமைந்த இவ்வுலகில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தோன்றி 2-1 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. உயிர்கள் தோன்றி கிட்டத்தட்ட 2.5 பில்லியன் ஆண்டுகள் (அமிபா, பூஞ்சை ) இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், நம் உலகில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு உள்ளாக தோன்றிய மதங்கள் உலகம் மற்றும் பிரபஞ்ச படைப்பை பற்றி கூறும் கதைகளை நினைத்தால் வேடிக்கையாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருக்கிறது.
மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…

திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள். அன்று போதிய கல்வியறிவு அற்ற மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சென்றதில் எஸ்.டி. விவேகி போன்றவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய கல்வி அறிவு பெற்ற சமூகமும் அன்றைய மக்களைப் போன்றுதான், இன்றும் விழிப்புணர்வற்று, அறிவியல் மனப்பான்மையற்று, அடிமை உள்ளம் கொண்டு மதமவுடீகத்தில் வீழ்ந்து அலைந்து திரிகிறார்கள்.

இன்றும் விவேகி போன்ற கருத்தாளர்களின் கருத்து தேவையானாதாகவே இருக்கிறது.
வேத மத புரோகிதத்தால் நாம் எவ்வளவு வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை எத்தனை ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார். நமது இன்றைய நிலையிலும் அடிமையாய் வாழ்ந்து, அடிபடும் இனமாக இருப்பதை எண்ணி வேதனைப்படமால் இருக்கமுடியாது. பார்பனியத்தின் சூழ்ச்சி சோ, சுப்ரமணியசாமி வடிவில் இன்றும் சாணக்கியத்தனம் செய்து அழிக்கத்தானே நினைக்கிறது!

அன்றைய அடிமை அரசர்களைப்போல் தான், இன்றைய அடிமை அரசாங்கங்களும் செயல்படுகின்றன. ஆசிரியரின் சொற்கள் மத வாதிகளை கடுமையாகவும் வேறுபாடு இன்றியும் தாக்குவது அவரது நேர்மையையும், உண்மையையும் காட்டுகிறது. நம்மை தாழ்த்தியும் வேறுபடுத்தியும், கேவலப்படுத்தியும் வரும் மத புரோகிதத்தின் மீதான கோபமும், வேதனையும் அவரை கடுமையாக விமர்சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது இதனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்..

கேரளாவில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்களில் ஒன்று “ஒரு தந்தைக்கு பிறக்காதவனே” என்று திட்டுவது, விபச்சாரி மகன் என்பதை எப்படி இலக்கிய வடிவில் சொல்வது போன்று சொல்கிறார்கள். அது போல் நமது மதங்களும் மனிதர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் கேவலப்படுத்துவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அதன் மீதான கோபமே ஆசிரியரின் கடுமையான சொற்களுக்கு காரணமாகும்.
இந்நூல் பழைய தமிழகத்தை ஆண்ட அரசர்களின் மற்றும், இந்திய அரசர்களின் அடிமைப் புத்தியையும், ஐரோப்பிய மத புரோகிதத்தின் அறிவியல் மானிட எதிர்ப்பு சிந்தனைகளையும் வெட்டவெளிச்சமாகப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)

தோழர் எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த நாத்திகர், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே தந்தை பெரியாருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டங்களில் பேசியவர்கள் இருவர். ஒருவர் திருவாரூர் தங்கராசு மற்றொருவர் எஸ்.டி. விவேகி.
சாகுல் அமீது என்ற தன் பெயரை விவேகம் நிறைந்தவர் என்ற பொருளில் விவேகி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களில் மசூதிக்கு போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர்களில் ஒருவர் எஸ்.டி. விவேகி… எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த மத ஆராய்ச்சியாளர். எல்லா மதங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்தவர், குரான், பைபிள், இந்து புராணங்கள் என ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து பேசியவர்- எழுதியவர்.

படிக்க:
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

தந்தை பெரியாரின் பஞ்சசீலம் என்று 5 நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஒரே தலைப்பில் இருபது மணி நேரம் பல கூட்டங்களில் பேசியுள்ளார். தனியாகவும் பல மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய அறிவாற்றலை எண்ணி எண்ணி வியப்படைவேன்.

இன்னும் நாம் அறிந்து உயரவேண்டிய நல் அறிவும், பேரறிவாற்றலும் உள்ள மாபெரும் பகுத்தறிவு களஞ்சியத்தை, நமக்காக நம் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள். அவற்றிலிருந்து இயன்ற அளவு எடுத்தும், அறிவியல், புவியியல், வானியல், வரலாற்றியல் ஆதாரங்களோடு இணைத்தும் தோழர் S.D.விவேகி அவர்களால், ‘பைபிள்’ ‘குர்-ஆன்’, ‘ரிக்’ முதலான வேத வசனங்களோடு மோதவிட்டும் தொகுக்கப்பட்டுள்ள நூல்தான் இந்த ‘வேதமும் விஞ் ஞானமும்’ என்ற நூல்.

இந்த நூலில், உலக வரலாற்றின் உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, ஆதி முதல், இன்று வரையில் ஏற்பட்டுள்ள வேத – விஞ்ஞானப் போராட்டங்களுக்கு ஏற்பப் பொருத்தமாகக் குறித்துத் தரப்பட்டுள்ளன! மடமைக்கும் – அறிவுடைமைக்கும்
இடையே நீண்ட நெடுங்காலமாகத் நிகழ்ந்து வந்தப் பயங்கரக் கொலை பாதகக் கொடிய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை படிப்போர் உள்ளம் பதைபதைக்கும்!!

கி.பி. 1619-ல் வானனி என்ற பெயருடைய தத்துவஞானி ஒருவரை, பிரஞ்சுக் கிறிஸ்துவப் பாதிரிகள், கொடுந்தீயிலிட்டுக் கொளுத்தப்போகும்போதும் அவர் அஞ்சாது கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ளாதுக் கோபப்பட்ட அக்கொடியோர். அத்தத்துவ ஞானியின் நாக்கை பலாத்காரமாகப் பிடுங்கித் தீயிலிட்டு எரித்துவிட்டுப் பிறகுதான், துடித்துடித்துத் தவித்து வாய்வழியே இரத்தம் கொட்ட வதைபட்டுக்கொண்டிருந்த அவ்வறிஞர் வானனியையும் அதே தீயிலிட்டு எரித்துச் சாம்பலாக்கினர், அந்த “அன்பே கடவுள்” (LOVE IS GOD) என்று பாசாங்காகப் பேசி பாமரமக்களை மயக்கும் அக்கொலைகாரப் பாதிரிமார்கள் என்றால், இதைப்படிக்கும் எவருள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

அதேபோல், நம் நாட்டிலும் “அன்பே சிவம்” என்று பாசாங்காகப் பேசி, பாமர மக்களை ஏமாற்றி, சைவசமயத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த கொலைகாரனாகிய வேதியக்கயவன் சம்பந்தன் மதுரையிலேயே எண்ணாயிரம் சமணத் தத்துவ ஞானிகளைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டுவரச்செய்து கொஞ்சமும் ஈவிரக்கமே இல்லாமல், கழுவிலேற்றி சித்திரவதை செய்து சாகடித்த சண்டாளக்கொலை பாதகத்தைப் படிக்கும்போதும், யாருடைய உள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

கி.பி. 600-ல். “அலெக்ஸாண்டரியா பல்கலைக்கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டு, பாய்ந்து சென்ற இஸ்லாமிய மதவெறியன் அமீர் என்பவன் அப்பல்கலைக்கழகத்தின் மகத்தான அறிவியல், வானியல் களஞ்சியமாகிய மாபெரும் நூல் நிலையத்தில் இருந்த விஞ்ஞான தத்துவ விளக்கங்கள் நிறைந்த – நூல்களை எல்லாம் தீயை வைத்துக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டான் என்றால், எந்த பகுத்தறிவாளரின் மனந்தான் பதை பதைக்காமலிருக்க இயலும்? (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்:வேதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர்: எஸ்.டி.விவேகி

வெளியீடு: அங்குசம் வெளியீடு,
எண்:15, எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
தொலைபேசி: 94443 37384

பக்கங்கள்: 224
விலை: ரூ 110.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277