ரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ இழுத்து மூடும் அத்தனை சாத்தியங்களுடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கடந்த மாதம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக செய்தி வெளியானது. ஒரேடியாக நிறுவனத்தையே மூடிவிடும் யோசனையில் அரசு இருப்பதாகவும்கூட செய்தி வந்தது. செய்தியை மறுத்த மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றது.

ஆனால், அம்பானியின் ஜியோ-விற்கு விளம்பர தூதுவராக பிரதமரே இருக்கும் நாட்டில், ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கும் செய்தியும் வெளியானது. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் தேதியில் தர வேண்டிய சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடை நிலை ஊழியர்கள் அவலத்துக்குரியதாக மாறியிருக்கிறது. மார்ச் மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைக்காத நிலையில் பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் கதறி அழும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

காசியாபாத், ராஜ்நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றும் பிந்து பாண்டே, இந்த மாதம் வரவேண்டிய சம்பளம் வழங்கப்படாத நிலையில் தன்னுடைய குழந்தைகளுக்கு சாப்பாடுகூட தரமுடியவில்லை என கதறுகிறார். இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் இவர், இந்த சம்பளத்தை மட்டுமே நம்பி தங்களுடைய குடும்பம் இருப்பதாகக் கூறுகிறார்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மகன் ஆறாம் வகுப்பும், மகள் பனிரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பால்காரருக்குக்கூட என்னால் பணம் தரமுடியவில்லை. பள்ளி தொலைவில் இருப்பதால், ஆட்டோவில் அனுப்ப பணம் இல்லை. என்னுடைய குழந்தைகளின் நண்பர்களிடம் அவர்களையும் சேர்த்து அழைத்துப் போகச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மொபைல் போனைக்கூட ரீசார்ஜ் செய்யமுடியவில்லை. ஏனெனில் என்னுடைய சம்பளம் குறைவானது, அதை தேவையானதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நிமிடத்தில் எனக்கு அடிப்படை விசயமான உணவுதான் முக்கியம்” என க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் பிந்து.

படிக்க:
முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம போராடணும் | மக்கள் கருத்து !

தற்போது அக்கம்பக்கம் தெரிந்தவர்களிடம் 500, 1000 என கடன் வாங்கி, சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிந்து. “அலுவலகத்தில் எல்லோருடைய நிலைமையும் இதுதான். சீனியர்களுக்கும்கூட தவணை கடனை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்கிறார்.

“பொதுவாக ஒரு அலுவலக உதவியாளர் வாங்கும் சம்பளத்தின் அளவில்தான் என்னுடைய சம்பளம் வரும். மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் என்னுடைய சம்பளம் முழுமையும் காலியாகிவிடும். சம்பளம் வழங்கும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன்” என தன்னுடைய நிலைமையை விளக்குகிறார் பிந்து.

பிந்து பாண்டே

இந்த வீடியோவை எடுத்த நபர், ஊழியர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தை அரசு வழங்கவில்லை, அதனால்தான் நிறுவனத்தால் சம்பளம் தரமுடியவில்லை என்கிறார். டெல்லி அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார் பிந்து.

“எங்களால் முடிந்தவரையில் நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாகச் செய்கிறோம். வருமானம் வரும் அளவுக்கு பணியாற்றுகிறோம். ஆனால், எங்களுடைய ஊதியம் வந்து சேரவில்லை என்றால், எவ்வளவு காலத்துக்கு இந்த வேலையை செய்து கொண்டிருக்க முடியும்?” என்கிற கேள்வி மூலம் மோடி அரசு, பிஎஸ்என்எல் ஊழியர்களை இத்தகைய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கி அந்நிறுவனத்தை மூட முயற்சிக்கும் சதித்திட்டம் அம்பலமாகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பிந்து பாண்டேவின் வீடியோவை முன்வைத்து பலர் மோடி அரசை கடுமையாக வசை பாடி வருகின்றனர்.

பத்திரிகையாளர் ரவி நாயர், ‘ஒரு பிஎஸ்என்எல் ஊழியர் பணம் இல்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை என கதறுகிறார். இதுதான் மோடியின் ஐந்தாண்டுகால வளர்ச்சியின் லட்சணம்’ என எழுதியுள்ளார்.

“பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவரின் கதறலைக் கேளுங்கள். அவருடைய கண்ணீரைப் பாருங்கள். வரலாற்றில் முதல் முறையாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் போயிருக்கிறது. ஒரு பிரதமர் தனியார் நிறுவனங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவர்களைப் பார்க்கக்கூட அவருக்கு நேரமில்லை. வெட்கம்!” என்கிறார் ரோஷன் ராய்.

ரஜத் சொல்கிறார், “பிஎஸ்என்எல் ஊழியரின் உண்மையான நிலைமை இதுதான். பிஎஸ்என்எல்-ஐ காப்பாற்றுங்கள்; நாட்டை காப்பாற்றுங்கள். பிஎஸ்என்எல் நிறுவனமே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கு!”

கெவின் வடிவேல் : ‘இந்தியா உங்கள் கண்முன்னே சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது… விழித்துக் கொள்ளுங்கள் மக்களே..1.7 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தங்களுடைய மாத சம்பளத்தை இன்னும் பெறவில்லை’

மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய சொந்த இமேஜ் பில்டப் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தும் மோடி ஆட்சியின் மகா கேவலமான நிலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் பிந்து. இவரைப் போன்ற லட்சக்கணக்கான ஊழியர்களின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போகிறது கேடுகெட்ட சாடிஸ்ட் அரசு?


-கலைமதி
நன்றி: த க்விண்ட்

8 மறுமொழிகள்

  1. மக்களே , தோழர்களே தயவு செய்து சேவை தரம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்,தயவுசெய்து அனைவரும் BSNL நிறுவனத்திற்கு மாறுங்கள்.. இந்த காவி சங்கி வேசி மகன்களின் சூழ்ச்சியில் இருந்து நம் தேசத்தினையும், நம் தேசத்தின் உயிர் நாடியான பொதுத்துறை நிறுவனங்களையும் நாம் தான் காப்பாற்ற வேண்டும்…

    • BSNL customer care உலகத்திலேயே மிக மோசமான ஒன்று, போன் செய்தால் மதிப்பு கொடுத்து கூட பேச மாட்டார்கள். அப்படியே யாராவுது சரி செய்வதற்கு வந்தால் அவர்களுக்கு லஞ்சம் வேறு கொடுக்க வேண்டும், இது போதாது என்று பாதி நாட்கள் தொலைபேசி வேலையே செய்யாது…

      கிராமங்களில் BSNL தவிர வேறு பிராட்பேண்ட் சேவையே கிடையாது, வேறு பிராட்பேண்ட் சேவை கிடைத்தால் அனைவரும் தலைதெறிக்க BSNLயை விட்டு ஓடிவிடுவார்கள்.

      பொதுத்துறை நிறுவனங்களை கம்யூனிஸ்ட்கள் நாசம் செய்து வைத்து இருக்கிறார்கள், வேலை செய்யாமல் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்குவது தான் கம்யூனிச கொள்கை.

  2. அண்ணல் காந்தியடிகளின் காலத்தில் அந்நிய துணி பகிஷ்காரம் செய்ததனை போன்று, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை நாம் புறந்தள்ள வேண்டிய கட்டத்திற்கு வந்து நிற்கிறோம் .. ஆகவே அனைவரும் தனியார் நிறுவனத்தின் சிம்மை பயன்படுத்துவதை தவிர்த்து, பொதுதுறை நிறுவனமான bsnl க்கு உடனடியாக மாறுவோம்.. அதிலும் மிக குறிப்பாக நாட்டையே கபளீகரம் பண்ணும் அம்பானியின் JIO சிம்மை கழட்டி குப்பையில் வீசுவோம்.. அவன் குடுக்கும் இலவச டேட்டா எலும்பு துண்டுக்கு நாம் விலை போக கூடாது.

    நம் பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் ஊழியர்களான நமது மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை இப்போது நம் முன் உள்ளது..ஒரு ஜியோ சிம்மை கழட்டி குப்பையில் வீசுவது, இந்த தேசத்திற்கு செய்யும் மிக பெரிய சேவை.. அம்பானியின் ஜியோவிற்கு விளம்பர தூதுவராக வந்த மோடியின் முகத்தில் காறி துப்பியதற்கு சமம்.. ஆகவே உண்மையான தேசபக்தர்கள் இதை செய்ய முன் வாருங்கள்.. பாரத மாதா இதனால் மட்டுமே மனம் குளிர்வாள் ..பாரத மாதா உங்களை ஆசீர்வதிக்கட்டும் ..

  3. 1) நானும் சமீபத்தில் BSNLக்கு என்னுடைய SIMஐ மாற்ற முயன்று, 3 வாரங்கள் நாயை விட மோசமாக அலைந்து அதை மாற்றமுடியாமல் கடைசியில் வேறு வழி இல்லாமல் ஜியோவிற்கு மாறினேன்

    அங்கு MNP application formஐ வாங்க கூட ஆளில்லை என்கிறார்கள். அவர் விடுப்பில் இருக்கிறார் என்கிறார்கள். அவர் உணவு இடைவேளையில் இருக்கிறார் என்கிறார்கள்

    சம்பந்தப்பட்ட ஆள் இல்லை என்றால் வேறு ஆட்கள் அதை வாங்கி கொண்டு சம்பந்தப்பட்ட ஆள் வந்தவுடன் கொடுக்கலாமே

    2) என்னுடைய வீட்டில் BSNL broadband தான் துவக்கத்தில் இருந்து இன்று வரை உபயோகிக்கிறேன். பழுது என்றால் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் சரி செய்ய. சமயத்தில் 1 வாரம் கூட ஆகும். நான் அவ்வப்போது work-from home செய்பவன். நெட் வேலை செய்யவில்லை என்றால் ஆபீஸ் கிளம்பி ஓட வேண்டும்

    பழுது பார்க்க வேண்டும் என்றால் வரும் ஊழியருக்கு Rs 100/- அல்லது Rs 200/- வாங்காமல் போக மாட்டார். சமயத்தில் நீங்கள் கொடுக்கும் பணம் போதவில்லை என்று நான் திட்டு வாங்கியதும் உண்டு

    பொது துறை நிறுவன ஊழியர்கள் குறிப்பாக BSNL போன்று வாடிக்கையாளரை மய்யமாக கொண்டு இயங்குபவை ‘பொது மக்களை’ மக்களாகவே பார்ப்பதில்லை என்பது அப்பட்டமான உண்மை

    நன்றி

  4. பிஜேபி அல்லது காங்கிரஸ் யார் ஆட்சிக்கு வந்தாலும் பொது துறை நிறுவனங்களை மெல்ல மெல்ல close செய்துவிடுவார்கள். இதில் சந்தேகம் வேண்டாம்.

    அரசியல் கட்சிக்கு சற்றும் சளைக்காமல் ஊழியர்களின் நடத்தையும் அப்படி தான் உள்ளது. ஏன் தான் அரசாங்க அலுவலகத்திற்கு நுழைந்தமோ என்கிற எண்ணத்தை அரசு அதிகாரிகள் உருவாக்கி விடுகிறார்கள்

  5. அரசு நிறுவனங்களில் பிரச்சனைகள் சிக்கல்கள் இல்லாமலில்லை ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக தனியார் துறையிடம் நாட்டை அடகு வைப்பது சரியல்ல… இதே சென்னையில் 2015 இல் கன மழை பெய்த பொழுது, தனியார் பேருந்துகள் செல்ல மறுத்த, நீர் தேங்கிய குண்டும் குழியுமான சாலைகளில் கூட அரசு பேருந்துகள் மக்களை சுமந்து சென்றது அனைவரும் நேரில் கண்ட ஒன்று … இதுவே இந்நேரம் போக்குவரத்து முழுவதும் தனியார் கையில் இருந்திருந்தால், மக்களை பற்றி மயிரளவும் அக்கறை படாமல் அனைத்து பேருந்துகளும் முதலாளிகளின் கொட்டகைக்குள் முடங்கி இருக்கும். இங்கும் பொது மக்களை பொதுத்துறை தான் காப்பாற்றியது.

    பிரச்னையை சரி செய்ய வேண்டுமே தவிர, அதற்காக மக்களுக்கு சொந்தமான அரசு துறை நிறுவனங்களை ஒழித்து கட்டுவது முறையல்ல.. அங்கு வேலை செய்ய போதுமான ஆட்கள் நிரப்பபடவில்லை.. பள்ளி கல்வி முதல், பொது சுகாதாரம், போக்குவரத்து வரை ஒவ்வொருவருக்கும் பொதுத்துறை என்றால் மோசமான அனுபவம் ஏற்பட்டு தனியாரிடம் போக வேண்டும் என்பது தான்அரசின் எண்ணமும். இதில் பாரத மாதாவை கூட்டி கொடுக்கும் Broker மோடி அரசு முன்னணியில் இருக்கின்றது. அதற்காக தான் திட்டகுழுவை ஒழித்து கட்டிவிட்டு, சர்வதேச தரகர்களை ஒன்று கூட்டி நிதி ஆயோக் என்கிற அமைப்பு ஒன்றை மோடி அரசு உருவாக்கியது இந்த சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டு இதற்க்கு துணை போகாமல் இருக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

    அதெல்லாம் இருக்கட்டும் இன்னும் மோடி அரசு ஏன் BSNL க்கு 3G யில் இருந்து 4G தொழில்நுட்பத்திற்கு மாற விடவில்லை அல்லது அனுமதி அளிக்கவில்லை.. அதனை செய்து விட்டு பிறகு நஷ்ட கணக்கு பற்றி பேசி இருக்க வேண்டும் …

  6. ”ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மார்ச் மாதத்துக்கான சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை.” – மார்ச் மாதச் சம்பளம் தரப்படவில்லை என்பது தவறு. பிப்ரவரி இறுதி நாளில் அல்லது மார்ச் முதல் நாளில் வழங்கியிருக்க வேண்டிய பிப்ரவரி மாத சம்பளம்தான் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. கட்டுரையைப் பிரசுரிக்கும் முன் இது போன்ற விடயங்களில் கவனம் கொடுத்து வெளியிடவும்.

  7. நாட்டு மக்களில் 90 சத க்கு மேற்பட்டவர்கள் தனியார் துறையில் வேலை செய்து சீரழிகிறார்கள். அல்லது சுயதொழில் செய்து அழிந்து போகிறார்கள். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வெறும் ஆறு அல்லது ஐந்து சதவீதம் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி பயணப்படி அந்தப்படி இந்தப்படி ஓய்வூதியம் பிராவிடன்ட் ஃபண்ட் என எல்லாம் கொடுத்து அரசுக்கு வரும் வருமானத்தை எல்லாம் துடைத்து எறிவதுதான் கம்யூனிசம் போலும். இதனால் விலைவாசி மேலும் ஏறுகிறது. மீதமிருக்கும் 90 சதவிகித மக்களுடைய வாழ்வாதாரங்களை அது பாதிக்கிறது. ஆகையால் அரசு நிறுவனங்களை மூடுவது அல்லது தனியார் மயமாக்குவது என்பது ஒருவகையில் நல்லதுதான். அம்பானியும் அதானியும் கொள்ளை அடிக்கிறார்கள். அதனால் நாங்களும் கொள்ளையடிப்போம் என அரசு ஊழியர் சங்கங்கள் மறைமுகமாக கூறுகிறார்கள். அதை இந்தக் கட்டுரை வழிமொழிகிறது.

Leave a Reply to Sathish பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க