மோடி ஆதரவாளரான என் நண்பருக்கு ஒரு கடிதம் !

டந்த பல மாதங்களாக இந்தக் கடிதத்தை எழுத விரும்பினேன். மக்களவைத் தேர்தல் வரவிருக்கிற நிலையில், இதை எழுதுவது கட்டாயம் என நினைக்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நாம் ஒருவரையொருவர் அறிவோம்.  இது நீண்ட காலம்தான். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.  நாம் இருவரும் எண்ண முடியாத அளவுக்கு தேநீர் கோப்பைகளையும் நீண்ட மணி நேரங்களையும் வாழ்க்கை குறித்தும் பேரண்டம் குறித்தும், ஏன் அனைத்தையும் பற்றியுமே பேசியிருக்கிறோம். நீங்கள் உங்களுடைய குடும்ப விழாக்களுக்கு அழைத்திருக்கிறீர்கள். நான் எங்களுடைய குடும்ப விழாக்களுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்.  எனது மகிழ்ச்சியும் துக்கத்திலும் நீங்கள் பங்கெடுத்தீர்கள். அதுபோலவே நானும்!

இந்தக் கடிதம் எழுதுவதற்கு அத்தனை எளிதானது அல்ல, ஆனபோது, தேவையாக இருப்பதால் எழுதுகிறேன்…

ஓராண்டுக்கு முன், நீங்களும் நினைவில் வைத்திருக்கலாம். ‘கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டை எப்படி கொள்ளையடித்தது’ என்பது பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பத் தொடங்கினீர்கள். யோகா, தியானம், நேர்மறை சிந்தனை, நட்பு போன்றவற்றுடன் இந்த குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். வழக்கமாக எனக்கு வரும் காப்பி – பேஸ்ட் குறுஞ்செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி பதில் அனுப்புவதை அனுப்புகிறவர்களும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.

அதன் பிறகு, நரேந்திர மோடியின் அரசு எத்தனை அற்புதமானது என்கிற தொடர் செய்திகளை அனுப்பத் தொடங்கினீர்கள். எனது நினைவு சரியென்றால், அதற்கெல்லாம், சிரிப்பை பதிலாக அனுப்பியிருக்கிறேன். அனைவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கும். உங்களுடைய கருத்து உங்களிடம், என்னுடைய கருத்து என்னிடம்.  வாழு வாழ விடு, இதைத்தான் நான் நம்புகிறேன்.

அதன் பிறகு, மற்றொரு தொடர் குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பத் தொடங்கினீர்கள். இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிறுத்தியது. ‘இந்தியா நல்ல நிலைக்கு வர முசுலீம்கள்தான் பெரும் தடையாக இருக்கிறார்கள்’ என்பதைப் போன்ற வாட்ஸப் செய்திகள் அவை.  இதை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் போனிலிருந்து விளையாட்டுக்காக யாராவது ரசிக்க முடியாத இத்தகைய செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா என்றுகூட உங்களிடம் கேட்டேன். நீங்கள் தீவிரமாக அப்படி ஏதும் இல்லை என மறுத்தீர்கள். இதையெல்லாம் நான்தான் அனுப்பினேன் என்றீர்கள்.

அதன்பிறகு, முசுலீம் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் அவர்கள் எப்படி இந்தியாவுக்கு வலிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கடுமையான மொழியில் விவரிக்கும் பெரிய செய்தி ஒன்றை அனுப்பினீர்கள்.  அந்தக் கட்டத்தில், நான் வெடித்து உங்களிடம் ஒன்றைக் கேட்டேன்.  “நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டிருந்த நூல்கள் என்னவாயின? ஆன்மீகத்தை, அமைதியை, நேர்மறை சிந்தனையை சொன்ன புத்தகங்கள் எங்கே?” என்றதற்கு, நீங்கள் சொன்னீர்கள், “ஆன்மீகம் வேறுபட்டது. நாம் எப்போதும் நடைமுறைச் சார்ந்து இருக்க வேண்டும்.” என்று.

இந்த பதிலால் கவலையுற்ற நான், தொலைபேசியைத் துண்டித்துவிட்டு பணிக்குச் சென்று விட்டேன். ஆனால், நீங்கள் சொன்ன பதில் என்னை தொந்திரவு செய்துகொண்டே இருந்தது.

அதன் பின், சில நாட்களுக்கு நீங்கள் தொடர்ந்து தினமும் வீடியோக்களையும் செய்திகளையும் அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். அவை அனைத்தும் பாஜகவும் மோடியுமே இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள் என்பதைக் கூறின.  அவர்களால் ‘முசுலீம் பிரச்சினை’யை தீர்க்க முடியும் எனவும் அந்தச் செய்திகள் வலியுறுத்தின.

அதாவது, உங்களுடைய கருத்தை என்னை ஏற்க வைக்கும் திட்டத்தோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தை அவை அளித்தன. நான் திரும்பத் திரும்ப இது தவறானது, சரியானதல்ல, மோசமானது, ஒருவரை மோசமாக சித்தரிப்பது சரியல்ல, அதையும் கடந்து நாம் அவர்களை சக மனிதர்களாக கருதுவதே இப்போதைய தேவை என்பதைச் சொன்னேன்.

ஆனால், அது வேலை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் இத்தகைய வெறுப்பு நிறைந்த, அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு நமது நட்பு கரைந்துபோகத் தொடங்கியது. நாம் இருவரும் சந்திக்க நேரும்போது, அமைதியாக நலம் விசாரித்துவிட்டு கடந்து சென்றோம். நம் இருவருக்குள் இருந்தவை மாறிவிட்டன. இதை நான் நல்லதாக உணரவில்லை.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

நம் இருவருடைய பொது நண்பர்களும் அரசியலை நட்புக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்றார்கள். அந்த ஆலோசனைக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும் நான் நட்பை மதிக்கிறவன் என்று. ஆனால், நல்ல நட்பு பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகக் கூடியது. இதை நீங்கள் ஏற்பீர்கள் இல்லையா? ஒரு சமூகத்தையே மோசமாக சித்தரிப்பதில் எந்தத் தவறும் இல்லையென நீங்கள் கருதினால், நாம் எப்படி நல்ல நண்பர்களாக இருக்க முடியும்? இது உண்மையான கேள்வி, வாய்சவால் அல்ல…

இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் நான் வந்து நிற்பேன். அனைத்தையும் கடந்து நாம் 15 ஆண்டுகளாக நட்பில் இருக்கிறோம். நான் சிறந்த முறையில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரே மாதிரியான எண்ணத்துடனும் திறந்த மனதுடனும் நாம் பழகியதைப் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை.  அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை.

இப்போது நாம், பெரிய அளவில் அரசியல் விவாதத்துக்குள் இறங்குவோம்.  நீங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கும் கட்சி மற்றும் தலைவர் குறித்து நான் ஏராளமான கேள்விகளை கேட்க நினைக்கிறேன்.  நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், ஐந்தாண்டுகளில் குறையாத விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், கங்கை நதியை தூய்மையாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்த பின்னர் மேலும் அது சீர்கெட்டுள்ளது குறித்தும் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை குறித்தும், பிரமாண்டமான வீணான சிலைகள் குறித்தும், சமூக ஊடகங்களில் அவதூறு செய்கிறவர்களை மோடி பின் தொடர்வது குறித்தும் நான் ஏராளமாக கேட்க விரும்புகிறேன்.

ஆனால், இப்போதைக்கு இந்தக் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு, மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.

1 கிறித்துவர்கள் மற்றும் முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக முன்நிறுத்தி, பாஜக – ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை திருத்தி இந்து ராஷ்டிரமாக மாற்ற விரும்புவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

2 சமூக ஊடகங்களிலும் தெருக்களிலும் முசுலீம்களை குறிவைத்து தாக்குவதும் அடித்துக் கொல்வதும் உங்களுக்கு சரியாகப் படுகிறதா?

3 மேலும், இதுபோன்ற ஒரு நாட்டில் உங்களுடைய குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற தெளிவான பதிலைக் கூற முடியும். இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய ஆணித்தரமான பதில் ‘இல்லை’ என்பதே. உங்களுடைய பதில் என்ன?

தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் உங்களிடமிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

ரோஹித் குமார்
(நேர்மறை உளவியல் பின்னணியில் பணியாற்றும் கல்வியாளர்)


தமிழாக்கம்: அனிதா
நன்றி
:the wire