டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி தற்போது ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. கூச்சலை உற்பத்தி செய்யும் தனது நிகழ்ச்சிகளின் மூலம் லிபரல்கள் மற்றும் அறிவுஜீவிகளின் மீது வன்மத்தைக் கக்கும் அவரது வெறிபிடித்த நடவடிக்கை இழிபுகழ் பெற்றது.

அவரது பிரச்சினைதான் என்ன? அவர் தான் நினைப்பதே உண்மைக்கான வேத நூலாக கருதுகிறார். இதை தனது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தனக்கு ஆதரவான அடிபொடிகளின் வாய்களின் மூலமே கேட்க விரும்புகிறார். தன்னைப் போலவே பிறரையும் பேச வைப்பதன் மூலம் மகிழ்ச்சி கொள்கிறார். அவரைப் போலவே அவரது ஆதரவு பெற்ற அல்லக்கைகளும் தங்களுக்கு மாறான சிந்தனைகள் கொண்டிருப்பவர்களை தேச விரோதிகள் என கூச்சலிடுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் தனது கருத்துக்கு மாறாக பேசியவர் ஒருவரைப் பார்த்து காட்டுக் கூச்சல் போட்டதில் அவரது பாலினத்தைக் குறித்து அவரே சந்தேகம் கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றார் அர்னாப். இத்தனைக்கும் அது மாற்றுப் பாலினம் மற்றும் மாற்றுப் பாலியல் தெரிவுகள் கொண்டவர்கள் (LGBTQ) குறித்த விவாதமல்ல – மாறாக வலதுசாரி அரசியலின் சகிப்புத்தன்மையின்மை குறித்த விவாதம்.

ஒரு அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதத்தின் பால் அர்னாபுக்கு இருக்கும் தீவிரமான வெறுப்பு அவர் அவ்வப்போது ஒரு “பத்திரிகையாளராக” வெளிப்படுத்தும் பிதற்றல்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. தனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.

இதைத் தான் முர்டோக்கியவாதம் என்கிறோம் – “ஊடகம் என்பது வெறுமனே ஜனநாயகத்தின் நான்காவது தூண் அல்ல. அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் இலாபமடைவதையும், இலாபத்தை அடைவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் குறிக்கிறது. இந்த நோக்கங்களுக்கு முன் தொழில் நேர்த்தியோ, தொழில் தர்மமோ ஒரு பொருட்டே அல்ல” என்பது முர்டோக்கியவாதத்தின் அடிப்படை.

தன்னோக்கு கொண்ட அவரது விவாத முறையில் சாமானியர்களின் கண்ணோட்டங்கள் ஜமுக்காளத்தின் கீழ் அழுத்தப்பட்டு விடுகின்றது. மட்டுமின்றி இந்தப் போக்கில் லிபரல் அறிவுஜீவிகளின் மேல் வன்மத்தைக் கக்குகின்றார். லிபரல்கள் அவர் மீது ஆத்திரம் கொள்வதில் எந்த வியப்புமில்லை என்பது ஒருபுறம் இருக்க, தனது விவாதங்களின் மூலம் எந்தளவுக்கு அறிவுப்பூர்வமாக அவர் ஓட்டாண்டியாக இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

வெறும் வார்த்தை விளையாட்டையும், மொழி ஆளுமையையும் கொண்டு அவர் வளர்ந்த விதம் குறித்து பலரும் இப்போது பேசத் துவங்கியுள்ளனர். எனினும், அதில் நாம் குறிப்பாக பார்க்க வேண்டியது அறிவுத்துறையினரை அவர் வேட்டையாடியதையும், இசுலாமிய நடிகர்கள் மற்றும் அறிவுஜீவிகளை அவர் வஞ்சத்தோடு அணுகியதையும் தான்.

மேலும், வெறுப்புப் பிரச்சாரங்களின் சாயல் கொண்ட அவரது வெறிபிடித்த கூச்சல்களும் அதீத தேசிய வெறியும் நாட்டின் எல்லையில் பதட்டத்தை உண்டாக்குகின்றன. இது போன்ற மூடத்தனங்கள் போர்களுக்கே இட்டுச் சென்றதை நாம் வரலாறு நெடுக பார்க்கலாம். ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ”பத்து அரசர்களின் போர்” (தசராஜப் போர்) இப்படித் தான் துவங்கியது. வசிஸ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த கருத்து மோதலே பின்னர் மக்களைக் கொல்லும் போராக மாறியது.

அர்னாபின் ஆத்திரமூட்டும் கூச்சல்களும் அதே போன்ற விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும். அவரது போர் வெறி உலகறிந்தது தான் என்றாலும், அதன் விளைவாக நமது சமூகத்தில் போர்வெறி கொண்ட கும்பல்களுக்கு உத்வேகமளிக்கிறது. ஒரு பத்திரிகையாளர் அமைதியையும் அன்பையுமே நாட வேண்டும். தனது தேசத்தவர்கள் மத்தியிலும் தேச எல்லைகளைக் கடந்தும் ஒரு பத்திரிகையாளர் மனிதாபிமானத்தையே பரப்ப வேண்டும். எனினும் அர்னாபின் செயல்பாடுகள் மிஷேல் ஃபூகோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றை நினைவூட்டுவதாகவே உள்ளது – ”நீண்ட காலம் நிலைத்திருக்கும் சித்தாந்தங்கள் அதிகாரத்தின் ஆதரவோடுதான் இயங்குகின்றன”

எனவேதான் பிரதமரைப் பேட்டி காணும் வாய்ப்பு அவருக்கே முதலில் கிடைத்தது. அந்த பேட்டியின் போது அவர் மோடியின் செல்லப் பிராணி போல் நடந்து கொண்டதையும் இந்த “தேசத்திற்கே” தானே அண்ணாவி என்பது போன்ற திமிரையும் காண முடியவில்லை என்பது தற்செயலானது அல்ல.


நன்றி : Counter Currents
சாக்கியன்