டைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ஸ்மிருதி இரானி. வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்மிருதி, தனது கல்வித் தகுதி குறித்து புதிய தகவலை அளித்திருக்கிறார்.

2004-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் ஸ்மிருதி, ஒவ்வொரு முறையும் தன்னுடைய கல்வி தகுதி குறித்து வெவ்வேறாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.  2004 தேர்தலின் போது டெல்லியில் போட்டியிட்ட ஸ்மிருதி, டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பி.ஏ (1996) படித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

2011 மற்றும் 2014 தேர்தலின்போது, பி.காம் (பகுதி-1) படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சற்றே தெளிவாக டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்த தூர கல்வி மூல பி.காம்(பகுதி-1 மூன்றாண்டுகாலம்.. முடிக்கவில்லை) படித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

2014-ம் ஆண்டு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற சில நாட்களில் ‘உங்களின் கல்வித் தகுதி என்ன?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி, ‘என்னை படிக்காதவர் என சிலர் அழைக்கிறார்கள். நான் ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறேன். ஏல் பல்கலை என்னுடைய தலைமை பண்புக்காக என்னை கொண்டாடியிருக்கிறது’ என அவிழ்த்துவிட்டார். 2013-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஏல் பல்கலைக்கழகம் சிறப்பு சான்றிதழ் வகுப்புகளை நடத்தியபோது, அதில் இவரும் ஒருவராக கலந்துகொண்டிருக்கிறார் என பிறகுதான் தெரிந்தது.

படிக்க:
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, பல காவி கல்வி கொள்கைகளை வகுத்தவர்.  இந்த கல்விக் கொள்கைகளை விமர்சித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை ‘தேசவிரோதி’கள் என விமர்சித்தவர். சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டவர். ஹைதரபாத் பல்கலையில் போராடியதற்காக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரோஹித் வெமூலாவின் தற்கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றவர். இன்னபிற இழிபுகழுக்கு சொந்தக்காரரான ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி என்ன என்பது குறித்த சர்ச்சை கடந்த ஐந்தாண்டு காலமும் வலம் வந்தது.

பத்தாயிரம் வருட ‘அறிவியல்-கலை’ பாரம்பரியத்தில்  வந்த தங்களுக்கு பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை என வெளிப்படையாக சொல்லாமல் பி.ஏ., பி.காம், ஏல்.. பல்கலைக்கழக பட்டம் என அடித்துவிட்டவர் ஸ்மிருதி இரானி.  அந்தக்கால ஏரோபிளேன் முதல் டெஸ்ட் டியூப் பேபி வரை அடித்துவிடுவதில் காவிக் கும்பலை மிஞ்ச ஆள் ஏது?


அனிதா
செய்தி:
ஸ்க்ரால்