தௌஹீத் அமைப்பு வளர்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் இடம்கொடுத்தார்கள் என்பது உண்மையா ?

 

தௌஹீத் (வஹாபிய) சாயல்கொண்ட அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்பு கூட, ஒற்றைக் கருத்தியலைப் பின்பற்றும் சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கவில்லை. மரபான இஸ்லாமியப் பாரம்பரியம் என்று ஒன்று தனியாக இல்லை.

சூபி முகாம்கள் (பல) இருந்தன. தப்லீக் ஜமாத் இருந்தது. ஜமாதே இஸ்லாமி இருந்தது. மிகப் பழமையான ஷியாப் பிரிவினரும் இருந்தனர்.

இத்தனை அமைப்புகளினுள்ளும் சமயச் சடங்கு, நடைமுறை மற்றும் அறிதல் முறைகளில் வேறுபாடுகளும் போட்டிகளும், முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன.

ஷியா அமைப்புக்களை மற்றைய அமைப்புக்கள் மறுப்பதலில் ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. எனினும், பிற அமைப்புகளுக்கிடையில் மூர்க்கமான சண்டைகளும் சச்சரவுகளும் வெளிப்பட்டதில்லை. அதிகமான விஷயங்களில் இயைந்து போகும் மனநிலையே இருந்தது. பங்காளிகளுக்கு இடையிலான போட்டி என்ற வகையில்தான் வேறுபாடுகள் இருந்தன.

ஆனால், தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

அந்த அமைப்பு குறித்து பொதுமக்கள் வெளியில் கடுமையான அதிருப்திகளையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே இருந்த எந்தப் பள்ளிகளினுள்ளும் தௌஹீத் (வஹாபிய) அமைப்புக்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. தௌஹீத் கருத்துக்களைப் பிரசாரம் செய்யவோ, அவர்களின் முறையில் மதச் சடங்குகளை தலைமையேற்று நடத்தவோ அனுமதிக்கவே இல்லை. இன்றுவரை அதுதான் நிலவரம். தௌஹீத்வாதிகளுக்கு என்று தனியான பள்ளிகள் இருக்கின்றன. அவை அவர்களே உருவாக்கியவை.

முஸ்லிம்களின் முக்கிய மதச் சடங்கான நோன்புகால தராவீஹ் தொழுகையில் – தௌஹீத் அமைப்பு பின்பற்றிய முறையை பிற அமைப்புக்கள் எவையும் பின்பற்றவில்லை. அதே நேரம் முஸ்லிம்களின் விசேட தினங்களான ”பெருநாள்” தினங்களைக் கூட தௌஹீத் அமைப்புக்கள் பின்பற்றும் நடைமுறையினுாடாக ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், பிறை பார்ப்பதில் ஏற்படும் சிக்கல்களும் சச்சரவுகளும் அனைத்து சமூகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த சம்பவங்கள்.

ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் கூட தௌஹீத் அமைப்பைத் தன்னுடன் இணைக்கவில்லை என்றே கருதுகிறேன். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்த இஸ்லாமிய அமைப்புகள் தௌஹீத் ஜமாதை எப்படிப் புறமொதுக்கிக் கையாண்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அல்லது வேறு எப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்?

படிக்க :
♦ நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !

இங்கு இன்னுமொரு விசயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை தம்வசம் வைத்திருக்கும் தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தௌஹீத் அமைப்புக்களை மக்களுக்குள் நுழைய விடாமலே பார்த்துக் கொண்டன.

தௌஹீத் அமைப்புக்களைப் பின்பற்றுபவர்கள் மொத்த முஸ்லிம்களில் மிகச் சொற்பமானவர்களே. தௌஹீத் (வஹாபிய) சாயல் கொண்ட இந்த அமைப்புக்களில் இருந்து மிகையான கடும்போக்கை கடைப்பிடிக்கும் அறிகுறிகள் வெளித் தெரிந்த போது, தௌஹீத் அமைப்பினர் ஸஹ்ரான் ஹாசிமை அதிலிருந்து விலக்கியும் விட்டனர்.

அதே நேரம் காத்தான் குடி மக்கள் அவரைக் கைது செய்யுமாறு பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்தனர். பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகக் தகவல் உண்டு. அது போல முஸ்லிம் கவுன்சில் கூட ஸஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக முறைப்பாடுகளை வெளிப்படையாக செய்திருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவரின் அறிக்கையின் மூலம் அறிகிறேன்.

இத்தனையும் நடந்திருக்கிறது. ஒரு சமூகம் தனக்குள் இயங்க வந்த ஓர் அமைப்பை இதைவிட வேறு எப்படி புறக்கணிக்க முடியும்? அவர்களை தடை செய்வதற்கும், சிறை பிடிப்பதற்கும் என்ன அதிகாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது, இருக்கிறது?

இத்தனை வழிமுறைகளிலும் தௌஹீத்வாதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கிறார்கள். புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை எப்படி மறுதலித்துக் கடந்து போக முடியும்?

மேலும், வரலாறு நெடுக இலங்கையில் நடந்த தனித்த அல்லது கூட்டுப் படுகொலைகளின் போது அவற்றை நிகழ்த்திய சமூகத்தில் உள்ளோர், அச்செயல்களை எதிர்த்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்த வரலாறுகள் உண்டு. ஆனால், ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த போது இலங்கை முஸ்லிம் சமூகம் அப்படி மௌனம் சாதிக்கவில்லை. உடனடியாகப் பல தளங்களிலும் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தது. அப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சொந்தச் சகோதரியே தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, தன்னால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேட்டி அளித்துள்ளார்.

இதன் பிறகும் இலங்கை முஸ்லிம் சமூகம் தௌஹீத் அமைப்பு வளர இடம்கொடுத்தது; தீவிரவாதத்தை/ பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்தது என எப்படி உங்களால் குற்றஞ்சாட்ட முடியும்?

இவைகள் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது ஒருவகைப் பார்வைக் கோணம். எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளப் பன்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தவே இந்தப் பதிவு.

இதைப் படித்துவிட்டு தௌஹீத் அமைப்பு அடிப்படைவாதிகள் இல்லையா? பெண்களை மோசமான வகையில் நடத்தவில்லையா என கிளம்பிக்கொண்டு யாரும் வரத் தேவையில்லை. அடிப்படைவாத அமைப்பு என நான் சொல்வதாக இருந்தால் இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் மீதும்தான் அதைப் பிரயோகிப்பேன்.

பெண்கள் விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பிற்போக்குத் தனமானவைதான் என்பேன். அவற்றை விவாதிப்பதற்கல்ல இந்தப் பதிவு என்பதை இதை எழுதத் தொடங்கும் போதே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : முகநூலில் – Abdul Sukkur