விஞர் தமிழேந்தி, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் எமது தோழமை அமைப்புகளுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் ஆதரவாக நின்றவர். எமது பல்வேறு நிகழ்ச்சிகளில், ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்றவர். அவரது மறைவுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு


தோழர்­ தமிழேந்தி இதயம் கொள்ளா நினைவலைகள்..

மிழ் உணர்வு, பகுத்தறிவு, கவிதை துடிப்பு, பெரியார் அம்பேத்கர் கருத்துணர்வு, கம்யூனிச ஆதரவு என மணம் பரப்பிய நறுமலர் இன்று (மே5) உதிர்ந்துவிட்டது.  ம.க.இ.க அருமைத் தோழர் சீனிவாசன் நினைவுநாளில் எழுந்த காலை தோழர் தமிழேந்தியின் இறப்பு செய்தியால் மேலும் கனத்துப் போனது.

அரக்கோணம் தமிழேந்தி என்றால் அனைத்து அரசியல் இயக்க முன்னணியாளர்களுக்கும், அணிகளுக்கும் நன்கு அறிமுகமானவர்.  அந்தத் தமிழேந்தி காலமாகிவிட்டார்.

சமூகத்திற்கு பயன்படுபவனாய் இருக்கவேண்டும் என்ற அவரது உணர்வு சாவிலும் பிரதிபலித்தது.  இறந்தவுடன் கண் கொடை, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை  என்று தமிழேந்தி “என்பும் உரியர் பிறர்க்கு” என எடுத்துக்காட்டாய் தொடர்கிறார்.. பெளதிக ரீதியாக அவரது உடல் தான் மரணித்தது.  அவரது சமூக உறவோ சார்ந்த அனைவரையும் உயிர்ப்பித்து உறவாடுகிறது.  சமூக உறவைப் பேணிக்கொள்வதில் அவர் ஒரு முன்மாதிரி.  எந்த இயக்கங்களின் கூட்டத்திலும், இயல்பாய் ஒன்று கலந்து ‘தோழர்’ எனும் பாசத்துடன் அவர் பரிமாறும் சமூகத்தின்பாலான உணர்வு சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சமூகப் பண்பு.  அவர் சார்ந்திருந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, அவர் செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகளுக்கு அவரது பங்களிப்பு சிறப்பானது.  முக்கியமாக பொது வெளியில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் துடிப்புடன் செயல்படும் அமைப்புகளின் நிகழ்வுகளில் அது பொதுக்கூட்டமானலும் சரி, போராட்டமானாலும் சரி ஒரு இளைஞராக துள்ளிக் கொண்டு வந்து நிற்கும் அவரது ஈடுபாடு தனித்துவமானது.

குறிப்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உடனான அவரது தோழமைவுணர்வு நெகிழ்வானது.  “தோழர் இந்த முறை நவம்பர் 7 கூட்டம் எங்கே?” “சிதம்பரம் தில்லைசமர் கூட்டத்திற்கு வந்துவிடுகிறேன்” “வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் எத்தன மணிக்கு?” என்று தானாகவே முன்வந்து விசாரிக்கும் அவரது அந்த ஆர்வமான குரல்.. இனி கேட்காமல் போவது, எமக்கு பேரிழப்பும், பெரும்துன்பமுமாகும்.   பொது வெளியின் சமூக இயக்கங்களை ஒரு உறவாக பேணிக்கொள்ளும் இந்த அரசியல் முன்முயற்சியாளர்கள் என்றென்றும் இதயத்திற்கு நெருக்கமாய் போற்றப்பட வேண்டியவர்கள்.  அதில் தமிழேந்தியின் தடம் நம் எல்லோர் இதயத்திலும் ஆழப்பதிந்து வழிகாட்டுகிறது.

மக்கள் கலை இலக்கிய கழகம், மற்றும் அதன் தோழர்கள், வரை ஒரு குடும்பமாக தோழர் தமிழேந்திக்குப் பரிச்சியம்.  தீராத கவிதை ஆர்வலரான அவர் சமூக மாற்றத்தின் புதிய நிலைமைகளை அரசியலாக விவாதித்து, விவரித்துக் கூறும் போது கூர்ந்து கவனிப்பார்.  சரி எனப் பட்டதை மனம் திறந்து பாராட்டி, உங்க அமைப்பு, தோழர்கள் உழைப்பைப்  பார்த்து சமூகம் மாறும் எனும்   மிகப்பெரிய நம்பிக்கை  கொள்கிறேன் என்று வரவேற்று மகிழ்வார்.  முக நக நட்பாக மட்டுமல்ல, மெல்ல மெல்ல பேசி விவாதித்த கருத்துக்களை முக்கியத்துவப் படுத்தி தனியார்மயம், தாராளமயம், கோக் – பெப்சி எதிர்ப்பு, தில்லைக்கோயில் பார்ப்பன எதிர்ப்பு, என ம.க.இ.க.வின் பல அரசியல் இயக்க நிகழ்வுகளை தனது கவிதைகளில் கருப்பொருளாக விரிவடையச் செய்தார். நேபாளம்  மக்கள் புரட்சிக்கு ஆதரவான  சென்னைப் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமாக அவர் நிகழ்த்திய உரை இளைஞர்களை ஈர்த்தது.

இப்படி நிகழ்வுகள் பலவாயினும், சமூக மாற்றத்திற்காக, உழைக்கும் மக்களுக்காக சிந்திக்கும் ஒருவன் எந்தக் கருத்தை தேர்வு செய்வது, யார் தடுத்தாலும் புரட்சிகர கருத்துக்களை ஆதரிப்பது, அதற்கேற்ற தோழமை உணர்வை வளர்த்துக்கொள்வது என்ற அரசியல் நேர்மையும், அரசியல் துணிச்சலும் தோழரின் தனிப்பெரும் அடையாளங்கள்.  வளரும் தலைமுறைக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் விலைமதிப்பில்லாத கண்ணோட்டம் அது.

இறுதி அஞ்சலி செலுத்தும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்கள்…

ம.க.இ.க. வின் பாடல் குறுந்தகடுகளை, புதிய கலாச்சாரத்தின் கட்டுரை, கவிதைகளையும் அவர் ஒரு பிரச்சாரகனாய் பிரபலப்படுத்தியதும் மகிழ்வோடு, பரவலாக்கியதும்  ஒரு அமைப்புக்கான அங்கீகாரம் என்பது மட்டுமல்ல – ஒரு தலைமுறைக்கு வழிக்காட்டும் அரசியல் கடமையும் உணர்ந்து கொள்ளும் நேர்த்தியும் என்பதாய் புரிந்துகொள்கிறோம். புரட்சிகர அமைப்பின்பாலான இந்தப் பொறுப்புணர்வு தமிழேந்தியின் தனிச்சிறப்பான – பின்பற்றப்பட வேண்டிய முன்மாதியான ஒரு சமூகப் பண்பு.  அவர் எழுதிய எல்லா கவிதைகளிலும் சிறந்த கவிதை, தமிழேந்தியின் சமூகத்தின்பாலான வாஞ்சை குறையாத  அவரது வாழ்க்கை.  அந்த கவித்துவமான தருணங்களில் அவர் எங்களது கரம் பற்றி தோழமை உணர்வுகலந்தது பாட்டாளி வர்க்க சமூகப் பெருமிதங்களில் ஒன்று.  சிறந்த மனிதர்களை இழக்கும் துயரம் ஒட்டுமொத்த சமூக பாரத்தையே நம்மீது சரித்து விடுகிறது!

தமிழேந்தி உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவோம்!
மகிழ்ச்சிகுரிய எமது சமூகப் பங்களிப்பின் வழி; தமிழேந்தி!
உங்கள் மரணத்தை வெல்வோம்!

பைந்தமிழ் மொழியேந்தி
பனிச்சொல் வெடிக்கும் பகுத்தறிவேந்தி
ஆதிக்கம் செய்யத்துடிக்கும்
பார்ப்பனிய கொடுக்குக்கு எதிராய் அனலேந்தி
யார்க்கும் ஈர்க்கும் தோழமை உறவேந்தி
வியர்க்கும் சொற்களை விரும்பி விரும்பி
வேறெதைவிடவும் பாட்டாளி வர்க்க உணர்வேந்தி
தூர்க்கும் நோய்க் கொடுமை பல நீந்தி
துயரிலும் சமர் புரிந்த.. எங்கள் தமிழேந்தி!
தொடர்வோம்… சமூக உணர்வேந்தி!

துரை. சண்முகம்