பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஓதுக்கீடு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஐஐடி மாணவர் அனுமதியைப் பற்றிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இத்தரவுகளை வாங்கி வெளியிட்ட நண்பர் எத்திராஜன் முரளிதரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் இடப்பங்கீட்டுக் கொள்கையை மீறி ஐஐடி சென்னை தில்லுமுல்லுகள் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தும் வழக்குகள் தொடுத்தும் வரும் இவரைப் பாராட்ட வேண்டும்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முரளிதரன், நான் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபொழுதுதான் அங்கு ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அப்பொழுது ஐஐடி சென்னையின் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார். சென்னையைச் சேர்ந்த ஓரளவுக்கு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். ஐஐடியில் ஆய்வு மாணவர்களுக்கான மாத ஊதியத் தொகை இவர்களைப் போன்ற பல சென்னை மாணவர்களுக்கு கைச் செலவுக்கான தொகை. நல்ல வண்டி, வெளியே நல்ல உணவகங்களில் உணவு, திரைப்படங்கள், விளையாட்டுத் துறைக்கான செலவு என செலவழிப்பார்கள். ஆனால் கிராமங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற எங்களைப் போன்ற நிறைய சிற்றூர்/சிறுநகர மாணவர்களுக்கு அவ்வூதியத்தில் ஊரிலுள்ள எங்கள் குடும்பத்தையும் ஆதரித்து எங்களுடைய செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் எங்களுக்குள்ளேயே கூட இரண்டு பிரிவாகத்தான் இருந்திருக்கிறோம். விடுதிகளில் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றாகக் கூடி இருந்தாலும் தனித்தனி நண்பர்கள் குழுவாகவே இருந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் ஐஐடிக்குள் பெரியார், கலைஞர், தமிழ், ஈழம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த என்னையெல்லாம் இவர்களெல்லாம் ஏளனமாகக் கிண்டலடிப்பார்கள். மலையாள மாணவர்கள் என்னை நமட்டுத்தனமாகக் கிண்டலடிக்கும் ”பாண்டி” என்ற பெயரை இவர்களும் அவ்வப்பொழுது பயன்படுத்துவதுண்டு.

மண்டல் கமிசன் பரிந்துரைகளுக்கெதிரான எங்கள் விடுதி மாணவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நானும், இப்னு சாத் என்ற இன்னொரு கேரள மாணவரும்தான் வெளிப்படையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினோம். ஐஐடி ஊழியர்களைத் துணைக்கொண்டு போட்டிக் கையெழுத்து வேட்டை நடத்த ஆரம்பித்த பின்னர் வார்டனால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டோம். நாங்கள் இருவரும் கைவிடாதபடியால், பின்னர் இரண்டு தரப்பு நடவடிக்கைகளும் வார்டனால் நிறுத்தப்பட்டன.

அப்பொழுதெல்லாம் முரளிதரனோ, இடப்பங்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம் படித்த நிறைய மாணவர்களோ எங்களிருவருக்கும் துணையாக வந்ததில்லை. ஒருசில அறிவுஜீவிகள் எங்களிருவரையும் விமர்சனம் செய்து, ஐஐடியின் தரத்தைக் குறைக்கக் கூடாதென்று மண்டல் கமிசன் அமலாக்கத்தை எதிர்த்துக் கையொப்பமிட்டனர். அவர்களெல்லாம் பார்ப்பன ஆசிரியர் / மாணவர்களிடம் தம் நட்பை இழக்க விரும்பாமல் மவுனம் காத்தனர்.

படிக்க :
♦ சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
♦ பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!

எங்களிருவருக்கும் இரண்டு சாதகமான நிலைகளும் இருந்தன எனலாம். 1. நாங்களிருவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் பலனடந்தவர்களல்லர் என்பதனால் எங்களுக்கெதிரான முத்திரை குத்தலைப் பற்றிய தயக்கமில்லை. 2. அண்மையில் மறைந்த என்னுடைய ஆராய்ச்சி வழிகாட்டி பேராசிரியர் பி.டி.மனோகரன் – சட்டத்துக்குட்பட்டு என்னுடைய செயல்பாடுகளுக்கான உரிமைகளை எப்பொழுதும் மதித்தவர். (முன்னரே ஒருமுறை என்னை ஐஐடியை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எச்சரிக்கப் பட்டபொழுது நிர்வாகம் சட்டப்படி அதைச் செய்ய இயலாது என்று உறுதி அளித்தார்.) இப்பொழுதும் அவர் அரசின் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் செயல்பட முடியுமென்றால் அதைவிட எங்களிருவருக்கான உரிமை இன்னும் அதிகமென்றார். என்னுடைய ஆய்வறிக்கை தாமதமாகியதே தவிர வேறெந்தச் சிக்கலும் எனக்கு ஏற்படவில்லை. முடித்தகையோடு அமெரிக்கா வந்து விட்டேன்.

ஆனால், முரளிதரன் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டியிடம் வேறொரு தனிப்பட்ட பிரச்னையில் முரண்பட்டு மோதியதால் ஐஐடி நிர்வாகம் அவரைக் கடைசிநேரத்தில் பழிவாங்கியது. தேர்வானபிறகும் அவருடைய பட்டச் சான்றிதழை அளிக்காமல் பட்டமளிப்பு விழாவில் வெற்றுக் காகிதத்தை அளித்து ஏமாற்றியது. அதன்பின்னர்தான் ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அமெரிக்கா வந்தபின்னரும் கூட அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார். அதன்பின்னர் அங்கேயே இருந்து கடந்த 30 ஆண்டுகளாக ஐஐடியின் பல்வேறு பிரச்னைகளைச் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார் என்று அறிந்தேன்.

அவருடன் எனக்குத் தொடர்பில்லை என்றாலும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முகநூலில் : சொ.சங்கரபாண்டியன்

5 மறுமொழிகள்

  1. தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கூட தமிழ் பின்னணி கொண்ட பிராமணர் அல்லாத மாணவ மாணவிகள் வெகு சிலர் தான். அவர்களுடைய எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மாநிலத்தில் இருக்கக் கூடிய மோசமான பள்ளிக்கல்வி சூழ்நிலை தான் இதற்கு காரணம். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள சரியான கோச்சிங் நிறுவனங்கள் இல்லாதது இன்னொரு காரணம். தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களை வேறொரு கிரகத்தில் இருக்கும் நிறுவனங்களாக கருதும் நம்முடைய அரசியல்வாதிகளின் மனப்பான்மை மூன்றாவது காரணம். தமிழகத்தின் அரசியல் தனித்துவம் பெற்றது என்பதால் இந்த மத்திய அரசு நிறுவனங்களில் சேரும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழ் பின்னணி மாணவர்கள் மற்ற மாநில மற்றும் உயர்சாதி மாணவர்களால் பகடிக்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பழிவாங்கலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முதலில் இந்த நிறுவனங்களில் திராவிட கட்சிகள் தங்களுடைய மாணவர் அமைப்புகளை வலுவாக ஆரம்பிக்கவேண்டும். இந்த மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கம்யூனிச மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் திராவிட பின்னணி கொண்ட அமைப்புகள் அறவே இல்லை. இதனால் இந்தியாவின் மற்ற பகுதி மக்களுக்கு திராவிட அரசியல் கோட்பாடுகள் குறித்து சரியாக தெரிவதில்லை. தமிழ்நாட்டில் ஏதோ இரண்டு மாநில கட்சிகள் அரசியல் செய்வதாக மட்டும் புரிந்து கொள்கிறார்கள். அதுபோல் சமச்சீர் கல்வி முதலான குப்பைகளை முதலில் தமிழ்நாடு தலை முழுக வேண்டும்.

  2. பெரியசாமி,
    தமிழகக் கல்வித்திட்டம் தரமில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், சமமான கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கவில்லையா? ஏழ்மை, ஆங்கில மோகம், தனியார் பள்ளிகள், இந்தித்திணிப்பு எனப் பலப் பிரச்சினைகள் இந்த நாட்டிற்கென உள்ளன. கட்டுரை, சமூக சாதி அமைப்பின் தாக்கத்தை பற்றி பேசுகின்றது. அனைவருக்கும் சமமான கல்வி என்பதும் தாய்மொழிக் கல்வி என்பதும் நமது கனவு.

  3. சமச்சீர் என பெயர் வைத்து விட்டால் அது சமமான கல்வி ஆகிவிடாது. சிபிஎஸ்சிக்கு சமமான பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் தேர்வு முறைகளும் மதிப்பீட்டு முறைகளும் உருவாக்கப்பட்டால் தான் அது சமச்சீர் கல்வி. இந்தியாவில் இருக்கும் எந்த மாநிலமும் தன்னுடைய மாநில பள்ளி பாடத் திட்டத்தை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் அமைக்க வேண்டும் என விதி முறைகளும் சட்டங்களும் வலியுறுத்துகின்றன.

    • கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. சி பி எஸ் சி பாடத்திட்டம்தான் அளவுகோலா? ஏன் ஃபின்லாந்து அல்லது வேறொரு சிறந்த கல்விமுறையைப் புகுத்தமுலவேண்டியதுதானே!
      சமச்சீர் கல்வியினுடைய தரத்தை உயர்த்துவதென்பதை வேறுதளத்திலிருந்து விவாதிக்கவேண்டும்.

      தொழிற்கல்வி மற்றும் உயர்கல்விக்கான தேர்வுமுறைகளை, மத்திய மற்றும் மாநில நிர்வாகங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் அவரவர்(மத்திய/மாநில) தேவைக்கேற்ப தெரிவு செய்ய வேண்டியதுதான் முறை. அதைவிடுத்து மாநிலங்களின் சொந்த திட்டங்களின்மூலம், மாநிலங்களின் சொந்த நிதிப்பங்களிப்பில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களில், மத்திய அரசு மூக்கை நுழைப்பது சரியா? அதுவும், மாநில மருத்துவக்கல்லூரிகளுக்கான தேர்வு முறையில், நீட் என்னும் மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முறை சரிதானா?

  4. “கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. சி பி எஸ் சி பாடத்திட்டம்தான் அளவுகோலா?”

    ஆமாம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் இந்தியாவில் மாநில அரசுகளின் பள்ளி பாடத் திட்டங்களுக்கு அளவுகோல். சட்டங்களும் விதிமுறைகளும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. பொதுப் பட்டியல் என்று வந்துவிட்டாலே அதில் மத்திய அரசின் கை தான் ஓங்கி இருக்கும். கல்வித்துறை மட்டும் விதிவிலக்கு அல்ல.

    “ஏன் ஃபின்லாந்து அல்லது வேறொரு சிறந்த கல்விமுறையைப் புகுத்தமுலவேண்டியதுதானே!”

    பின்லாந்து கல்வி முறையை இங்கு உட்புகுத்த வேண்டும் என்றாலும் அதற்கும் மத்திய அரசின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் அனுமதியை மறுக்க மாட்டார்கள். ஆனால் கூரைமேல் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் மற்றவை பற்றி யோசிக்கலாமா? தமிழக கல்வித்துறை முழுமைத் தன்மை வாய்ந்த பாடப்புத்தகங்களை கூட எந்தக் காலத்திலும் உருவாக்கியது கிடையாது. இத்தனை காலம் கழித்து இப்போதுதான் அதற்கே முயற்சி எடுத்திருக்கிறார்கள்

    “தொழிற்கல்வி மற்றும் உயர்கல்விக்கான தேர்வுமுறைகளை, மத்திய மற்றும் மாநில நிர்வாகங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் அவரவர்(மத்திய/மாநில) தேவைக்கேற்ப தெரிவு செய்ய வேண்டியதுதான் முறை.”

    இது நியாயமான சரியான வாதம் தான். ஆனால் பிளஸ் 2 மார்க் அடிப்படையில் சேர்க்கை நடத்துவது எந்த வகையில் சரி. நியாயம். பிளஸ் டூ தேர்வு என்பது தகுதிகாண் தேர்வு. அதில் ஒரே மாதிரியான பதிலை எழுதி இருக்கும் 2 மாணவர்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் திருத்துபவரின் மனப்பாங்கை பொறுத்து கொஞ்சமாவது வேறுபடும். மேலும் கேள்வித்தாளில் இருக்கும் கேள்விகள் பெரும்பாலும் ஒரு ஆண்டில் மட்டும் படித்ததை சோதிப்பதாகவும் நேரடியான கேள்விகளாகவும் மட்டும் இருக்கும். மாணவருக்கு பாடத்தில் இருக்கும் நுண்ணறிவை சோதிப்பதாக இருக்காது. மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகளை பயில நுண்ணறிவு தேவை. சேருவதற்கு கடும்போட்டியும் இருக்கிறது. ஆகையால் மாநில அரசே போட்டித் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்துவது தான் சரியானது. எம்ஜிஆர் ஆட்சியில் நல்ல முறையில் இவை நடந்து வந்தன. ஏனெனில் எம்ஜிஆர் ஒரு கைநாட்டு பேர்வழி. அவருக்கு கல்வித்துறை பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் கல்வி சார்ந்த வல்லுனர்கள் கையில் இவற்றை ஒப்படைத்துவிட்டார். அவர்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தனர். ஆனால் கருணாநிதி ஆட்சியில் அரசியல் நோக்கத்துக்காகவே பல மோசமான காரியங்கள் நடந்தன. அதன் பின் விளைவுகள் பல ஆண்டுகள் கழித்து மத்திய அரசின் மூலமாக தமிழக மாணவர்களை தாக்கியிருக்கிறது.

    “அதைவிடுத்து மாநிலங்களின் சொந்த திட்டங்களின்மூலம், மாநிலங்களின் சொந்த நிதிப்பங்களிப்பில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களில், மத்திய அரசு மூக்கை நுழைப்பது சரியா? அதுவும், மாநில மருத்துவக்கல்லூரிகளுக்கான தேர்வு முறையில், நீட் என்னும் மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முறை சரிதானா?”

    நீட் என்பது அநீதியானது தான் ஆனால் ஏன் மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன? மற்ற மாநிலங்கள் ஏன் நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலையை ஆதரிக்கவில்லை? ஏனெனில் கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. அதுவும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி முற்றிலும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரக்கூடியவை. அதனால் தான் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டின் நிலையை ஆதரிக்கவும் இல்லை. தமிழ்நாடு அரசு தனது மக்களுக்கு சாராயத்தை விற்று கிடைக்கும் வருமானத்தில் இத்தனை மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகிறது. இது மெச்சத் தகுந்தது. ஆனால் வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்று சொல்வது நம்முடைய பார்வை. இட ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை அளிக்காமல் தகுதிக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நடத்தப்படுவதால் தான் ஐஐடிக்கள் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்கின்றன என்பது அவர்களின் கூற்று. இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழகத்தின் கல்வித் துறையை குறிப்பாக உயர் கல்வியை தங்களின் பிடிக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல் சமச்சீர் கல்வி மாதிரியான குப்பைகளை கொண்டு வந்து அப்போது இருந்த கருணாநிதி அரசாங்கம் சீரழிவை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

Leave a Reply to இளங்கோவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க