பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஓதுக்கீடு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஐஐடி மாணவர் அனுமதியைப் பற்றிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இத்தரவுகளை வாங்கி வெளியிட்ட நண்பர் எத்திராஜன் முரளிதரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் இடப்பங்கீட்டுக் கொள்கையை மீறி ஐஐடி சென்னை தில்லுமுல்லுகள் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தும் வழக்குகள் தொடுத்தும் வரும் இவரைப் பாராட்ட வேண்டும்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முரளிதரன், நான் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபொழுதுதான் அங்கு ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அப்பொழுது ஐஐடி சென்னையின் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார். சென்னையைச் சேர்ந்த ஓரளவுக்கு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். ஐஐடியில் ஆய்வு மாணவர்களுக்கான மாத ஊதியத் தொகை இவர்களைப் போன்ற பல சென்னை மாணவர்களுக்கு கைச் செலவுக்கான தொகை. நல்ல வண்டி, வெளியே நல்ல உணவகங்களில் உணவு, திரைப்படங்கள், விளையாட்டுத் துறைக்கான செலவு என செலவழிப்பார்கள். ஆனால் கிராமங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற எங்களைப் போன்ற நிறைய சிற்றூர்/சிறுநகர மாணவர்களுக்கு அவ்வூதியத்தில் ஊரிலுள்ள எங்கள் குடும்பத்தையும் ஆதரித்து எங்களுடைய செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் எங்களுக்குள்ளேயே கூட இரண்டு பிரிவாகத்தான் இருந்திருக்கிறோம். விடுதிகளில் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றாகக் கூடி இருந்தாலும் தனித்தனி நண்பர்கள் குழுவாகவே இருந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் ஐஐடிக்குள் பெரியார், கலைஞர், தமிழ், ஈழம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த என்னையெல்லாம் இவர்களெல்லாம் ஏளனமாகக் கிண்டலடிப்பார்கள். மலையாள மாணவர்கள் என்னை நமட்டுத்தனமாகக் கிண்டலடிக்கும் ”பாண்டி” என்ற பெயரை இவர்களும் அவ்வப்பொழுது பயன்படுத்துவதுண்டு.

மண்டல் கமிசன் பரிந்துரைகளுக்கெதிரான எங்கள் விடுதி மாணவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நானும், இப்னு சாத் என்ற இன்னொரு கேரள மாணவரும்தான் வெளிப்படையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினோம். ஐஐடி ஊழியர்களைத் துணைக்கொண்டு போட்டிக் கையெழுத்து வேட்டை நடத்த ஆரம்பித்த பின்னர் வார்டனால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டோம். நாங்கள் இருவரும் கைவிடாதபடியால், பின்னர் இரண்டு தரப்பு நடவடிக்கைகளும் வார்டனால் நிறுத்தப்பட்டன.

அப்பொழுதெல்லாம் முரளிதரனோ, இடப்பங்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம் படித்த நிறைய மாணவர்களோ எங்களிருவருக்கும் துணையாக வந்ததில்லை. ஒருசில அறிவுஜீவிகள் எங்களிருவரையும் விமர்சனம் செய்து, ஐஐடியின் தரத்தைக் குறைக்கக் கூடாதென்று மண்டல் கமிசன் அமலாக்கத்தை எதிர்த்துக் கையொப்பமிட்டனர். அவர்களெல்லாம் பார்ப்பன ஆசிரியர் / மாணவர்களிடம் தம் நட்பை இழக்க விரும்பாமல் மவுனம் காத்தனர்.

படிக்க :
♦ சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
♦ பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!

எங்களிருவருக்கும் இரண்டு சாதகமான நிலைகளும் இருந்தன எனலாம். 1. நாங்களிருவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் பலனடந்தவர்களல்லர் என்பதனால் எங்களுக்கெதிரான முத்திரை குத்தலைப் பற்றிய தயக்கமில்லை. 2. அண்மையில் மறைந்த என்னுடைய ஆராய்ச்சி வழிகாட்டி பேராசிரியர் பி.டி.மனோகரன் – சட்டத்துக்குட்பட்டு என்னுடைய செயல்பாடுகளுக்கான உரிமைகளை எப்பொழுதும் மதித்தவர். (முன்னரே ஒருமுறை என்னை ஐஐடியை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எச்சரிக்கப் பட்டபொழுது நிர்வாகம் சட்டப்படி அதைச் செய்ய இயலாது என்று உறுதி அளித்தார்.) இப்பொழுதும் அவர் அரசின் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் செயல்பட முடியுமென்றால் அதைவிட எங்களிருவருக்கான உரிமை இன்னும் அதிகமென்றார். என்னுடைய ஆய்வறிக்கை தாமதமாகியதே தவிர வேறெந்தச் சிக்கலும் எனக்கு ஏற்படவில்லை. முடித்தகையோடு அமெரிக்கா வந்து விட்டேன்.

ஆனால், முரளிதரன் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டியிடம் வேறொரு தனிப்பட்ட பிரச்னையில் முரண்பட்டு மோதியதால் ஐஐடி நிர்வாகம் அவரைக் கடைசிநேரத்தில் பழிவாங்கியது. தேர்வானபிறகும் அவருடைய பட்டச் சான்றிதழை அளிக்காமல் பட்டமளிப்பு விழாவில் வெற்றுக் காகிதத்தை அளித்து ஏமாற்றியது. அதன்பின்னர்தான் ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அமெரிக்கா வந்தபின்னரும் கூட அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார். அதன்பின்னர் அங்கேயே இருந்து கடந்த 30 ஆண்டுகளாக ஐஐடியின் பல்வேறு பிரச்னைகளைச் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார் என்று அறிந்தேன்.

அவருடன் எனக்குத் தொடர்பில்லை என்றாலும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முகநூலில் : சொ.சங்கரபாண்டியன்