மிழகத்தில் விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு மோடி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் அக்டோபர் 2018-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனடிப்படையில் வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்த தமிழக விவசாயிகள் அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர்.

படிக்க:
♦ மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
♦ நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் மரக்காணத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால், மாவட்ட பகுதிகளிலும் ஒதுக்கப்பட்டு, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

இத்திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பூமிக்கடியில் கடல் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உப்பு நிலங்களாக மாறிவிடும். கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே தண்ணீர் உப்பாக மாறிவரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் மேலும் விவசாய நிலங்கள் நிச்சயம் பாழ்பட்டு போகும் என்பது உறுதி.

விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இக்கொடிய திட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மோடி அரசை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து போராடினர்.

ஆனால், இந்த அழிவுத் திட்டங்களின் கூட்டுக் களவானியாக விளங்கும், அடிமை அதிமுக எடுபிடி அரசு, தொடர்ந்து தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்தும், போராடுபவர்களை போலிசை ஏவி கைது செய்து ஒடுக்கி இந்த அழிவுத் திட்டங்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது.

ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் முப்போகம் விளைந்த பூமியெங்கும் வறட்சியாகிவிட்டது.  குடிநீர்ப் பஞ்சத்தால் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதி மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இப்படியொரு அபத்தமான, ஆபத்தான திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது மோடி அரசு.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிலவளம் மற்றும் நீர்வளம் பாதிக்கும் மரபு சாரா திட்டங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நிரந்தர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழக்கம்போல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு மவுனம் சாதித்து வருகின்றனர்.

நாட்டையே பல கூறுகளாக, சிதைத்து பன்னாட்டு நிறுவங்களின் வேட்டைக்காடாக மாற்றத் துடித்து வருகிறார் மோடி. இந்த அரசு தனக்கென்று வரையறுத்துக் கொண்ட கொள்கைகள் எதையும் கடைபிடிக்க முடியாமல் தோற்றுப்போய் விட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடியாளாக இன்றைய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது !

எழில்