2017-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அதை நரேந்திர மோடியின் வெற்றியாகக் கொண்டாடிய இரண்டு வாரணாசி முசுலீம் பெண்கள் குறித்த செய்தி ஊடகங்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. இந்த செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் அளித்து பரவலாக்கியது. சில புர்கா அணிந்த பெண்கள் மோடியை புகழ்ந்து பாடுவது, முசுலீம்கள்கூட தங்களுடைய சிறந்த தலைவரைக் கொண்டாடுவதாக இந்தப் படங்களைப் பார்த்த பலர் கருதினர்.

சில மாதங்கள் கழித்து, மே-2017-ம் ஆண்டு சில முசுலீம் பெண்கள் வாரணாசியில் உள்ள சங்கட் மோச்சன் தர்பாரில் முத்தலாக் என்னும் மோசமான பழக்கத்தை விரட்ட, 100 முறை அனுமன் சாலீசாவை சொன்னதாக அதே ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

“அனுமன் கோயிலில் முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது அமர் உஜாலா பத்திரிகை. ‘முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்’ என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தீபாவளியின் போது, வாரணாசியில் முசுலீம் பெண்கள் ராமருக்கு ஆரத்தி எடுப்பதாக தனது யூ-ட்யூப் சேனலில் செய்தி வெளியிட்டிருந்தது டைம்ஸ் ஆஃப் இந்தியா.  ஆறு மாதங்கள் கழித்து, ஏ.என். ஐ. முசுலீம் பெண்கள் மோடிக்கு ராக்கி அனுப்பத் தயாராகி வருவதாக செய்தி அனுப்பியது.  மோடிதான் தங்களை முத்தலாக்கிலிருந்து காப்பாற்றிய உண்மையான சகோதரன் என அவர்கள் சொன்னதாகவும் அந்த செய்தி கூறியது.

மிக சமீபத்தில் வாரணாசியில் மோடியின் வெற்றிக்கு முசுலீம் பெண்கள் உழைப்பதாகவும் செய்தி வெளியானது. பெரும்பாலான இந்த செய்திகள் ஏ.என்.ஐ. நிறுவனத்திடமிருந்து ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டவை.  இந்த முசுலீம் பெண்கள் குறித்த மேலதிக விவரங்கள் அந்த செய்திகளில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்காது. இந்தச் செய்திகளில் நான்கைந்து முசுலீம் பெண்கள் மட்டுமே இருப்பர். அனைத்து செய்திகளிலும் இருப்பதுவும் இதே பெண்கள்தான். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற முசுலீம் மகிளா பவுண்டேஷன் மற்றும் விஷால் பாரத் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் என்பது குறித்து இந்தச் செய்திகளில் எங்கேயும் சொல்லப்பட்டிருக்காது.

ஒட்டுமொத்த முசுலீம் பெண்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்கிற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க உதவிய இந்த நான்கைந்து முசுலீம் பெண்கள் யார்?

வாரணாசியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது விஷால் பாரத் சங்கம்.  இந்த சங்கத்தின் அலுவலகத்தின் பெயர் சுபாஷ் பவன். இரண்டு அடுக்கு கட்டத்தின் நுழைவாயிலில் சுபாஷ் சந்திர போஸின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகே பாஜக இலட்சிணையும், ஆர்.எஸ்.எஸ்-இன் முசுலீம் பிரிவான முசுலீம் ராஷ்டிரிய மஞ்ச்-ன் வழிகாட்டுநரான இந்திரேஷ் குமாரின் பெரிய படமும் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்தன.

விஷால் பாரத் சங்கத்தின் தலைவர் ராஜீவ் ஸ்ரீவத்சவா, கைவிடப்பட்ட தலித், முசுலீம் குழந்தைகள் உள்பட பலரை தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறுகிறார்.  முசுலீம் குழந்தைகள் சுதந்திரமாக அவரவர் இறைவனை வழிபட அனுமதிக்கப்படுவதாக கூறுகிறார் இவர். இங்கே முசுலீம்கள்கூட சைவம் உண்பவர்களாக உள்ளதாகவும் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் என்றும் கூறுகிறார் இங்கே உள்ள ஒரு சிறுமி.

முசுலீம் குழந்தைகளுக்கு அரபுப் பெயர் வைக்கப்படுவதை தவிர்த்து அனைவருக்கும் ‘இந்திய’ பெயரை, உதாரணத்துக்கு சூரஜ் அன்சாரி, ப்ரிதிவி அன்சாரி போன்ற பெயர்களை வைத்துள்ளதாக சொல்கிறார் ஸ்ரீவத்சவா. முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் உடன் இந்த அமைப்புக்கு தொடர்புள்ளதை மறுக்கிற இவர், அந்த அமைப்பின் தலைவர் படத்தை மரியாதை நிமித்தமாக வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அதன்பின், இரண்டு முசுலீம் பெண்களை அறிமுகப்படுத்தி, “முசுலீம்கள்கூட ராமர் கோயில் கட்டப்படுவதை புரிந்துகொண்டு அதற்காக வேண்டிக் கொள்கிறார்கள்” என்கிறார்.  நஜ்மா, நஸ்னீன் ஆகிய இந்த இரண்டு பெண்கள்தான் ஏ.என்.ஐ. செய்திகளில் முசுலீம் பெண்களின் பிரதிநிதிகளாக வலம் வந்தவர்கள்.  புர்கா அணிந்த பின்பே படமெடுக்க அனுமதித்த நஜ்மா, புர்கா அணிந்தால்தான் தன்னை சரியான முசுலீம் பெண் என அடையாளம் காண்பார்கள் என்கிறார். இன்னொரு பெண் நஸ்னீன் புர்கா அணிவதில்லையாம்.

இரண்டு பெண்கள் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். வறுமை காரணமாக படிக்க முடியாமல் தவித்த தன்னை ஸ்ரீவத்சவா, இந்த இல்லத்துக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறார்.

தன் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் ஸ்ரீவத்சவா குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, நஜ்மாவுக்கு அவருடன் தொடர்பு உண்டானதாகவும், அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். தனது பெற்றோர் அடுத்தடுத்து இறந்துவிட ஆதரவு இல்லாத நஜ்மாவும் அவருடைய சகோதரரும் ஸ்ரீவத்சவா நடத்தும் இல்லத்துக்கு வந்திருக்கிறார்கள்.

தற்போது பி.எச்.டி. படிக்கும் நஜ்மா, மோடி குறித்து ‘ஆய்வு’ செய்துகொண்டிருப்பதாக சொல்கிறார்.  இவரிடம் மோடியின் வெற்றியை எத்தனை பெண்கள் சேர்ந்து கொண்டாடினீர்கள் எனக் கேட்டபோது, சற்றே நிதானித்த இவர், ‘இந்த முறை நிறைய பெண்கள் கொண்டாடுவார்கள்’ என்கிறார்.

முசுலீம்களின் இறை தூதராக மோடியை நிறுத்துவதும் முசுலீம் பெண்கள் அயோத்தியில் ராமர் கோயிலை விரும்புகிறார்கள் என கட்டமைக்கப்படுவதும் இந்துத்துவ தேசியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. விஷால் பாரத் சங்கம் போன்ற அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளாக இதற்கெனவே உழைத்து நஜ்மா, நஸ்னீன் போன்ற பெண்கள், முசுலீம்களின் பிரதிநிதிகளாக உருவாக்கியுள்ளது.

இந்த இரண்டு பெண்களும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் முசுலீம்கள் வழிபட வேண்டும் என்பதோடு, “நமது முன்னோர்கள் அங்கே ராமரை வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார்கள். மோடியும் அவருடைய கட்சியும் மட்டுமே கோயிலை கட்டுவார்கள் என்பதையும் ஒரே குரலில் இருவரும் சொல்கிறார்கள்.

படிக்க:
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

இந்த இரண்டு பெண்களின் கருத்துக்களையும் முசுலீம் சமூகம் விலகி நிற்கிறது. “இவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள். அவர்களுடைய அரசியல் மிகவும் ஆபத்தானது. இதைக் காட்டிலும் ஊடகங்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானது. நான்கைந்து பேரை முசுலீம்களின் பிரதிநிதிகளாகக் காட்டுகிறார்கள். இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது” என்கிறார்கள் வாரணாசியில் உள்ள முசுலீம் சமூகத்தின் பிரதிநிதிகள்.


கட்டுரையாளர் :  ராதிகா போர்டியா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி :  த வயர்