புதுதில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றினார் மோடி! “இந்த பிச்சைக்காரனின் பாத்திரத்தை மக்கள் நிரப்பி விட்டார்கள்” என்றெல்லாம் அவர் சென்டிமென்டாக பேசினாலும் இந்துத்துவமே எங்களது இலக்கு என்பதை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் கடும் விமர்சனத்திற்குள்ளான தேர்தல் ஆணையத்திற்கும், பாலக்கோட் தாக்குதலை வைத்து நாட்டு மக்களின் தேசபக்தியை கிளறுவதற்கு உதவி செய்த பாதுகாப்பு படையினருக்கும் நன்றியைத் தெரிவித்தார் மோடி. புதிய இந்தியாவை உருவாக்க மக்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார் மோடி. அந்த புதிய இந்தியா இனி வெறும் இந்தியா அல்ல, அது இந்து … யா!

“கடந்த 30 ஆண்டுகளாக மதச்சார்பின்மை விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போலி மதர்சார்பின்மைவாதிகள் நாட்டை தவறாக வழிநடத்தி வந்தனர். அவர்களின் நிலையை மக்கள் இப்போது தெளிவாக்கியுள்ளனர்.” என்று தனது காவிக் கொண்டையை மறைக்காமல் காட்டுகிறார் மோடி.

ஒரு தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் கூட சம்பிரதாயப்படி நன்றி தெரிவித்துவிட்டு போகாமல் தாங்கள் யார், தமது எதிரி யார் என்பதை வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு பாஜக காவி தீவிரவாதம் பேசுகிற கட்சியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பது, பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்ப்பது, மதமாற்றத் தடைச்சட்டத்தை எதிர்ப்பது, காசுமீருக்கான சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவதை எதிர்ப்பது, முசுலீம்களை ஒடுக்கும் சங்கபரிவாரங்களின் கலவரங்களுக்கு நீதி கேட்பது… முதலியவை பேசினால் அவர்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள்! இதை விட மதவெறியை எவரும் கக்க முடியாது. வர இருக்கும் மோடியின் ஐந்தாண்டுகளில் என்ன நடக்கும் என்பதற்கு இந்தக் கூற்று ஒரு முன்னோட்டம்.

அடுத்ததாக பொருளாதாரம் பக்கம் திரும்புகிறார் மோடி. “இந்தியாவில் இரண்டே ஜாதிகள்தான் உள்ளது. ஒன்று ஏழைகள், இன்னொன்று ஏழ்மையில் இருந்து மக்கள் வெளியே வர உதவுபவர்கள்” என்று கூறும் மோடி அந்த ஏழ்மையை போக்குவதே எங்களது இலக்கு என்கிறார்.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

அது சரி, யார் அந்த ஏழைகளுக்கு உதவுபவர்கள்? அதானி, அம்பானி, டாடா, பிர்லா முதலானவர்கள்தான். இவர்கள்தான் இந்தியா முழுவதும் ஏழைளை மீட்க கடுமையான ‘சேவை’ செய்து வருகிறார்கள்! மோடியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பணமதிப்பழிப்பின் போது நிலைகுலைந்து, ஜிஎஸ்டி வரியால் வருமானம் இழந்து, இறுதியாக வேலையிழந்தவர்கள் ஏழைகள் என்றால் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்காக மோடி இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார். ஆஸ்திரேலியாவில் அதானிக்கு நிலக்கரி சுரங்கமாக இருக்கட்டும், ரஃபேல் விமான ஊழலில் அனில் அம்பானியைக் காப்பாற்றுவதாக இருக்கட்டும், பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிய மல்லையாவை பாதுகாப்பாக வெளியே அனுப்பியதாகட்டும்,  அப்படிப்போன நீரவ் மோடியோடு புகைப்படம் எடுத்தாக இருக்கட்டும்… அத்தனையும் ஏழைகளை மீட்கும் கனவான்களுக்கு மோடி உதவிய வரலாற்றுச் சாதனைகள்.

மோடி நடத்திய பொருளாதார சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் பாதிக்கப்பட்ட மக்களை சாதிவெறி, மதவெறி மற்றும் தேசபக்தி உணர்ச்சிகளில் மூழ்கடித்து ஏமாற்றி தற்போது வெற்றியும் பெற்றிருப்பதால் வரும் காலத்தில் மோடியின் பொருளாதாரத் தாக்குதல்கள் நிறைய நடக்கும். அதைப் பற்றி யாராவது ஊடக விவாதம் ஒன்றில் கேட்டால் இதெல்லாம் இல்லை என மக்களே 2019 தேர்தலில் தீர்ப்பளித்து விட்டார்கள் என்று ஒரே போடாக போடுவார்கள்.

பணமதிப்பழிப்பின் போது நிலைகுலைந்து, ஜிஎஸ்டி வரியால் வருமானம் இழந்து, இறுதியாக வேலையிழந்தவர்கள் ஏழைகள் என்றால் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு மோடி இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்.

இன்று (24.05.2019) நாளிதழ்களை திறந்து பார்த்தால் மோடி புராணம் முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை வெள்ளமென ஓடுகிறது. இந்த தேர்தலில் பாஜக-விற்கு 300 இடம் கிடைக்கும் என மோடி முன்பே கணித்தார் என்று பாராட்டுகிறது இந்து தமிழ் திசை. கடந்த 17-ம் தேதி மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் பேசிய மோடி, “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் மக்கள் மீண்டும் மோடி ஆட்சி வேண்டும் என்று விரும்புகின்றனர்” என்பதுதான் அந்த அபாரமான முன் கணிப்பு.

300 தொகுதிகளில் வென்றது உண்மையானலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை என்ற தொடர் பொய்யாகி விட்டதே! கன்னியாகுமரியில் பொன்னார் தோற்றார் என்றால் தமிழகம் முழுவதிலும் பாஜக மண்ணைத்தானே கவ்வியிருக்கிறது. இதையெல்லாம் முன்கூட்டியே கணிக்கத் தெரியாமல்தான் மோடி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என்று பேசிவிட்டாரோ? இந்தப் பிரச்சினைக்காகத்தான் அமித்ஷா சாமர்த்தியமாக காஷ்மீர் முதல் அந்தமான் வரை என்று பேசுகிறார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள்! பாஜக-வின் தமிழகத் தலைவரோ இன்னும் ஒரு படி மேலே போய் மிரட்டுகிறார். தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியில் கூட பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை என்பதால் இந்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்காது என்று சாபமிட்டிருக்கிறார். இதன்படி இந்திய அரசும் அரசுப் பணமும் மோடி – அமித்ஷாவின் பாக்கெட்டில் இருக்கிறது. சக்கரவர்த்திகள் மனமிறங்கினால் மாநிலங்களுக்கு ஏதோ படியளக்கப்படும்.

இதே கோணத்தில் ஊடக நெறியாளர்களும் பாஜக அல்லாதோரிடம் கேள்வி கேட்கின்றனர். இந்திய அரசு என்பது அரசியல் சாசனத்தின் படி ஆளப்படுவது உண்மையானால் மைய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் நலத்திட்டங்களையோ இதர திட்டங்களையோ வழங்குவது நிபந்தனை. மாறாக என் கட்சிக்காரனுக்கு மட்டும் வழங்குவேன் என்கிறார் தமிழிசை. தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலையை உருவாக்கிய சக்திகள் மீது அதாவது ’தேச விரோத சக்தி’கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக பேச்சாளர்கள் அனைவரும் ஊடகங்களில் பகிரங்கமாக மிரட்டுகின்றனர்.

இந்தியா ஒரு இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சி வேறு என்ன வேண்டும்?


மதன்