‘தெற்கின் அயோத்தி’ என்ற பெயரில் காவிப் படை கர்நாடகத்தின் உள்ள பாபாபுதன்கிரி தர்காவை முற்றுகையிட முனைந்தபோது, எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை ஒருங்கிணைத்து பேரணி ஒன்றை நடத்தினார் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்.

லங்கேஷ் பத்திரிகையில் டிசம்பர் 3-ம் தேதி 2003-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் எழுதிய கட்டுரையில் அண்மையில் மறைந்த நாடகக் கலைஞர் கிரிஷ் கர்னாட், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆர்வத்துடன் இணைந்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

கவுரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, இந்துத்துவ பயங்கரவாதக் குழு உருவாக்கியிருந்த கொலைப்பட்டியலில் கர்னாட்டின் பெயர் முதலில் இருந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்துத்துவ குண்டர் படையின் பல அச்சுறுத்தல்களையும் மீறி தனது எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தியபடியே இருந்தவர் கிரிஷ் கர்னாட். அவருடைய எதிர்ப்புணர்வு எத்தகைய அர்ப்பணிப்போடு இருந்தது என்பதை கவுரி லங்கேஷின் கட்டுரை விவரிக்கின்றது.

♦ ♦ ♦

பாபாபுதன்கிரியை அயோத்தியாக்க முனையும் காவிப் படையிடமிருந்து அதைக் காக்கும் பொருட்டு, கர்நாடகத்தை குஜராத் ஆக்குவதை நிறுத்த வலியுறுத்தி சிக்மகளூர் மற்றும் பாபாபுதன்கிரியில் மத நல்லிணக்கக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த இரண்டு வார காலத்தில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தன. அதை எங்கிருந்து தொடங்குவது என்பதில் எனக்கே குழப்பும் உள்ளது…

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக உள்ள பாபாபுதன்கிரியை பாதுகாக்கும் பொருட்டு தனது ஆதரவை முன்னமே சொல்லியிருந்த எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், என்னை அழைத்து இப்படி கேட்டார்.

பாபாபுதன்கிரி

“டிசம்பர் 7 மற்றும் 8 -ஆம் தேதி நடக்கவிருக்கும் நல்லிணக்க கூட்டத்துக்கு முன், அங்கே என்ன நடக்கிறது என்பதை களத்துக்குச் சென்று தெரிந்துகொள்வோமா?” எனக் கேட்டார்.

“என்ன அற்புதமான யோசனை…சரி போகலாம்” என்றேன் நான். எங்களுடன் டாக்டர் கே. மருளசித்தப்பா, ஜி.கே. கோவிந்த் ராவ், சுத்ர ஸ்ரீனிவாஸ், பேரா. வி.எஸ். ஸ்ரீதரா ஆகியோரும் சேர்ந்து சிக்மகளூர் வந்தனர்.

செல்லும் வழியில் பாபாபுதன்கிரியின் தனித்தன்மை குறித்து, காவிப் படை அங்கே உருவாக்கியிருக்கும் விஷச் சூழல் குறித்தும் பேசினோம். இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, பஜ்ரங் தள குரங்குகள், பாபாபுதன்கிரியில் இந்த ஆண்டு அழிவு வேலைகளை துவக்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு பஜ்ரங் தளம் போட்ட முழக்கங்களே அதற்கு சாட்சி. ஸ்ரீதர் சென்ற ஆண்டு எடுத்த படங்களை எனக்குக் காட்டினார்.

“நட்பில் ஆர்வமாக உள்ளோம்; ஆனால் அழிக்கவும் தயாராக உள்ளோம்!” என ஒரு புகைப்படத்தில் இருந்த வாசகம் சொன்னது.

கர்னாட் இந்த படத்தைப் பார்த்ததும் சீற்றம் கொண்டு, “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்… ‘ஆண்மை’, ‘இரத்த ஆறு’, ‘எதிரியை அழித்தல்’… இவையெல்லாம் கன்னடம்தானா?” என வெடித்து தள்ளினார்.

மருளசித்தப்பா இந்த கருத்தை சொன்னார், “நம்முடைய கலாச்சாரம் பசவண்ணா, செரீஃப், கண்ணதாசா, மற்றும் குவேம்பூ ஆகியோரால் வடிவம் தரப்பட்டது. இதுதான் கர்நாடகாவின் மதத்துக்கான அடையாளம். ஆனால், பஞ்ரங் தளம் போன்றோர் மோடி மற்றும் தொகாடியாவின் வழியில் பேசுகிறார்கள்.”

படிக்க:
♦ கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !
♦ கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்

அந்தப் புகைப்படம் பஜ்ரங் தளத்தின் கோரிக்கைகளையும்கூட காட்டியது. தத்தபீடத்தில் பூஜை செய்யவதற்கும் சிலையை நிறுவுவதற்கும், பூசாரியை நியமிப்பதற்கும் அந்த இடத்தில் உள்ள தூண்களை அகற்றி, முழு இடத்தையும் இந்துக்களின் புனித இடமாக அறிவிக்கவும் பஜ்ரங் கும்பல் கோரிக்கை விடுத்திருந்தது.

சென்ற ஆண்டைப் போல, இந்த ஆண்டும் அதே கோரிக்கைகளை பஜ்ரங் தளம் எழுப்பியிருந்தது. பாஜக தனது முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

பஜ்ரங் தளத்தின் அனைத்து கோரிக்கைகளும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளன. ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதுகூட நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்கும். பாஜக ஆதரவாளர்களுக்கு இது பொருட்டாகவே இல்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை.

பாபாபுதன்கிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நாங்கள் விவாதித்தோம். அந்த தீர்ப்பின்படி, ஜூன் 1975 -வரை நடப்பில் இருந்த சடங்குகள் மட்டுமே நடத்த அங்கே அனுமதிக்கப்படும். புதிய சடங்குகள் எதுவும் அனுமதிக்கப்படாது.

பாபாபுதன்கிரியில் நடத்தப்பட வேண்டிய மத சடங்குகள் என்னென்ன என்பது குறித்தும் ஒரு பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது. இந்து கோயில்களில் உள்ள சடங்குகள் பலவை இங்கேயும் பின்பற்றப்பட வேண்டும். அவை…

  1. கடவுளின் பாத காலணிகளுக்கு பூ வைப்பது.
  2. விளக்கு ஏற்றுதல்.
  3. பக்தர்களுக்கு தீர்த்தம் என்னும் புனித நீரை அளித்தல்.
  4. தேங்காய் உடைப்பது.
  5. இந்துமத மடங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துதல்.
  6. மயில் இறகைக் கொண்டு பக்தர்களின் தலையில் ஆசிர்வதித்தல்.

1975 -ஆம் ஆண்டு தீர்ப்பு எழுதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த புனித தலத்தின் நல்லிணக்க தனித்தன்மை குறித்து புகழ்ந்துள்ளனர். ராம் – ரஹீம் என்பது குறித்து அடிக்கடி பேசிக்கொள்கிறோம், அது இங்கே நடைமுறையில் உள்ளது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக, இந்த புனித தலத்தை பரம்பரை பரம்பரையாக நிர்வகிக்கும் ஷாகாத்ரி எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்றும் நீதிமன்றம் புகழ்ந்தது.

தன்னளவில் முசுலீமாக உள்ள அவர், இந்த புனித தலம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்து பக்தர்களுக்காகவும்தான் என்றார். நந்தா தீபம் உள்ளிட்ட இந்து மத அம்சங்கள் உள்ளதால் இந்தத் தலம் இந்துக்களுக்கானது என வழக்கு தொடுத்த இந்துக்களுக்கும் இதில் உரிமை உண்டு.

நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே வணங்கி வரும் இசுலாமியர்கள் எவரும், இது எங்களுக்கு மட்டுமே உள்ள தலம் என கூறிக்கொள்ளவில்லை என்பதையும், நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதே நேரத்தில் வஃக்பு வாரியம் இந்த இடத்தை உரிமை கோரியது. மத மற்றும் சாதி ரீதியாக பிளவுண்ட போதும்கூட, குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி தர்கா, மதசார்பின்மையின் சிறந்த உதாரணம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

அதுபோன்றதொரு இடத்தில் ஒரு தீய சக்தியாக, பழமைவாத இந்து கட்சியான பாஜக-வும், அதனுடைய நரகத்திலிருந்து கிளம்பியிருக்கும் படையான பஜ்ரங் தளமும் அங்கே பூசாரியை (நிச்சயம் அவர் பார்ப்பனராகத்தான் இருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை) நியமிக்கக் கோரியும், தூண்களை இடிக்கவும் கேட்கிறது. அவர்கள் இது இந்து புனித தலமாக மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

கிரிஷ் கர்னாட் இந்த கோரிக்கைகள் அற்பத்தனமானவை என்றார், “தத்த ஜெயந்தி அல்லது தத்த மாலா என்பது நம்முடைய பழக்கமே அல்ல. இவர்களின் கோரிக்கையில் மதம் இல்லை அரசியல்தான் உள்ளது. சாதி அமைப்பை மறுத்த நத பாரம்பரியத்தில் (பசவண்ணரைப் போன்றவர்கள்) வந்த தத்தாத்ரேயாவை பார்ப்பனமயமாக்க நடக்கும் சதி இது என்பதை எளிதாகவே புரிந்துகொள்ளலாம்” என விவரித்தார் அவர்.

குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி தர்கா தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அராபியத்திலிருந்து சந்திர துரோண மலைகளுக்கு வந்த ததா ஹயாத், நிலக்கிழார்களால் ஒடுக்குதலுக்கு உள்ளான அங்கிருந்த சூத்திரர்கள் மற்றும் தலித்துகளுக்கு உதவி, அவர்களின் அன்பைப் பெற்றார்.

படிக்க:
♦ சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !
♦ மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

ததா ஹயாத்தின் அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றின் மீது ஈர்க்கப்பட்ட சிலர் இசுலாத்துக்கு மாறினர். மற்றவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை புறம்தள்ளாமல் அவருடைய பக்தர்கள் ஆகினர். அவர்கள் தத்தாத்ரேயரின் அவதாரம் என அவரை அழைக்கத் தொடங்கினர்.

அதற்கு இந்து புராணத்தின் படி ஒரு காரணமும் உள்ளது. விஷ்ணு, தத்தாத்ரேயராக அவதாரம் எடுத்து அடிமை மக்களை மீட்கிறார். எனவே, இந்து பக்தர்கள் ததா ஹயாத்தை தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதி, அவருக்கு இந்து பெயரைக் கொடுத்தனர்.

அன்றைய காலக்கட்டத்தில் முசுலீம் சூஃபிகளுக்கு இந்து பெயர் கொடுப்பது பொதுவாக நடந்த ஒன்றுதான். உதாரணத்துக்கு, பிஜாபூரின் சூஃபி காவாஜா அமீனுதீன் அல்லா, பிராமணாந்தயகே ஸ்வாமி என இந்து பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அதுபோல, டிண்டினியின் மொயிதீன், ‘முனியப்பா’ என்ற பெயரில் இந்துவாக்கப்பட்டார்.

ததா ஹயாத்தும் தத்தாத்ரேயாவும் ஒன்றான நிலையில் தர்காவின் நில உரிமை பத்திரங்களில் ஷாகாத்ரி என்பது ஜகத்குரு என மாறியது. இந்து மற்றும் முசுலீம் மன்னர்கள் இந்த இடத்தில் நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர். ராணி சென்னம்மாவின் ஆட்சி காலத்தில் இந்த தர்காவுக்கு சிறப்பான உதவிகள் கிடைத்துள்ளனர்.

ஹைதர் அலி காலத்திலும் நிதி உதவி சிறப்பாகவே அளிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் இந்த தர்காவுக்கு நூறு ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறார். மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் இந்த தர்காவுக்கு பல முறை வந்து வணங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மைசூர் மன்னர், 16 இந்து மத தலைவர்களுக்கு கவுரவங்களை வழங்கியபோது ஸ்ரீ குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி ஜகத்குருவுக்கும் மரியாதை செய்துள்ளார். வேறு எந்த முசுலீம் மத தலைவருக்கும் இத்தகைய மரியாதை செய்யப்படவில்லை.

அத்தகைய இடத்தில் காவிப் படை ஹோமம், யாகம், யக்னம், பூஜை மற்றும் அர்த்தமற்ற பல சடங்குகளைச் செய்ய வலியுறுத்துகிறது.


கலைமதி
நன்றி : தி வயர்