பீகாரில்  கால்நடைகளை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மூவர் காவிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் கிராமத்தில் இன்று (19.07.2019) அதிகாலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அதிகாலை 4.30 மணிக்கு கால்நடைகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய போது இந்த மூவரையும் நிறுத்திய கும்பல், அவர்கள் நிலைக்குலைந்து கீழே விழும்வரை அடித்துள்ளது. நிலைகுலைந்து விழுந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசு கொண்டு சென்றபோது அவர்கள் ‘இறந்த நிலையில்’ கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

இறந்துபோன மூவருடைய குடும்பத்தினரும் போலீசாரின் காலில் விழுந்து அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், கிராமத்தைச் சேர்ந்த கும்பலின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கும்பல் தாக்குதலால்தான் மூவரும் கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்ல மறுக்கும் போலீசு, கொல்லப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் கூறுகிறது.

இந்தக் கும்பல் அளித்த கால்நடை திருட்டு புகாரையும் பதிவு செய்துள்ளது போலீசு. கால்நடை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால், மூவரை மரணிக்கும்வரை அடித்ததாக வெறியேற்றப்பட்ட அக்கும்பல் கூறுகிறது.

படிக்க:
♦ கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
♦ முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

மோடி இரண்டாம் முறையாக பதவியேற்றபின், கும்பல் கொலைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. கடந்த மாதம் ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்துக் கொல்லப்பட்டார். ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி முசுலீம்கள் மீது வடமாநிலங்களில் தாக்குதல் நடத்தின காவி கும்பல்கள். கடந்த ஜூலை 2-ம் தேதி, திரிபுரா மாநிலத்தில் கால்நடைகளை திருடியதாகக் கூறி புதி குமார் திரிபுராவில் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில் ஒரே நாளில் மூவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலர் இந்தியா கும்பல் கொலைகளின் தேசமாக மாறிவருவதாக எழுதிவருகின்றனர்.


அனிதா
நன்றி : என்.டீ.டி.வி.