திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், மோடி அரசுக்கு காவடி தூக்கும் தமிழக அரசு சதித்தனமாக – ரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்று ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தூய வளனார் கல்லூரிக்கு விடுமுறை அளித்துவிட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக தேசிய கல்விக்கொள்கை 2019-க்கான கலந்தாய்வு மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர்.

அதன் தகவல் அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), AISF, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் சென்று விசாரித்தனர். முதலில் மாணவர்களுக்கு அனுமதி உண்டு என்றனர். பின்னர் மாணவர் அமைப்புகள் வந்ததை அறிந்த கல்விதுறையினர் “பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதியில்லை. இது துறைசார்ந்த கலந்தாய்வுக் கூட்டம். உங்களுக்கு அனுமதி இல்லை ” என்றனர்.

உள்ளுர் போலீசு அதிகாரிகளுக்கும் என்ன கூட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியாமல் “விசாரித்துச் சொல்கிறோம், பிரச்சினை செய்யாதீர்கள்” எனக் கூறியவர்கள்  அதிகாரிகளின் பொய்யையே மீண்டும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் உள்ளே இருந்த நமது தோழர்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டில் கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு என உள்ளது என்ற தகவலைத் தெரிவித்தனர். இதற்கிடையில் கல்லூரிக்கு வெளியே பிற அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து சேர்ந்தனர்.

போலீசு நின்றுக்கொண்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால் உள்ளே விடவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என்றவுடன் வேறுவழியின்றி கல்லூரிக்குள்  செல்ல அனுமதித்தனர்.

அங்கும் கூட்ட அரங்கத்திற்குள் செல்லவிடாமல் வராண்டாவில் போலிசு நின்று கொண்டு தடுத்தனர். வாசலிலேயே அமர்ந்து “நடத்தாதே! நடத்தாதே! இரகசியக் கூட்டம் நடத்தாதே” என அனைவரும் முழக்கமிட்டனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரங்கத்திற்கு உள்ளே கல்வி அதிகாரிகள் மும்முரமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். நம்மைக் கைது செய்துவிட்டு அதிகாரிகள், “புதிய கல்வி கொள்கை 2019 கருத்துக்கேட்பு கூட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறிவிட்டதாக” நாடகமாடுவார்கள் விடக்கூடாது என முடிவு செய்து உள்ளே செல்வோம் என கூறிக்கொண்டே கூட்ட அரங்கத்திற்குள் சென்றார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா.

(படம் – நன்றி : விகடன்)

“கூட்டத்தை நிறுத்துங்க, திருச்சி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? பேராசிரியர்களே ! பொதுமக்களே ! இந்தக் கூட்டமே சட்டவிரோதமானது. கருத்துகேட்பு என்று கூறிவிட்டு துறைசார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாமல் திருட்டுத்தனமாக நடத்துகிறார்கள் எனவே அனைவரும் வெளிநடப்பு செய்யுங்கள்” என்றார்.  த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல அமைப்புத் தோழர்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச) “திருச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் இப்படி கூட்டம் நடத்துவது முறையல்ல என்றும்,  இந்த தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரே தவறு என்றும்” அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அருமையாக விளக்கினார். சிலர் யோசித்தனர். சுயமரியாதையும் மக்களின் மீது அக்கறை கொண்ட பல பேராசிரியர்களும் வெளியேறினர்.

பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச), கருத்து கேட்புக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார். (படம் – நன்றி : விகடன்)

வேறு வழியின்றி அந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் பொன். குமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம்,  “இத்துடன் இந்தக் கூட்டம் நிறுத்தப்படுகிறது. நோட்புக்கில் போடப்பட்ட ‘தேசிய கல்விக்கொள்கை – 2019, கருத்துக் கேட்புப் பணிமனை’ என்பதை தவறுதலாக அச்சடித்துவிட்டோம். மேலும் பொதுமக்களுக்கு அறிவித்து விளம்பரம் செய்து பொதுவாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகுதான் தோழர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர்.

தமிழக அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்த இருந்த மோடியின் மக்கள் விரோத, மாணவர் விரோத தேசிய கல்விக்கொள்கை – 2019 கருத்து கேட்பு கூட்டத்தை ஜனநாயக சக்திகள், அமைப்புகள் இணைந்து முறியடித்துள்ளனர். இது அனைவரின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி இது.

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறித்து RSS சித்தாந்தத்தை புகுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ வீழ்த்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் மக்களும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் போராட வேண்டும். பாசிசத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்பதே நம் அனைவரின் முன் உள்ள கடமையாக உள்ளது.

ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலகம் (காணொளிகள்) :

 

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி. 99431 76246.

2 மறுமொழிகள்

  1. தமிழகத்தை இந்த சமூக விரோதிகளிடம் (த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இருந்து காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் தமிழர்களின் வரும்காலத்தை இவர்கள் நாசம் செய்து விடுவார்கள்.

  2. புதிய காவி களவாணிக் கொள்கையை கமுக்கமாக ஆதரிக்க ஏற்பாடு செய்த சதிக் கூட்டத்தை முறியடித்த அனைத்துத் தோழர்களின் முன்முயற்சியும் பாராட்டுக்குறியது.
    இத்தனை முழக்கங்களுக்கு மத்தியிலும் கல்லுளிமங்கன்களாக உட்கார்ந்திருக்கும் நபர்கள் எல்லாம் தெளிவாக படம் பிடித்து அம்பலப்படுத்த வேண்டியவர்கள்… போலீசுக்காரனுடைய திருடர்கள் பேனர் மாதிரி.

Leave a Reply to குறுக்குசால் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க