காராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் உள்ள மசூதியில் 2008-ம் ஆண்டு காவிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் பத்து வயது சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அபிநவ் பாரத் என்ற காவி அமைப்பு இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த அமைப்பை இராணுவ புலனாய் அமைப்பைச் சேர்ந்த பிரசாத் ஸ்ரீகாந்த புரோஹித் என்பவர் தொடங்கினர். ஆரிய வர்த்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் பொருட்டு இந்த பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்டது என்றும், இவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றும், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை சொன்னது.

புரோஹித் – பிரக்யா தாக்கூர் (கோப்புப் படம்)

இதன் பேரில் புரோஹித், பிரக்யா தாக்கூர் உள்ளிட்ட 14 பேர் மீது ஏ.டி.எஸ் குற்றம்சாட்டியிருந்தது. முசுலீம்களை அச்சுறுத்தும் வகையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இந்தக்குழு திட்டமிட்டது குறித்தும் குற்றப்பத்திரிகை விரிவான ஆதாரங்களை சமர்பித்துள்ளது. குற்றவாளிகளுக்குள் எத்தனை முறை சந்திப்பு நடந்தது, அந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது, குண்டுகள் தயாரிக்க எங்கிருந்து மூலப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன, அவை எங்கே ஒன்றிணைக்கப்பட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன, குற்றம்சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள் என மிக விரிவாக ஏ.டி.எஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை கூறியது.

வெடிகுண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பிரக்யா தாக்கூருக்கு சொந்தமானது உள்ளிட்ட பல ஆதாரங்களை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புக் குழு முன்வைத்தது. அதன்பின் 2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2015-ம் ஆண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை ‘மீண்டும்’ விசாரிக்கத் தொடங்கியது.

படிக்க:
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

மாலேகான் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கு நீர்த்துப்போகும் என சந்தேகித்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் வெளிப்படையாக என்.ஐ.ஏ. மீது குற்றச்சாட்டுகளை சொன்னார். என்.ஐ. ஏ. அதிகாரி சுகாஸ் சார்கே, இந்த வழக்கில் ‘மென்மையான’ அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி சொன்னதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். உடனடியாக இந்த வழக்கிலிருந்து அவர் தூக்கப்பட்டார்.

2016 மே மாதம் என்.ஐ. ஏ. தாக்கல் செய்த துணை விசாரணை அறிக்கை பிரக்யா தாக்கூரை ‘குற்றமற்றவர்’ என சான்றிதழ் அளித்திருந்தது. எனினும் 2017 டிசம்பரில் நீதிபதி எஸ்.டி. தாக்லே அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, பிரக்யா மீதான வழக்கை விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது என்றார். மும்பை உயர்நீதிமன்றம் அதே ஆண்டில் பிரக்யாவுக்கு பிணையும் வழங்கியது.

Pragya-thakur-NIAகடந்த அக்டோபர் மாதம் முதல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பிரக்யா, புரோஹித் உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புப் பிரிவு (UAPA) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு நடந்துவருகிறது. 475 சாட்சியங்களில் இதுவரை 124 சாட்சியங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன.

தனது புற்றுநோயை காரணம் காட்டி வழக்கு விசாரணையை இழுத்தடித்த பிரக்யா, மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர சங்கியாக முழங்கினார். தேர்தல் பிரச்சாரம், அதன் பின் நாடாளுமன்றத்துக்குச் சென்றது வரை வெட்ட வெளிச்சமாக அனைத்தையும் செய்த பிரக்யா, வழக்கு விசாரணையின்போது தனக்கு உடல் நலன் ஒத்துழைக்கவில்லை என சொன்னார். நீதிமன்றம் அதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை.

இந்நிலையில், வழக்கு விசாரணையை உள் அரங்கு வீடியோ பதிவு விசாரணையாக நடத்த வேண்டும் என்றும் வழக்கு விசாரணையின்போது பொதுமக்களையோ, ஊடகங்களையோ அனுமதிக்கக்கூடாது என்றும் தேசிய புலனாய்வு முகவை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.எஸ். பதல்கர் முன்பு தேசிய புலனாய்வு முகமை இந்த மனு தாக்கல் செய்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என கேட்டிருந்த நிலையில் என்.ஐ.ஏ. இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை மோடி அரசின் கைப்பாவையாகிவிட்ட நிலையில், பல கிரிமினல் வழக்குகள் காவி பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ‘மக்கள் பிரதிநிதி’யாக பிரக்யா நாடாளுமன்றத்துக்குள் சென்றுவிட்டார். வழக்கிலிருந்து நீதியும் விரைவில் வெளியே சென்றுவிடும் என எதிர்பார்க்கலாம்.


கலைமதி
நன்றி : த வயர், ஸ்க்ரால்