காஷ்மீரைப் பிரிக்கும் மோடி அரசின் அகம்பாவமான நடவடிக்கை 17 வயது சிறுவனின் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. ஆகஸ்டு 2-ம் தேதி முதல் காஷ்மீரை முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு. இணையம், தொலைக்காட்சி, செய்தித்தாள் என எந்தவித தகவல் தொடர்பும் மக்களிடையே இல்லை. பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, வெறிச்சோடிய தெருக்களில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் நிற்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் பிரிவு 370-ஐ நீக்கி, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மோடி அரசு. இந்த அறிவிப்புக்கு முன்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக படைகள் குவிக்கப்படுவதாக கூறியது அரசு. இந்தச் செய்தி பெரும்பாலான காஷ்மீரிகளுக்குப் போய் சேரவேயில்லை.

dead-body

இந்த சூழ்நிலையில் 17 வயது சிறுவனான ஒசாயிப் அல்டாஃப் தனது நண்பர்களுடன் கடந்த 5-ம் தேதி விளையாடச் சென்றிருக்கிறார். அவர்களை மத்திய ரிசர்வ் போலீசு துரத்த, பயந்த அவர்கள் ஆற்றுக்குள் குதித்துள்ளனர். மற்ற சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் நீச்சல் தெரியாத அல்டாஃப் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இது  அமித் ஷா பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்த திங்கள்கிழமை அன்றுதான் நடந்திருக்கிறது.

ஒட்டுமொத்த ஊடகங்களும் செய்தி சேகரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்டு 2-ம் தேதியே காஷ்மீர் சென்றுவிட்ட ஹஃபிங்டன் போஸ்ட் நிருபர் சஃவாத் ஸார்கர் இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

மேலும், அவர் அளித்திருக்கும் செய்தியில் ஸ்ரீநகரில் உள்ள மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட 13 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதியுள்ளார் ஸார்கர்.

படிக்க:
காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்
♦ போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் உள்ளவர்கள் காஷ்மீரிகளே அல்ல, அது எங்கோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டது என ட்விட்டரில் சர்ச்சைகள் உருவான நிலையில் அந்த வீடியோவை நீக்கியது அந்த செய்தி நிறுவனம்.

அதன்பின், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியனில் உள்ளூர்வாசிகளுடன் நிலைமை கேட்டு தெரிந்துகொள்வதாகவும் அவருடன் மதிய உணவை உண்டதாகவும் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பூட்டிய கடை முன் அமர்ந்திருந்தார் தோவல். இதுதான் காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பும் லட்சணமா என சமூக ஊடகங்களில் பலர் சாடி எழுதினர்.

ஆனால், ஹஃபிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஸார்கரின் செய்தியில் காஷ்மீரின் சூழலும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுவன் அல்டாஃப் -ன் மரணம் நிகழ்ந்த விதம் குறித்து அந்தச் செய்தி விவரித்துள்ளது.

அல்டாஃப்பின் தந்தை மராசி, மத்திய அரசின் 370 பிரிவை நீக்கும் முடிவு குறித்து  தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் தெரிய வாய்ப்பே இல்லை எனவும் கூறுகிறார். அந்த நேரத்தில் அங்கே போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“அவன் 11-ம் வகுப்பு மாணவன்; கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். அவனுக்கு பிரிவு 370 பற்றி எதுவும் தெரியாது. எங்கள் வீட்டில் ரேடியோ அல்லது டிவி கூட இல்லை” என்கிறார் ஓட்டுநராகப் பணியாற்றும் மராசி.

அல்டாஃப் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் அவர்களைத் துரத்தியுள்ளனர். ஒரு பாலத்தின் மீது சிறுவர்கள் ஓடியபோது, இருபக்கமும் காவலர்கள் சூழ்ந்துகொண்ட நிலையில், தப்பிக்க நினைத்து ஆற்றில் குதித்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அல்டாஃப் உயிரிழந்திருக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
♦ காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா என்கிற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்கிற மராசி. இருக்கும் சூழலில் தனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்பவில்லை என விரக்தியோடு பேசுகிறார்.

இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் போராட்டங்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகர் வாசி ஒருவர், “என்னுடைய வீட்டில் முன்புறம் நடந்துகொண்டிருந்தேன். சி.ஆர்.பி.எஃப். காவலர் என் மீது பெல்லட் குண்டுகளால் தாக்கினார். மயங்கி விழுந்தேன். எப்படி இங்கே வந்தேன் எனத் தெரியாது” என்கிறார்.

குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹஃபிங்டன் செய்தி கூறுகிறது. புதன்கிழமை மதியம் ஸ்ரீநகர் மற்றும் கண்டெர்பால் மாவட்டங்களிலிருந்து கண்களில் பெல்லட் குண்டு காயங்களுடன் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

பாதுகாப்பு ஆலோசகரை வைத்து காஷ்மீர் இயல்புக்கு திரும்புவதாக இந்தியாவை நம்பவைத்துக் கொண்டுள்ள நிலையில், காஷ்மீரின் பரப்பரப்பான வீதிகள் வெறிச்சோடியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ளது.

மோடி அரசின் பொய்களை உண்மைபோல பரப்பும் “ட்ரோல் இராணுவம்” ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காஷ்மீரிகள் இந்தியாவின் முடிவைக் கொண்டாடுவதாகவும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் புனைந்து கொண்டிருக்கிறார்கள். எரிமலையை இந்த ட்ரோல் கும்பலால் அடக்கிவிட முடியுமா?


கலைமதி
நன்றி : ஹஃபிங்டன் போஸ்ட், தி வயர்