கேள்வி : //இயக்குநர் பா. ரஞ்சித் பொதுவெளியில் எப்போது பேசினாலும் சீற்றம் கொள்கிறாரே…. அது சரியா?//

– சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?

PA-RANJITHசில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார். வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.

தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம். ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம். அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.

இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும். இந்த சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?

நன்றி

♦ ♦ ♦

கேள்வி : //நான் குவைத்தில் ஒரு தமிழ் அமைப்பில் இருக்கிறேன். அமைப்பாய் செயல்படும்போது அமைப்பின் ஒற்றுமை முக்கியமா…. ஒற்றுமையை ஒதுக்கிவிட்டு எடுத்துக் கொண்ட செயலின் வெற்றி முக்கியமா….?//

– எம். சிவசங்கரன்.

ன்புள்ள சிவசங்கரன்,

எடுத்துக் கொண்ட செயலும் அமைப்பின் ஒற்றுமையும் ஏன் முரண்படுகிறது? நீங்கள் இருக்கும் தமிழ் அமைப்பு போன்ற மனமகிழ் மன்றங்களில் திட்டவட்டமான விதிகள், ஜனநாயகம், நிதி விசயங்களில் வெளிப்படைத் தன்மை, மன்றங்களின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை, இலக்கு ஆகியவை இருக்கும் வரை பெரிய பிரச்சினை இல்லை.

Tamil Mandramமாறாக இவையன்றி சில நண்பர்களது குழாம் அத்தகைய மன்றங்களை நடத்தும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு நண்பர்களது கருத்து வேறுபாட்டாலோ புதியவர்கள் சேராமல் விரிவடையாமலோ மன்றம் நின்று போகும். மேலும் இம்மன்றங்களில் முடிவுகளை அல்லது செயல்பாட்டை மன்றங்களின் புரவலர்களாக இருக்கும் வசதிவாய்ந்த தனிநபர்களை மையமாக வைத்து எடுக்கும் போது சிக்கல் வரலாம். அப்படி  எடுக்காமல் மன்றத்தின் உறுப்பினர்களே கூடிப் பேசி எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது குறையும். அத்தகைய கூட்டுத்துவ முறை ஏற்படும்போது பல்வேறு வழிகளில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் குறிப்பிடும் குறிப்பான பிரச்சினை எதுவென்று தெரியவில்லை.

எடுத்துக்கொண்ட செயலும் மன்றமும் ஒத்திசைவாக இருப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகள் போதுமானது என்று தோன்றுகிறது.

நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //வலது, இடது கம்யூனிசம் வேறுபாடு என்ன?//

– சாம்

ன்புள்ள சாம்,

இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1925-ல் துவங்கப்பட்டது. அதிலிருந்து 1964-ல் பிரிந்தது இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்). முன்னது வலது கம்யூனிஸ்ட் என்றும் பின்னது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் பொதுவில் அழைக்கப்படுகிறது. ஏனிந்த பிளவு?

இந்தியாவிற்கு போலி சுதந்திரம் கிடைத்த 47-க்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 50-களின் துவக்கத்தில் ரசியாவில் திரிபுவாதத்தை அரங்கேற்றிய குருசேவின் பாதையை ஏற்றுக் கொண்டது. நேருவின் ரசிய ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு காங்கிரசை ஆதரிக்க ஆரம்பித்தது. குருசேவின் திருத்தல்வாதத்தின் படி இனி, “புரட்சியின் மூலம் சோசலிசம் வரத் தேவையில்லை, அமைதி வழியில் பாராளுமன்றத்தின் மூலம் கூட சோசலிசம் வரலாம், வல்லரசு நாடுகளுக்கிடையே சமாதான சகவாழ்வு, சோவியத் நாட்டில் உள்ள அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான அரசாங்கம்” போன்றவை மார்க்சியத்தை காவு கொடுத்தது. இதை மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சி 1960-ம் ஆண்டுகளில் விமரிசிக்க ஆரம்பித்தது.

இந்த வரலாற்றுச் சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தை பின்பற்றுகிறது என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி பிளவு பட்டது.

CPM-CPIவலது கம்யூனிசக் கட்சி நேருவை மட்டுமல்ல இந்திராவையும் அவசரநிலை நெருக்கடியையும் ஆதரிக்கும் அளவு சீரழிந்து போனது. வலதுகளிடம் இருந்து சித்தாந்த ரீதியாக பிளவுற்றதாக கூறினாலும் நெருக்கடி நிலைக்கு பிறகு இடது கம்யூனிசக் கட்சியும் சிலமுறை காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. கூடவே குருசேவின் திருத்தல் வாதத்தையும், சீனாவில் மாவோவின் தலைமைக்கு பின்னர் தலைமை ஏற்ற டெங்சியோபிங்கின் நவீன திருத்தல்வாதத்தையும் ஏற்றுக் கொண்டது. இவர்களும் பாராளுமன்ற பாதையிலேயே சோசலிசம் கொண்டு வரலாம் என்று ஆரம்பித்து இன்று கேரளாவைத் தவிர எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் பிற்போக்கான பிரிவினர் வலது கம்யூனிஸ்ட்டுகளாகவும், முற்போக்கு பிரிவினர் பிரிந்து இடது கம்யூனிஸ்ட்டுகளாகவும் வந்தனர் என்ற வழக்கின்படி இந்த இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள் என்ற பேச்சு வழக்கு அமலில் இருந்தது.

1967-ல் துவங்கிய நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை வேரறுத்து மார்க்சிய லெனினியக் கட்சியை 69-ம் ஆண்டில் தோற்றுவித்தது. அது குறித்த வரலாற்றை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்