கேள்வி : // பொருளாதார நெருக்கடி பத்தி சொல்லுங்க, விலைவாசி உயர்வு ஏன் அதிகமாகுது, சந்தையில ஆட்டோமொபைல் ஏன் விக்க மாட்டேங்குது அதப்பத்தி கொஞ்சம் எளிமையாக விளக்குங்க! //

– தீபக்

ன்புள்ள தீபக்,

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் மிகை உற்பத்தியும் அதை வாங்குவதற்கு இயலாத மக்களும்தான். இந்திய மக்கள் தொகை 100 கோடியில் இருந்து 110 கோடி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் முதலாளிகள் உற்பத்தி செய்யும் பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவையை நுகரும் சந்தை என்பது ஏறக்குறைய 10 கோடி மக்களுக்குள் அடங்கிவிடும். இந்த பத்து கோடி மக்கள் தான் கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், நவீன தொலைக்காட்சிகள், புதிய குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதன கருவிகள், இலட்ச ரூபாய் செல்பேசிகள் இன்னபிற பொருட்களை நுகரும் சந்தையாக இருக்கிறார்கள். கூடவே வீட்டு மனைகள், அடுக்கக வீடுகளை வாங்கும் ரியல் எஸ்டேட் சந்தையும் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியான விலையில் இருக்கும் பொருட்களை நுகரும் சந்தை இன்னுமொரு பத்து கோடிப் பேர் இருக்கலாம். இவர்கள்தான் பார்லே ஜி போன்ற விலை குறைந்த பிஸ்கெட்டுகளை வாங்கும் பிரிவினர்.

ஆக மொத்தம் இந்த இருபது கோடி மக்களை நம்பித்தான் இந்திய முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து, சேவைத்துறை சேவைகளையும் அளிக்கின்றனர். மாதத்திற்கு சில இலட்சம் கார்களும், இருசக்கர வாகனங்களும் இப்போதும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டுகள், காலாண்டுகளை விட மிகக் குறைவாக விற்கிறது. மேலே சொன்ன அந்த பத்துக் கோடியில் பெரும்பான்மையினர் கடைசி பத்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை வாங்கி விட்டார்கள். அந்த வாங்குதல் பூர்த்தி அடைய அடைய இங்கே புதிய விற்பனை தள்ளாடுகிறது. இதில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் தலையில் புதிய கார்களை கட்டி கொத்தடிமைகளாக நடத்தினாலும் கார் சந்தை தேங்கித்தான் நிற்கிறது.

கார்களுக்கான இ.எம்.ஐ-யை குறைத்து வைத்தாலும், புதிய கார்கள் புதிய வசதிகளோடு வருவதால் பழைய கார்களை மாற்றிவிட்டு வாங்கலாம் என பல உத்திகளை கார் நிறுவனங்கள் செய்தாலும் விற்பனை கூடுவதாக இல்லை.

அதே போன்று இந்த பிரிவினர் வாங்கிய காலிமனைகள், புதிய வீடுகளும் ரியல் எஸ்டேட் சந்தையின் தேக்கத்தால் தேக்கமடைந்து நிற்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் சந்தை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து தற்போது முட்டுச் சந்தில் நிற்கிறது. புதியவர்கள் யாரும் வாங்காததால் பழைய மனைகளும், வீடுகளும் வாங்குவார் இல்லாமல் வெறுமனே நிற்கின்றன. இப்போது வாங்கிப் போட்டால் பின்னர் பல மடங்கு விலை உயர்ந்து இலாபம் வரும் என நினைத்த நடுத்தர வர்க்கம் தற்போதைய தேக்கத்தினால் ஏமாற்றமடைந்து புதிய மனைகளை, வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வாங்கிப் போட்டவர்களும் விற்பனை இல்லாமல் திகைத்து நிற்கின்றனர். தமிழகத்திலேயே சில இலட்சம் புதிய வீடுகள் வாங்குவார் இல்லாமல் காலியாக இருக்கின்றன.

படிக்க:
தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
♦ இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அதே போன்று கடைசி பத்து பதினைந்து ஆண்டுகளில் வங்கிகளில் இருக்கும் சேமிப்புக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டியும் அதிகரித்திருக்கிறது. இதனால் கடன் வாங்கி கார்களையோ, வீடுகளையோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதாக நடுத்தர வர்க்கம் நினைக்கிறது. பொதுத்துறை வங்கிகளும் சில இலட்சம் கோடி வராக் கடனால் புதிய கடன்களை பெருவாரியானவர்களுக்கு கொடுப்பதாக இல்லை. வங்கிகளில் மக்கள் போடும் சேமிப்பும் குறைந்து போனது.

இது போக சிறு, குறு தொழில்களும் நசிந்து போயிருக்கின்றது. பணமதிப்பழிப்பின் போது இந்நிறுவனங்கள் ரொக்க சுழற்சி இல்லாமல் பாதிக்கப்பட்டு பல மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை இழந்தனர். இந்த வேலையிழப்பை ஜி.எஸ்.டி வரி அதிகமாக்கியது. சாதாரண பாதையோரத்தில் விற்பனையாகும் பொருட்கள் கூட ஜி.எஸ்.டி ஸ்லாட்டில்  0%, 5%, 12%, 18% மற்றும் 28% என்ற பிரிவுகளில் மாட்டிக் கொண்டு விலைவாசி உயர்ந்தது. இதனால்தான் பார்லேஜி எனப்படும் ஐந்து ரூபாய் மலிவு விலை பிஸ்கெட் பாக்கெட்டில் பிஸ்கெட்டுகளை குறைத்து விற்றார்கள். அந்த நுகர்வும் குறைந்து போனதால் அந்த நிறுவனம் ஆட்குறைப்பை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

GSTசிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிகர்களும்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் பிரிவினராவர். அவர்களை கேட்பார் கேள்வியின்றி ஜி.எஸ்.டி சூறையாடியது. வரிப்பிடித்தம் திரும்பும் நாள்கள் அதிகமானதால் வணிகர்கள் ரொக்க சுழற்சி இன்றி திண்டாடினர். இதற்கு முன்னர் மறைமுக வரியாக செலுத்திக் கொண்டிருந்த நுகர்வோர் எனப்படும் பொது மக்கள் இப்போது ஜி.எஸ்.டி வரியாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிஸ்கெட், பேஸ்ட், சோப், நாப்கின், செல்பேசி கட்டணங்கள் என ஒன்று விடாமல் ஜி.எஸ்.டியால் விலை உயர்ந்தது. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை அதிகரித்தது. வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி- இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் நுகர்வை வெகுவாகக் குறைத்து விட்டது.

மேலும் மேற்சொன்ன நிகழ்ச்சிப் போக்கில் பல இலட்சம் பேர் வேலை இழந்து போனதும் முக்கியமானது. வேலை இழப்பு அதிகமாக அதிகமாக மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்து நுகர்வும் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

ஒரு எளிய சான்றுடன் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நூறு பேர் கொண்ட ஒரு ஊரில் முப்பது குடும்பங்கள் உள்ளன. இந்த முப்பது குடும்பங்களில் வாங்கும் சக்தி கொண்டவை பத்து குடும்பங்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்து குடும்பங்களைக் கொண்ட சந்தையில் சோப், பேஸ்ட், கார் கம்பெனி தலா ஐந்து நிறுவனங்கள் உள்ளதாக வைத்துக் கொண்டால், இந்த ஐந்து கம்பெனிகளும் இந்த பத்து குடும்பத்தை மனதில் வைத்து உற்பத்தியை அதிகரிக்கின்றன. ஐந்து  பேரும் தலா பத்து பொருட்களை உற்பத்தி செய்யும் போது விற்பனை முப்பது போக இருபது தேங்கிப் போகிறது. இந்த தேக்கத்தால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். அதனால் இன்னும் விற்பனை குறைகிறது.

படிக்க:
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இப்போது என்ன செய்யலாம்? வம்படியாக கார்களை தலையில் கட்ட வேண்டும். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லலாம். அரசு நிறுவனங்கள் அனைத்தும் பழைய கார்களை விடுவித்து விட்டு புதிய கார்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் வரி குறைப்பு செய்யலாம். இருப்பினும் இந்த முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் வாழ்வியலை எந்த விதத்திலும் மாற்ற முடியாது. இறுதியில் போராடும் மக்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்குவதே அரசு, ஆளும் வர்க்கங்களின் புகலிடமாக இருக்கிறது.

அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து அடுத்த நெருக்கடிக்கு உலகம் தயாராக வேண்டும் என முதலாளித்துவ அறிஞர்களே நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அந்த நெருக்கடி ஒரு வருடத்திலா, ஆறுமாதங்களிலா என்பதில்தான் வேறுபாடு இருக்கிறதே அன்றி நெருக்கடி வந்தே தீருமென்பதில் அவர்களிடம் மாற்றுக் கருத்தில்லை. அதை எதிர்கொள்ள முதலாளித்துவ உலகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால்தான் இந்த நெருக்கடியே முற்றுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் முடிவில்லாமல் தொடரும் வர்த்தகப் போர் அதற்கு ஒரு சான்று.

இந்த நிலைமைகளும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தியாவின் முதலாளிகள் பலர் தமது நிறுவனத்தின் மதிப்பைக் காட்டிலும் கடன்களை கணிசமாக வைத்திருக்கின்றனர். அனில் அம்பானி திவால் என்றால் முகேஷ் அம்பானி சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்று முதலீட்டை வாங்குகிறார். டாடா, அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், உள்ளூர் பொதுத்துறை வங்கிகளிடமும் கணிசமான கடன்களை வாங்கியிருக்கின்றனர். பங்குச் சந்தை சூதாட்டம், ஊக வாணிபத்தின் மூலம் இவர்களது நிறுவனங்களின் சொத்து காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதையெல்லாம் தாண்டி அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் மட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இப்படி ஒரு சில முதலாளிகளது சொத்து அதிகம் சேர்வதும், பெரும்பான்மை மக்களோ வேலை இழப்பு, விலைவாசி உயர்வு காரணமாக வாங்கும் சக்தியை இழந்து, வருமானத்தை இழந்தும் நமது சமூகம் ஒரு முரண்பாட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த முரண்பாட்டை மக்களது போராட்டங்கள் தீர்க்குமா, முதலாளிகளின் பாசிச ஒடுக்குமுறைகள் மறுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. உபரி உழைப்பு-உபரி உற்பத்தி=உபரி மூலதனம்/உபரி மதிப்பு (Surplus wealth).
    இந்த உபரி மதிப்பு சமதர்ம கோட்பாடுகளின் அடிப்படையில் மக்களின் இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும், பொதுவுடைமை கொள்கையின் மூலம் சமூக மாற்றம் எந்த பாகுபாடின்றி சரியான சமமான முறையில் அத்தியாவசிய பயண்பாட்டிர்க்கு பங்கீடு செய்யும் வகையில் சோசலிச சமுதாயம் மலர்வதை கண்கூடாக காண இயலும், இதனை சாத்தியப்படுத்தும் பொருட்டு பொதுத்துறை நிறுவனங்கள் பறிப் போகாமல் அரசு சொந்தமாகவே எப்போதும் இருக்க வேண்டும், அதன் கண்காணிப்பு கட்டுப்பாடு அறிக்கை தயார் தாக்கல் செய்தல் போன்ற நிர்வாக கட்டமைப்பு வருங்கால மாணவர் பருவத்தினர் அங்கத்தினர் ஆளுமையின் கீழ் ஆட்க்கொள்ளப்பட வேண்டும்,ஆக சமதர்ம சமுதாயம் காண உறுதி ஏற்றுள்ளவர்களின் அங்கமான அரசாங்கம் இதனை சார்ந்த வேலை திட்ட ஏற்பாடுகளோடு முனைப்பாக செயல் படவேண்டும், அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் நிலை அரசு பணியாளர்கள் என அங்கீகரிக்கப்படும் சூழலில் கட்சி உடனான உறவு இரகசிய காப்பு தொடர்பாகவே இருத்தல் வேண்டும்,பறிப்போயுள்ள அனைத்து பொதுத்துறைகளையும் மீட்டு அரசின் வசம் கைப்பற்ற வேண்டும், மேலும் திட்டமிடப்படும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவன செயல்பாடாக இருப்பதை உறுதி செய்வதாக அமையவேண்டும்…

Leave a Reply to Needhiyaithedy...neythalvendhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க