கீழடி – தமிழர் நகர நாகரிகத்தின் தாய் மடி ! 

மிழர்களின் நகர நாகரிகத்தின் தாய்மடி எனப் புகழப்படும் கீழடியில் நடைபெற்று வருகின்ற 5-ம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சியை 10-10-2019 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று பார்வையிட்டோம். அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் தமிழர்களின் நகர நாகரிகத்தின் பல்வேறு சான்றுகள் படிந்து கிடப்பதைக் கண்டு வியந்தோம் . கீழடி மதுரையிலிருந்து 15 கி.மீ.தென் கிழக்காக சிவகங்கை – மதுரை மாவட்ட எல்லையில் வைகை நதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.

கீழடியில் தொல்லியல் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் கிடைத்துள்ள தொல்பொருட்கள் பற்றிய ஆய்வின் முடிவுகள்   இந்திய வரலாற்றையே மாற்றியமைக்கும்  வல்லமை கொண்டதாக இருக்கிறது என்பது தொல்லியல் அறிஞர்கள்  பலரின் கருத்து. இந்த ஆய்வு 110 ஏக்கர் நிலத்திலும் நிறைவடையும் போது உலக வரலாற்றில் தமிழர் நாகரிகத்தின் தொன்மை என்பது ரோம், ஏதன்ஸ், சுமேரியன் நாகரிகங்களுக்கு இணையாக இருக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இதுவரையிலும் சங்ககால இலக்கியங்களையே நமது வரலாற்றுக்கும் தொன்மைக்கும் சான்றுகளாகப் பகர்ந்து வந்தோம். வேறு எந்த தொல்லியல், கல்வெட்டுச் சான்றுகளும்  போதுமான அளவிற்குக் கண்டறியப்படாமல்  இருந்த நிலையில் கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள் சங்க கால  நகர நாகரிகத்தை உறுதி செய்தது மட்டுமல்ல அதன் காலத்தை 2600 ஆண்டுகள் பழமையானது என்று நிர்ணயம் செய்து தமிழர்களுக்குப்  பெருமை சேர்த்திருக்கிறது.

இது  தொடர்பாக கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணியின் அதிகாரி ஆசைத்தம்பி அவர்களைச் சந்தித்தபோது அவர் எங்களுடன் பல்வேறு கருத்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக 6-ம் கட்ட அகழ்வுப் பணிகளை ஜனவரி 2020-ல் அருகிலுள்ள கொந்தகையில் மேற்கொள்ள இருப்பதாகவும்   அது கீழடியில் வாழ்ந்த மக்களின் இடுகாடாக இருந்திருக்கலாம் என்பதால்   அங்கே மனித எலும்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்து இருப்பதாகவும் அவர்  கூறினார். அத்துடன் கீழடி ,கொந்தகையோடு மதுரை மாவட்டத்தில், அகரம், மணலூர் பகுதிகளிலும், நெல்லை ஆதிச்சநல்லூர், இராம நாதபுரம் மாவட்டம் அழகன்குளம், திருவள்ளூர்  பட்டறை பரம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் தமிழ்நாடு  தொல்லியல்  துறை ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும் இதில் இதுவரை எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று நம்பிக்கையோடு கூறினார்.

அவரது நம்பிக்கை மகிழ்வைத் தந்தாலும், ஆரியத்தை உயர்த்தி தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எப்போதுமே இருட்டடிப்பு செய்யும் ஒரு கூட்டத்தாரின் அரசியல் சதிக்கு இரையாகிவிடக் கூடாதே என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. ஏனெனில் கீழடியின் முதல்  மூன்று கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை அதை முறைப்படி செய்யாமல்  அகழாய்வுகளை  இழுத்து மூடியதையும் 3-ம் கட்ட ஆய்வறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதையும்  கீழடியில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வை மேற்கொண்ட கீழடியின் தள நாயகன் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடியில் இருந்து அஸ்ஸாமுக்கு மாற்றியதையும்  மறந்து விட முடியாது.

கீழடியில் 1,2,4,5 ஆகிய கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட  பல்வேறு பொருட்களை  வகைப்படுத்தி, Royal Testing, Chemical Testing, Carbon Dating-க்கு உலகின் தலைசிறந்த ஆய்வுக்கூடங்களான அமெரிக்காவில் புளோரிடா – பீட்டா, இத்தாலி, இந்தியாவில் புனே – டெக்கான் யுனிவர்சிட்டி, பெங்களூரு – இக்பால் யுனிவர்சிட்டி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அதன் பின்னரும், சிலர் உலகமே ஏற்றுக் கொண்ட  கார்பன் டேட்டிங் ஆய்வு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது, அது நம்பகத்தன்மை அற்றது; Carban Dating முடிவை வைத்து காலத்தை முடிவு செய்ய முடியாது என்று வாதிடுகின்றனர்.

உலகம் முழுவதும் காலத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்கு கரிம வேதியல் ஆய்வுமுறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே அறிஞர்களாலும் அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியதாகவே அவர் குறிப்பிட்டார்.

கார்பன் டேட்டிங் ஆய்வு முறையால் காலத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்றால் இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்த எகிப்து, ரோம், சுமேரிய, சிந்து ஹரப்பா  நாகரிகங்களின் காலம் அனைத்தும் தவறு என்ற முடிவுக்குத் தான் வர முடியும். கீழடி நாகரிகத்தின் சான்றுகளை கேள்விக்கு உட்படுத்தும் அந்தக் கூட்டம் ரிக் வேத காலத்தை 3000 ஆண்டுகள் முற்பட்டது  என்பதற்கு எந்த  தொல்லியல் சான்றுகளை உலகின் பார்வைக்கு வைத்தனர்?

கீழடியை  விட்டு நகரும் முன் இந்த அகழ்வாராய்வுக்கு நிலம் தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினோம். நிலம் தந்தவர்களில் பலரும் பல்வேறு ஊர்களில் இருந்ததால்  தற்போது நடந்து முடிந்துள்ள 5-ம் கட்ட அகழாய்வுக்கு இடம் கொடுத்துள்ள மாரியம்மாள் அவர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. 2 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்கு கொடுத்ததைப் பெருமையாகவே கருதினார்.

அவரைப் பாராட்டி சால்வை போர்த்தியபோது அவர் அடைந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளவிட முடியாததாக இருந்தது. அதுபோலவே அங்கே பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் மகிழ்ச்சியாகவும் மக்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டும் இருந்தனர். இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ள அகழாய்வுகள் எதற்கும் இல்லாத சிறப்பு கீழடிக்குக் கிடைத்துள்ளது. தமிழர் நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாகப் பரவியதை அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று 20 ஆயிரம் பேர்வரை வந்துள்ளனர்.

அடுத்தகட்ட அகழாய்வுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் நாங்கள் நிதி தருகிறோம் என்று பலரும் கூறிச் சென்றுள்ளதாக அங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆய்வு மாணவர் ராஜா தெரிவித்தார். ஒருவேளை அடுத்தகட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்தால் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். எனவே இந்த அகழாய்வு இப்போது மக்கள் இயக்கம் போல மாறியுள்ளது.

தொல்லியல் அகழாய்வு என்பது மக்கள் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு செயல் அல்ல. அங்கே பல்வேறு நீள அகல ஆழங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளைப் பார்க்கும் போது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது நம்ப முடியாத  புதிர்போலத்தான் தோன்றுகிறது. ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போது தான் ஆர்வம் பிறக்கிறது.

ஏற்கனவே முதல் கட்டமாகச் செய்து முடித்துள்ள கள ஆய்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற இடத்தில் குழி தோண்டப்படுகிறது. அது மேடான பகுதியாக இருக்கின்றது. மேட்டிலிருந்து நிலம் இருபுறமும் சரிந்து செல்கிறது. குறிப்பிட்ட ஆழத்தில் மண் தன் மண்ணாகக் (virgin Soil) காணப்படுகிறது. அதற்குக் கீழே மனிதர்கள் வாழ முடிந்திராத நிலை. மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி மண், பல அடுக்குகளாக பல நிறங்களில் காணப்படுகிறது.

ஒவ்வொரு அடுக்கும் (வைகை) நதியின் போக்கில் பல நூற்றாண்டு மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது. அந்த அடுக்கு அப்பகுதியில் எங்கே தோண்டினாலும் ஒரே மாதிரியாகவும் அதில் கண்டெடுக்கப்படுகிற பொருட்கள் பரிசோதனையில் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கிறது. ஆழம் கீழே செல்லச் செல்ல கிடைக்கும் பொருட்களின் காலமும் தொன்மையாகிறது. கீழடியில் நிலம் ஏழு, எட்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது.

படிக்க:
சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

கீழடியில் இதுவரை கடவுள், சாதி, மத, அடையாளங்களைக் குறிக்கும் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பது தமிழர்கள்  பண்டை காலத்தில் சமத்துவ சமுதாயமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற பெருமிதத்தைப் பறைசாற்றுகிறது. எனவே சதி செய்து கோவில் கடையிலிருந்து பொம்மை வாங்கி வந்து இடையே சாமி சிலைகளைப் புகுத்த வழியேதுமில்லை என்று தெரிய வருகிறது. கீழடி தமிழர் நகர நாகரிகத்தின் தாய்மடி. ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !


தகவல்:
மக்கள் உரிமைப் பதுகாப்பு மையம்,
மதுரை.