“நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி”யாகப் புகழ்ந்து தலையங்கம் தீட்டியிருக்கிறது, தினமணி. நடுநிலை நாளேடு என வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமணியே இந்த ஊது ஊதியிருக்கிறதென்றால், சங்கிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

“ஹூஸ்டன் நிகழ்ச்சி, ஐ.நா. உரை, பாகிஸ்தானை ஓரங்கட்டியிருப்பது” ஆகிய முப்பெரும் சாதனைகளை நரேந்திர மோடி அமெரிக்க மண்ணில் நிகழ்த்தியிருப்பதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறது, துக்ளக்.

மைய அமைச்சர் ஜிதேந்திர சிங்கோ, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்ததை ஏற்காதவர்களை இந்தியர்களாகக் கருத வேண்டாம்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், விளம்பரம் தேடிக் கொள்வதிலும் நரேந்திர மோடிக்கு இணையாக வேறொரு அரசியல் தலைவர் சமீபகால அரசியல் வரலாற்றில் கிடையாது. அவரின் இந்த அற்பத்தனத்திற்கு இன்னொரு சான்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த “மோடி நலமா!” நிகழ்ச்சி.

இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வரும் சூழலில் மோடி நலமா என்ற தலைப்பே வக்கிரமானது, அருவெருக்கத்தக்கது. அந்நிகழ்ச்சியோ ஆடல், பாடல், செல்ஃபி, ஒருவருக்கொருவர் முதுகு சொறிவது என மூன்றாந்தர நட்சத்திர கலைநிகழ்ச்சி போல நடந்து முடிந்தது.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் நடத்தியிருக்கும் இத்தகைய கூத்துக்களை வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்திருக்கும் அவாள் பத்திரிகைகள் மோடி நலமா நிகழ்ச்சியை விமர்சித்து ஒருவரி கூட எழுதவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்பை மேடையில் ஏற்றியதை மோடியின் வெற்றியாகக் குறிப்பிடுகின்றன.

படிக்க:
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

“தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தியாவில் கட்சித் தலைவர்களுக்கு முன்னால் அவர்களது வேட்பாளர்கள் கைகூப்பி நிற்பது போல, அமெரிக்க அதிபரை நரேந்திர மோடி நிற்க வைத்ததைப் பார்த்து உலகமே வியந்தது, அதிர்ந்தது” எனக் கூச்சமின்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது, தினமணி. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற ரேஞ்சில் நரேந்திர மோடிக்குப் புதிய பட்டம் எதனையும் சூட்டாததுதான் கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி.

மோடி நலமா நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டது, தினமணி குறிப்பிடுவது போல இந்தியாவிற்கோ, மோடிக்கோ தனி மரியாதை கொடுக்கும் நல்லெண்ணம் கொண்டதல்ல. மாறாக, அது டிரம்பின் தேர்தல் உத்தி. அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாகப் போட்டியிடவுள்ள டிரம்பிற்கு, அமெரிக்க இந்தியர்களின் வாக்குகள் தேவை. கடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க இந்தியர்களில் வெறும் 16 சதவீதத்தினர்தான் டிரம்பிற்கு வாக்களித்திருந்தனர். இம்முறை அதனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மோடியைப் பயன்படுத்திக் கொண்டார், அவர். மோடியோ வாங்கிய காசுக்கு மேல் கூவிய கதையாக, “இந்த முறையும் டிரம்ப் சர்க்கார்தான்” (அப் கி பார், டிரம்ப் சர்க்கார்) என முழக்கமிட்டதன் மூலம், தான் டிரம்பின் நட்சத்திர பிரச்சாரக் எனக் காட்டிக்கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர், தனது தகுதியைக் கடாசிவிட்டு இப்படி இறங்கிப்போய் தேர்தல் பிரச்சாரம் செய்த கேவலத்தைக் கண்டுதான் உலகம் அதிர்ந்து போனது.

ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவதற்காகத்தான் மோடி அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டாலும், இந்தப் பயணம் வேறு நோக்கங்களையும் கொண்டிருந்தது. ஒன்று, காஷ்மீர் பிரச்சினை; மற்றொன்று, அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினை.

நரேந்திர மோடியும் டிரம்பும் பாய்-பாய் என்றபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி போஸ் கொடுத்தாலும், பெரிய அமெரிக்க முதலீடுகள் எதுவும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. மாறாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பெட்ரோநெட், அமெரிக்காவின் எல்.என்.ஜி. நிறுவனத்தில் 17,688 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அமெரிக்காவைத் திருப்திப்படுத்த மோடி எழுதியிருக்கும் மொய்ப்பணம் இது!

இவ்வர்த்தகப் பேச்சுவார்த்தையினூடாக அமெரிக்காவின் சலுகை பெற்ற வர்த்தகக் கூட்டாளி என்ற தகுதியை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென்பதும், அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பேசி முடித்துவிட வேண்டுமென்பதும் மோடி அரசின் முக்கிய விருப்பங்களாக இருந்தன. இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால், நரேந்திர மோடி வெறுங்கையோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார்.

எனினும், ஐ.நா. பொதுக்குழுவில் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறாததைக் காட்டி, மோடியின் பயணத்தை வெற்றியாகக் காட்ட முயலுகிறார்கள், அவரது ஆதரவாளர்கள். ஆனால், காஷ்மீர் பிரச்சினையிலோ முதுகுக்குப் பின்னிருந்துகொண்டு பெப்பே காட்டும் தந்திரத்தோடு நடந்துகொண்டு, மோடியைக் கோமாளியாக்கவிட்டார், டிரம்ப்.

ஹூஸ்டன் நிகழ்ச்சியிலும் ஐ.நா.வின் பொதுக்குழுவிலும் காணக் கிடைக்காத அமெரிக்காவின் உண்மை முகம் இம்ரான் கானும் டிரம்பும் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளிச்சத்திற்கு வந்தது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பாக். தீவிரவாதத்தைக் கண்டித்து மோடி ஆற்றிய உரையை, “முரட்டுத்தனமான பேச்சு” என அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்ததோடு, “இரண்டு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் நான் மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக”வும் அறிவித்தார், டிரம்ப்.

“நான் பாகிஸ்தானை நம்புகிறேன். ஆனால், எனக்கு முன்பு இருந்தவர்கள் நம்பவில்லை. பாகிஸ்தானியர்கள் என்ன செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியாது” எனக் கூறி, பாகிஸ்தானை ஆசிர்வதித்தார். இவை அனைத்தும் டிரம்ப் மோடிக்கு வைத்த ஆப்புகள். பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிகள்.

“டிரம்பின் இந்தக் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பீர்களா?” எனப் பத்திரிகையாளர்கள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, மோடி-டிரம்ப் சந்திப்பின்போது ஆட்சேபணை தெரிவிக்கப்படும் என வீராப்பாக அறிவித்தார்கள். அச்சந்திப்பு நடந்ததேயொழிய, டிரம்பின் கருத்துக்களுக்கோ, மத்தியஸ்த விருப்பத்திற்கோ மோடி மறுப்பு தெரிவித்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஐ.நா.வின் பொதுக்குழுவில் பாக். பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்குப் பதில் அளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அதிகாரி விதிஷா மைத்ராவும்கூட, அந்த எல்லைக்கு அப்பால் சென்று வினயமாகக்கூட டிரம்பின் விமர்சனங்களுக்கும் விருப்பங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

அதேசமயம், ஐ.நா.வில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் பிரச்சினையில் அமெரிக்கா சுயநலத்தோடு பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொண்டதைக் குறிப்பிட்டதோடு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்துதான் தவறு என்றும், டிரம்ப் தாலிபான்களோடு மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்றும், 19 ஆண்டுகளாக உங்களால் வெல்ல முடியாதபோது இன்னும் 19 ஆண்டுகளானாலும் உங்களால் வெல்ல முடியாது என்றும் விமர்சித்து, அமெரிக்காவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும் சீனாவையும் தவிர்த்து ஏனைய உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லவில்லை என்பது உண்மைதான். இதன் பொருள் அந்நாடுகள், குறிப்பாக மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது அல்ல.

“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இனி, பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரை மீட்பதுதான் இந்திய அரசின் அடுத்த இலக்கு” என்றவாறு மோடி அரசு உதார்விட்டு வருகிறது. ஆனால், இதற்கு மாறாக, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை இன்னும் இரு தரப்புப் பிரச்சினையாகவே கருதி வருகின்றன. டிரம்போ தனது தலைமையில் மத்தியஸ்தம் என அதற்கு அப்பால் செல்லுகிறார். மோடி அரசோ வாய் கொள்ளாத பெரிய எலும்புத் துண்டை முழுங்கிவிட்டு, அதனை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துப் போய் நிற்கிறது.

– குப்பன்