ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.

வி.இ.  குகநாதன்