அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 42

பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர்

அ.அனிக்கின்

ரசரின் ஆசை நாயகிக்கு வயது முப்பதுக்கு மேல் சற்று அதிகமாகியிருந்தது. அவள் உல்லாசப் பிரியரான அரசரின் தயவை இழந்து கொண்டிருந்தாள். பிறகு அவள் அரசரின் அந்தப்புர நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கான நிலையைக் கடைசிவரையிலும் காப்பாற்றிக் கொண்டாள்.

பிரான்சில் அதிகமான அதிகாரத்தை வகித்த இந்த இருவருக்கும் அடுத்தபடியாக சீமாட்டி பாம்பதூரின் சொந்த மருத்துவரும் அரசரின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் கெனே இருந்தார். அவர் உருண்டையான தோள்களைக் கொண்டவர், எளிமையான உடையணிந்தவர், எப்பொழுதும் அமைதியாகத் தோன்றுவார்; ஆனால் அவரிடம் லேசான ஏளனம் இருந்தது. அவர் அரசாங்க இரகசியங்கள் பலவற்றை அறிந்திருந்தார். ஆனால் அவற்றை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றுவதற்கும் அவருக்குத் தெரியும். மருத்துவத் தொழிலில் அவருடைய திறமையைப் போல இந்த குணமும் பாராட்டுதலைப் பெற்றது.

அரசருக்கு போர்டோ மதுவின் மீது ஆசை அதிகம்; ஆனால் அரசருடைய வயிற்றுக்கு அது ஒத்துவராது என்பதால் அதைக் குடிக்கக் கூடாது என்பது கெனேயின் உத்தரவாகும். அரசர் வேறு வழியில்லாமல் அந்த மதுவைக் குடிப்பதை நிறுத்தியிருந்தார். எனினும் இரவு உணவின் போது அரசர் அதிகமாக சாம்பேன் மதுவைக் குடித்து விட்டு கால்கள் தள்ளாட சீமாட்டி பாம்பதூரின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வார். அவர் பல தடவை மயங்கி விழுவார்; டாக்டர் கெனே அவருக்கு உடனே மருந்து கொடுப்பார்.

பாம்பதூர் சீமாட்டி

சாதாரணமான மருந்துகளைக் கொண்டே நோயாளியை உடனே குணப்படுத்திவிடுவார். தன்னுடைய படுக்கையில் அரசர் மரணமடைந்துவிடுவாரானால் அடுத்தாற் போல என்ன நடக்கும் என்பதை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கும் சீமாட்டி பாம்பதூருக்கும் அவர் தைரியம் சொல்லுவார். அரசர் மரணமடைந்தால் அந்தச் சீமாட்டியே அதற்குப் பொறுப்பு என்பது நிச்சயம். அந்த ஆபத்து ஏற்படாதென்று கெனே அவளிடம் உறுதியளித்தார். அரசருக்கு வயது நாற்பது; அவருக்கு அறுபது வயதாகியிருக்குமானால் கெனேயால் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. அவர் அறிவாளி, அனுபவம் மிகுந்தவர்; அரசவைப் பிரமுகர்களுக்கும் விவசாயிகளுக்கும், இளவரசிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்; சீமாட்டி பாம்பதூரை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவர் மருத்துவத் துறையில் அதிகமான அளவுக்கு இயற்கையில் நம்பிக்கை கொண்டவர்; சாதாரணமான இயற்கை மருந்துகளையே அவர் அதிகம் உபயோகித்தார். அவருடைய சமூக, பொருளாதாரக் கருத்துக்கள் அவருடைய குணத்திலிருந்த இந்த அம்சத்தோடு முழுமையாகப் பொருந்தியிருந்தன. ஏனென்றால் “பிஸியோக்ரஸி” என்ற சொல்லுக்கு “இயற்கையின் சக்தி” என்பது பொருள் (கிரேக்கச் சொல்லான “பிஸிஸ்” என்றால் இயற்கை; ”கிராடோஸ்” என்றால் சக்தி).

பதினைந்தாம் லுயீ கெனே மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்; அவரை ”என்னுடைய சிந்தனையாளர்” என்றே கூப்பிடுவார். அவர் தன்னுடைய மருத்துவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்தார்; அதற்குரிய இலச்சினையையும் அவரே தேர்ந்தெடுத்தார். அரசரின் உடற்பயிற்சிக்காகக் கையால் அச்சிடுகின்ற சிறு இயந்திரத்தை கெனே ஏற்பாடு செய்திருந்தார். அதில் கெனே எழுதிய பிரசுரத்தின் முதல் பிரதிகளை அரசர் தாமே கைப்பட அச்சிட்டார். பொருளாதார அட்டவணை என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிரசுரம் கெனேக்கு அதிகமான புகழைத் தேடித் தந்தது. ஆனால் கெனேக்கு அரசரைப் பிடிக்காது; தன் மனதில் அவரைப் பற்றி ஆபத்தான அனாமதேயம் என்று நினைத்திருந்தார்.

பிஸியோகிராட்டுகளின் பார்வையில் இலட்சிய அரசர் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும்; அரசுச் சட்டங்களை மதிநுட்பத்தோடு பயன்படுத்துகின்ற நாட்டின் பாதுகாவலர் அவர். இந்த இலட்சியத்துக்கும் பதினைந்தாம் லுயீக்கும் எத்தகைய ஒற்றுமையும் கிடையாது. கெனே அரண்மனையில் நிரந்தரமாக இருந்தார்; அரசவையில் தமக்கிருந்த செல்வாக்கை உபயோகித்து பதினைந்தாம் லூயீயின் மகனும் வாரிசுமான இளவரசரை அப்படிப்பட்ட அரசராக மாற்றுவதற்குப் படிப்படியாக முயற்சி செய்தார்; இளவரசரின் மரணத்துக்குப் பிறகு அரசரின் பேரனும் புதிய இளவரசரும் எதிர்கால பதினாறாம் லுயீயுமான இளைஞரை மாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

படிக்க :
♦ வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?
♦ பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !

1694 -ம் வருடத்தில் வெர்சேய்க்கு அருகிலுள்ள கிராமத்தில் நிக்கோலஸ் கெனே என்பவரின் எட்டாவது மகனாக அவர் பிறந்தார். அவர் தந்தைக்கு மொத்தம் பதிமூன்று குழந்தைகள். நிக்கோலஸ் வழக்குரைஞராக அல்லது நீதித்துறை அதிகாரியாக இருந்ததாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. டாக்டர் கெனேயின் மரணத்துக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை முதலாவதாக எழுதியவரும் அவருடைய மருமகனுமான எவேன் என்ற மருத்துவர் இந்தக் கட்டுக் கதையைப் பரப்பினார் என்று பிற்காலத்தில் தெரிய வந்தது; டாக்டர் கெனேக்கு அதிக கௌரவமான குடும்பப் பின்னணியைக் கொடுப்பது அவருடைய நோக்கம். நிக்கோலஸ் ஒரு சாதாரண விவசாயி; எப்பொழுதாவது சிறு அளவுக்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவதுண்டு என்ற விவரங்கள் இன்று ஆதாரத்தோடு தெரியவந்திருக்கின்றன.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

பதினொரு வயது வரை கெனே எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார். பிறகு ஒரு அன்பான தோட்டக்காரர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு கிராமத்தின் குருவிடம் பாடங்களைக் கேட்டார்; பக்கத்திலிருந்த சிற்றூரில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலும் போய்ப் படித்தார். இந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் வயலிலும் வீட்டிலும் கடுமையாகப் பாடுபட்டார்; அவருக்குப் பதிமூன்று வயதாகிய பொழுது அவருடைய தகப்பனார் இறந்துவிட்டதனால் அவர் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது என்று எவேன் எழுதுகிறார். புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது; அவர் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பி பாரிசுக்கு நடந்தே போவார், அங்கே புத்தகத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் நடந்து இரவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவார். இத்தனைக்கும் அவர் கிராமத்திலிருந்து பாரிஸ் பல டஜன் கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. கிராமவாசிகளைப் போல அவர் ஆரோக்கியமும் உடல் வலிமையும் கொண்டிருந்தார். இளம் வயதிலிருந்தே கீல்வாதம் அவரைத் துன்புறுத்திவந்தது என்பதை ஒதுக்கிவிட்டால் கடைசி வரையிலும் அவர் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கெனே தனக்குப் பதினேழு வயதாகும் பொழுது, அறுவை மருத்துவராக வேண்டுமென்று முடிவு செய்து உள்ளூர் மருத்துவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் உடலிலிருந்து இரத்தத்தை எடுப்பது தான் சர்வரோக நிவாரணியாக இருந்தது. அவரும் அதையே முக்கியமாகக் கற்றுக் கொண்டார். அவருக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் தீவிரமாக உழைத்துப் படித்தார். 1711 முதல் 1717 வரை அவர் பாரிசில் இருந்தார்; ஒரே சமயத்தில் உலோகத்தில் படம் செதுக்கும் கடையில் வேலை செய்து கொண்டும் மருத்துவ நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டுமிருந்தார். இருபத்து மூன்று வயதுக்குள்ளாகவே அவர் வேரூன்றிவிட்டார் என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைக்காரரின் மகளை அதிகமான சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

அறுவை மருத்துவர் தகுதிச் சான்றிதழ் பெற்றதும் பாரிசுக்கு அருகில் மான்ட் என்ற நகரத்தில் தொழில் செய்ய ஆரம்பித்தார். அவர் அங்கே பதினேழு வருடங்கள் இருந்தார்; அவருடைய திறமையும் உழைப்பும், நோயாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் அவர் கொண்டிருந்த விசேஷமான ஆற்றலும் அந்த மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவர் என்ற பெயர் அவருக்குக் கிடைக்குமாறு செய்தன. அவர் பிரசவம் பார்த்தார் (பிரசவ வைத்தியத்தில் அவர் குறிப்பிடக் கூடிய புகழடைந்திருந்தார்), இரத்தத்தை வெளியேற்றினார், பல் வைத்தியம் செய்தார்; அந்தக் கால நிலைமைகளை நினைக்கும் பொழுது சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகளையும் செய்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேன்மக்களும் படிப்படியாக அவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்தார்கள்; பாரிஸ் நகரத்தில் பிரபலமானவர்களோடு பழகினார்; மருத்துவத் துறையில் சில புத்தகங்களை வெளியிட்டார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்
♦ கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

1734-ம் வருடத்தில் கெனே – அவர் இப்பொழுது மனைவியை இழந்தவர், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனார் – மான்டை விட்டுப் போய் வில்லெருவா கோமகனின் குடும்ப மருத்துவரானார். அந்த நூற்றாண்டின் முப்பதுக்களிலும் நாற்பதுக்களிலும் அரசாங்கச் சட்டத்துக்கு எதிராக அறுவைச் சிகிச்சையாளர்கள் நடத்திவந்த போராட்டத்தில் அதிகத் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு பழைய சட்டத்தின் படி அறுவைச் சிகிச்சையாளர்கள் நாவிதர்களைப் போன்றவர்களே; எனவே அவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. “அறுவைச் சிகிச்சையாளர்கள் கட்சிக்கு” கெனே தலைவரானார்; இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தக் காலத்தில் அவர் தமது முக்கியமான இயற்கை விஞ்ஞானப் புத்தகத்தை எழுதினார். அது அடிப்படையான மருத்துவப் பிரச்சினைகளை, தத்துவத்துக்கும் மருத்துவ நடைமுறைக்கும் உள்ள உறவை, மருத்துவ ஒழுக்கம் முதலியனவற்றைப் பற்றி எழுதப்பட்டிருந்த மருத்துவத் தத்துவஞான ஆராய்ச்சி நூலாகும்.

1749-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டி கெனேயைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கோமகனிடம் “இரந்து” வாங்கிக் கொண்டாள். அது கெனேயின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சியாகும். வெர்சேய் அரண்மனையின் மாடியில் ஒரு பகுதியில் கெனே தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. அவர் இப்பொழுது பெரும் பணக்காரராகியிருந்தார்.

அவருடைய வாழ்க்கையிலும் பணிகளிலும் மருத்துவம் அதிகமான இடத்தைப் பெற்றிருந்தது. மருத்துவத்திலிருந்து தத்துவஞானம் என்ற பாலத்தின் வழியாக அரசியல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறினார். மனித அமைப்பும் சமூகமும். இரத்தத்தின் சுற்றோட்டம் அல்லது வளர்சிதை மாற்றமும் சமூகத்தில் ஒரு பொருள் செலாவணியாவதும். உயிரியல் தொடர்புடைய இந்த ஒத்த உறவு கெனேயின் சிந்தனையைக் கிளறிவிட்டதோடு இன்றைய நாள் வரையிலும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

வெர்சேய் அரண்மனை.

வெர்சேய் அரண்மனையின் மாடியின் ஒரு பகுதியிலிருந்த அறைகளில் கெனே இருபத்தைந்து வருடங்கள் வசித்தார். பதினைந்தாம் லுயீ மரணமடைந்தவுடன் புது அரசர் இறந்தவருடைய ஆட்சியின் ஒவ்வொரு எச்சத்தையும் அரண்மனையிலிருந்து அகற்றிய பொழுது அவரும் அரண்மனையை விட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது கெனேயின் மரணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தணிவாகவும் ஓரளவுக்கு இருட்டாகவும் இருந்த ஒரு பெரிய அறை, இதைத் தவிர சாமான்கள் வைத்திருக்கும் இரண்டு இருட்டறைகள் – இவை தான் அந்த அரண்மனையில் கெனேக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதி. எனினும் அந்த அறை வெகு சீக்கிரத்திலேயே “இலக்கியக் குடி யரசு” விரும்பிக்கூடும் அறையாக மாறியது.

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் “கலைக் களஞ்சியத்தைச்” சுற்றித் திரண்டிருந்த எழுத்தாளர்கள், அறிவாளிகள், தத்துவஞானிகள் அங்கே வழக்கமாகக் கூடினார்கள். டாக்டர் கெனே தன்னுடைய கருத்துக்களை முதலில் பத்திரிகைகளில் வெளியிடவில்லை, இந்த அறையில் கூடிய நெருக்கமான நண்பர்கள் மத்தியில் தான் வெளியிட்டார். அங்கே அவரோடு ஒத்த கருத்துடையவர்களும் மாணவர்களும் மட்டுமல்லாமல், எதிர்க் கருத்துடையவர்களும் வருவது வழக்கம். கெனேயின் இருப்பிடத்தில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றிய தத்ரூபமான வர்ணனையை மார்மன்டெல் எழுதியிருக்கிறார்:

“அந்த மாடி அறைக்குள் புயல் மேகங்கள் திரண்டு வரும்; கலைந்துபோகும். அந்த நேரத்தில் கெனே விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றித் தனது கருதுகோள்களையும் கணக்குகளையும் தயாரித்துக் கொண்டிருப்பார். அரசவையின் நடவடிக்கைகளிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் தள்ளியிருப்பவரைப் போல அவர் அமைதியோடும் அலட்சியத்தோடும் நடந்து கொள்வார். கீழே அரசவைப் பிரமுகர்கள் யுத்தம், சமாதானம், தளபதிகளை நியமித்தல், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களை முடிவு செய்து கொண்டிருப்பார்கள்; ஆனால் அவருடைய அறையில் நாங்கள் விவசாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம், நிகர உற்பத்தியை மதிப்பிடுவோம் அல்லது சில சமயங்களில் டிட்ரோ , ட அலம்பேர், டுக்ளோ, ஹெல்வெடிய ஸ், டியுர்கோ, புஃபான் ஆகியோரோடு ஆனந்தமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம். இவ்வளவு தத்துவஞானிகளையும் தன்னுடைய வரவேற்பு அறைக்குள் ஈர்க்க முடியாமற்போன பாம்பதூர் சீமாட்டி தானே அங்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியடைவாள்.”  (1)

பிற்காலத்தில் கெனேயின் குழு அங்கே கூடிய காலத்தில் அந்தக் கூட்டங்களின் தன்மை சற்று மாறியிருந்தது. அங்கே அமர்ந்திருப்பவர்கள் பிரதானமாக கெனேயின் மாணவர்களாக, அவரைப் பின்பற்றுவோராக இருந்தனர் அல்லது ஆசானுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகக் கூட்டிக் கொண்டு வரப்பட்ட நபர்களாக இருந்தனர். 1766-ம் வருடத்தில் ஆடம்ஸ்மித் இங்கே வந்து சில மாலைப் பொழுதுகளைக் கழித்தார்.

கெனே எப்படிப்பட்டவர்?

அவருடைய சமகாலத்தவர்கள் எழுதியுள்ள அநேகமாக ஒன்றுக்கொன்று முரண்படுகிற வர்ணனைகளிலிருந்து சூழ்ச்சியான ஒரு அறிவாளியைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர் தன்னுடைய ஆழமான அறிவை எளிமையான தோற்றத்திலே மறைத்துக் கொண்டார்; பலர் அவரை சாக்ரடிசோடு ஒப்பிட்டனர். அவர் எளிதில் புலப்படாத ஆழமான உட்பொருளைக் கொண்ட உருவகக் கதைகளை விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் அதிகமான எளிமையுடையவர்; தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்; தன்னுடைய கருத்துக்களைத் தன் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்கள் என வெளியிட்டு கௌரவமடைவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

அவருடைய தோற்றம் சாதாரணமாக இருந்ததனால் அந்த அறைக்கு முதன் முறையாக வருபவர்கள் அங்கே விருந்தளித்து விவாதங்களுக்குத் தலைமை வகிப்பவர் யார் என்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. அவரோடு பேசிய மிராபோ பிரபுவின் சகோதரர் “பேய்த்தனமான அறிவுடையவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார். அவர் கூறிய கதையைக் கேட்ட அரசவைப் பிரமுகர் ஒருவர் ”குரங்கைப் போலத் தந்திரமானவர்” என்று அவரைப் பற்றி அபிப்பிராயம் கூறினார். 1767-ம் வருடத்தில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தில் ஒரு அவலட்சணமான சாதாரண முகத்தைக் காண்கிறோம்; அந்த முகத்தில் உலகத்தைப் பார்த்து ஏளனமான புன்சிரிப்பு தவழ்கிறது; கண்கள் அறிவுக் கூர்மையோடு ஊடுருவிப் பார்க்கின்றன.

கெனே “அரண்மனையில் வாழ்ந்தாலும் தத்துவஞானி; அவர் படிப்பதிலும் தனிமையிலும் பொழுதைக் கழித்தார்; அங்கே பேசப்படுகின்ற மொழியை (2)  அவர் அறியார், அதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சிறிதளவு கூட முயற்சி செய்ததில்லை, ஏனென்றால் அங்கே இருந்தவர்களோடு அவருக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது; அவர் எவ்வளவு அதிகமான அறிவு கொண்ட நீதிபதியாக இருந்தாரோ அந்த அளவுக்குப் பாரபட்சம் இல்லாத நீதிபதியாகவும் இருந்தார்; அரண்மனையில் அவர் பார்த்தவையும் கேட்டவையும் அவரைச் சிறிது கூட பாதிக்காதபடி இருந்தார்” (3) 

அரசர் மீதும் சீமாட்டி பாம்பதூர் மீதும் அவருக்கு இருந்த செல்வாக்கை, இப்பொழுது அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரியங்களின் நன்மைக்காகப் பயன்படுத்தினார். அவரும் டியுர்கோவும் சேர்ந்து செய்த முயற்சிகளின் பலனாகச் சட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னோடு ஒத்த கருத்துடைய நண்பர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்; லெமெர்ஸியேவை ஒரு முக்கியமான பதவியில் நியமிக்குமாறு செய்தார், அந்தப் பதவியிலிருக்கும் பொழுது தான் லெமெர்ஸியே முதல் தடவையாக பிஸியோகிராட் பரிசோதனையைச் செய்ய முயன்றார். 1764-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டியின் மரணம் இந்தப் பொருளியலாளர்களின் நிலையை ஓரளவுக்கு பலவீனப்படுத்தியது; ஆனால் கெனே அரசரின் சொந்த மருத்துவராக நீடித்தார், அரசரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Oeuvres completes de Marmontel, t. I, Paris, 1818, pp. 291-92.

(2) அரண்மனைகளில் வழக்கமாக நடைபெறும் சூழ்ச்சி களும் வம்புப் பேச்சும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. 1, p. 240.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983